PUBLISHED ON : பிப் 08, 2026 01:57 AM

யோகியின் தைரியம் இருக்கிறதா?
வீ.மரகதம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு ஊழியர்கள் தங்கள் அசையும், அசையா சொத்துக்களின் விபரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என, கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்திருந்தது, உ.பி., அரசு.
இந்நிலையில், கொடுத்த காலக்கெடுவிற்குள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத, 68,000 பணியாளர்களின் ஜனவரி மாதத்திற்கான ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளது, அரசு.
இதேநிலை தொடருமானால், பிப்ரவரி மாத சம்பளமும் கிடைக்காது என்று அறிவித்துள்ளார், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். இதுபோன்ற ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றால், அந்த அரசுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?
அரசு ஊழியர்களின் ஓட்டு கிடைக்காமல் போய் விடுமே, தேர்தலில் நமக்கு சாதகமாக வேலை செய்ய மாட்டார்களே என்றெல்லாம் பயம் கொள்ளாமல், ஊழலற்ற நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக, இதுபோன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார், முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இதுபோன்று முடிவு எடுக்க தமிழகம் உட்பட பிற மாநில முதல்வர்களால் முடியுமா, இல்லை அதற்கு தைரியம் தான் அவர்களுக்கு உள்ளதா?
சிதம்பரம் தீட்சிதர்கள் கவனத்திற்கு! எஸ்.வைத்தியநாதன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: அண் மையில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றிருந்தேன். கோவிலில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை; அவரவர் இஷ்டத்திற்கு செயல்படுகின்றனர். குறிப்பாக, சன்னிதியில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த எந்த ஏற்பாடுகளும் இல்லை.
கனகசபை ஏறுவதற்கு பக்தர்கள் ஒருபுறம் வரிசையில் நிற்க, தீட்சிதர்களோ, தங்களுக்கு வேண்டியவர்களை தனியே அழைத்துச் சென்றது வருத்தமாக இருந்தது.
மேலும், கனகசபை இருளில் மூழ்கியுள்ளது. 'பார்த்தவர்கள் விலகி செல்லுங்கள்' என தீட்சிதர்கள் கூறுவதை, எவரும் கேட்பதாக இல்லை. இதில், 'போக முடியாது' என சிலர் எதிர்த்து வாதிடுவதையும் பார்க்க முடிந்தது.
இதுவே, அறநிலையத்துறை கோவில் என்றால், பிடறியை பிடித்து பணியாளர்கள் வெளியில் தள்ளியிருப்பர்; அதையே தீட்சிதர்கள் செய்தால், அது பெரிய பிரச்னையாகிவிடும் என்பதால் அவர்கள் மவுனம் காக்கின்றனர்.
அதேநேரம், தீட்சிதர்கள் தரப்பிலும் சில தவறுகள் உள்ளன.
நடராஜர் சன்னிதியில் ஒரே நேரத்தில், ஆறு அர்ச்சகர்கள் நிற்கின்றனர். தமக்கு வேண்டியவர்களுக்கு அர்ச்சனை செய் து, அதை கனகசபையில் வைத்து கொடுக்கின்றனர்.
இதனால், கூட்டம் தேங்கி நிற்கிறது. காற்றோட்டமும், வெளிச்சமும் இல்லாத அவ்விடத்தில் எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என மனம் பதைபதைக்கிறது.
அப்படி ஏதாவது நடக்க வேண்டும் என்பது தான் அரசின் விருப்பமும். அப்போதுதானே அதையே காரணம் காட்டி, மீண்டும் கோவிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம்!
இது புரியாத தீட்சிதர்கள், அதற்கு தீனி போடுவதுபோல் நடக்கின்றனர்.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யாமல், இதுபோன்ற பிரச்னைகளை களைய தீட்சிதர்கள் முன்வர வேண்டும்.
அதற்கு, சுவாமி தரிசனத்தை முறைப்படுத்தி, எல்லா கோவில்களிலும் இருப்பது போன்று சன்னிதிக்குள் ஒருவர் அல்லது இரு அர்ச்சகர்கள் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.
காணிக்கை பெறுவது,பங்கிடுவது தான் பிரச்னை என்றால், அதை மொத்தமாக வைத்து பிரித்துக் கொள்ளலாம்.
அர்ச்சகர் சன்னிதிக்கு பலருக்கும் 'முறை' வருகிறது என்றால், ஒருவருக்கு அரை மணி நேரம் என்ற கணக்கில் பிரித்துக் கொண்டும், விசேஷ நாட்களில் பணி நேரத்தில் மாற்றம் செய்து, அனைவருக்கும் பாதிப்பின்றி வருமானம் இருக்க வழி செய்யலாம்.
கனகசபைக்கு செல்ல ஒரு வழி, வெளியேற ஒரு வழி என வைத்தால் பக்தர்கள் சிரமமின்றி, சுவாமி தரிசனம் செய்து, வெளியேறுவர். அதேபோன்று, நடராஜ பெருமாளை தடையின்றிதரிசிக்க வழி செய்யவேண்டும்.
விசேஷ காலங்களில் கூட்டத்தை வரிசைப்படுத்த போலீசின் உதவியை நாடலாம்.
தீட்சிதர்களே... கடவுளை வணங்க வந்த பக்தர்கள் திருப்தியாக செல்ல வேண்டும். பணம் இருப்பவர்களுக்கு ஒரு வழி, ஏழைக்கு ஒரு வழி என, பக்தனை அதிருப்தியுடன் வெளியே அனுப்பாதீர்கள்!
துாங்குகிறவன் தொடையