PUBLISHED ON : பிப் 02, 2026 01:27 AM

திருமாவுக்கு தகுதி உள்ளதா?
கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாசாரம் அழிவதற்கும் காரணமாக இருந்தவர்கள்; வடமொழியில் மயங்கி கிடந்தவர்கள். அவர்களது பெயரே தமிழ் இல்லை' என்று கூறியுள்ளார், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
அருள்மொழி வர்மன் என்பது தான், பெற்றோர் அவருக்கு வைத்த பெயர். அவருக்கு வழங்கப்பட்ட, 42 சிறப்பு பெயர்களில் ஒன்று தான், 'ராஜராஜன்' என்பது கூட தெரியாத திருமாவளவன், ராஜராஜன், ராஜேந்திரன் என்பது தமிழ் பெயர்கள் இல்லை என்கிறார்.
தொல்காப்பியர் யார், அவரது சனாதன தர்மம் எது என்று தெரியாத இந்த தமிழ், 'மேதை' ராமசாமி என்ற தன் தந்தையின் பெயரை தொல்காப்பியன் என்று மாற்றினார்.
தான் இயற்றிய தொல்காப்பிய இலக்கண நுாலை, நால்வகை வேதமும் கற்றவர் முன் தான் அரங்கேற்றுவேன் என்று சொல்லி அதன்படி செய்தவர், தொல்காப்பியர்.
அதுமட்டுமல்ல... தமிழ் எழுத்து பிறக்கும் இடம் குறித்து, 'தலை, மிடர், நெஞ்சு, பல், உதடு, நாக்கு, மூக்கு, அண்ணம் என்று இந்த எட்டு உறுப்புகள் மட்டுமின்றி, மூலாதாரமான அடிவயிற்றில் இருந்தும் எழுத்தொலி பிறப்பதுண்டு. இதை, அந்தணர் வேதத்தில் காணலாம்' என்றார் தொல்காப்பியர். அதனால், இனி தொல்காப்பியரையும் சமஸ்கிருத அடிமை என்று கூறலாமா?
இந்த தொல்காப்பியருக்கே அண்ணன் யார் என்று கேட்டால், இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழுக்கும் இலக்கணம் எழுதிய அகஸ்திய முனிவர்.
அகஸ்தியர் என்பது கூட தமிழ் பெயர் அல்ல; சுத்தமான சமஸ்கிருத பெயர்.
அதனால், இனி, அகஸ்தியரும் சமஸ்கிருத அடிமை; தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் அழித்தவர் என்று கூறினாலும் கூறுவார், இந்த தமிழ் பண்டிதர்!
நாக்கு செத்தவனுக்கு குப்பையில் கிடக்கும் புளியம்பழத்தைக் கண்டால் கூட நா ஊறுமாம். அதுபோல், தமிழில் பிழையில்லாமல் நான்கு திருக்குறள் கூட கூறத் தெரியாத இவர், ராஜராஜ சோழனின் தமிழ் பற்று குறித்து பேசுகிறார்!
ராஜராஜ சோழன், தமிழின் தொன்மையையும், மேன்மையையும், அதன் தெய்வீகத்தையும் உணர்த்தும் மூவர் தேவாரத்தை உலகிற்கு வெளிக் கொண்டு வந்தவர்; பக்தியுடன், தமிழ் பித்தையும், தான் எழுப்பிய கோவிலில் காட்டியவர்.
தஞ்சை பெரிய கோவிலில், தமிழின் மெய் எழுத்தான 18ஐ, சிவலிங்கத்தின் ஆவுடையாரை 18 அடி உயரமாகவும், உயிர் எழுத்தான, 12ஐ லிங்கத்தின் 12 அடி உயரமாகவும் எழுப்பி, 'உடலுக்குள் உறைந்திருக்கும் ஜீவனே சிவன்' என்று ஆன்மிகம், அறிவியலுக்குள் தன் மொழிப் பற்றையும் காட்டியவன்.
அதுமட்டுமல்ல; உயர்மெய் எழுத்துக்கள் 216ஐ குறிக்கும் விதமாக, கோபுரத்தின் உயரத்தை, 216 அடியிலும், மொத்தமுள்ள தமிழ் எழுத்துக்கள் 247ஐ, சிவலிங்கத்திற்கும், நந்திக்கும் இடையே, 247 அடியாக அமைத்து, தன் தமிழ் பற்றை, உலகிற்கே பறை சாற்றியவன், ராஜராஜ சோழன்.
அவன் பெயரை உச்சரிப்பதற்கு கூட ஒரு தகுதி வேண்டும்; ஓட்டுக்காக அன்னிய சக்திகளுக்கு அடிவருடிக் கொண்டிருக்கும் திருமாவளவனுக்கு, அந்த தகுதி இருக்கிறதா என்று தன் மனச்சாட்சியை தொட்டுப் பார்த்து சொல்லட்டும்!
நீதிமன்றத்தின் உத்தரவிற்கு கட்டுப்படுவரா? ஜெ.ஜெரால்டு மனோகர், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கேரளாவில், திருவனந்தபுரம் மாநகராட்சியை முதன் முறையாக பா.ஜ., கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் , கேரளா வந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்காக, விதிகளை மீறி பேனர் வைத்த, பா.ஜ., மாவட்ட தலைமைக்கு, 19.7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார், திருவனந்தபுரம், பா.ஜ., மேயர் ராஜேஷ்.
கேரளாவில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்க கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதேநேரம், என்ன தான் நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும், ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டால், தாங்கள் எவருக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்பது போல், அரசியல்வாதிகள் நீதிபதிகளின் உத்தரவிற்கு செவிசாய்ப்பதில்லை.
அதற்கு மிகச்சிறந்த உதாரணம் திராவிட மாடல் ஆட்சியாளர்கள். பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்கள், பேனர்களை அகற்றச் சொல்லி உயர் நீதிமன்றம் பலமுறை கூறிவிட்டது. அதற்கு கட்டுப் படாததுடன், அதை எதிர்த்து மேல்முறையீடும் செய்கின்றனர்; நன்றாக இருக்கும் சாலையை தோண்டி, கொடி கம்பங்களை நடுகின்றனர்.
ஆனால், திருவனந்தபுரம் மேயரோ, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தன் சொந்த கட்சிக்காரர்கள் மீதே நடவடிக்கை எடுத்துள்ளார். இது, அங் குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜனநாயக நாட்டில் நீ திமன்றத்தின் உத்தரவிற்கு எப்படி கட்டுப்பட வேண்டும் என்பதை, திருவனந்தபுரம் மேயரைப் பார்த்து, திராவிட மாடல் ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!
பகல் கனவு காணும் தி.மு.க.,! பி.ஜாகீர் உசேன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசுடன் இணக்கம் இல்லாமல் எப்போதும் குறை சொல்லி, தன் நிர்வாக திறன் இன்மையை மூடி மறைத்து, பா.ஜ.,வால் ஏதோ அச்சுறுத்துதல் இருப்பது போன்று வார்த்தை ஜாலங்கள் செய்து, சிறுபான்மை மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது, தி.மு.க.,
கடந்த 2021 தேர்தலில் பா.ஜ.,வை காட்டி பயமுறுத்தி இஸ்லாமியர், கிறிஸ்துவர்களின், 85 சதவீத ஓட்டுகளை அறுவடை செய்து, ஆட்சியை பிடித்தது போன்று, தற்போதும் ஓட்டுகளை பெற நினைக்கிறது. ஆனால், இம்முறை மக்களை ஏமாற்ற முடியாது.
ஏனென்றால், தி.மு.க.,வின் அனைத்து அரசியல் தில்லுமுல்லுகளையும், இந்த நான்கரை ஆண்டுகளில் சிறுபான்மை மக்கள் நன்றாகவே உணர்ந்து விட்டனர்.
மேலும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, போதை பொருட்களின் புழக்கத்தால் நிகழும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள்... அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்வு.
கூடவே, சொத்து வரி, மின்கட்டண உயர்வு, பத்திரபதிவு கட்டண உயர்வு என்று, நடுத்தர மக்களின் வாழ்வில் கடும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, தி.மு.க., அரசு.
இப்படி, அனைத்து வழிகளிலும் மக்களின் அன்றாட வாழ்வை நசுக்கிவிட்டு, பண பலத்தாலும், பிரிவினைவாத அரசியலாலும் வெற்றி பெறலாம் என, தி.மு.க., கனவு கண்டால், அது பகல் கனவே!

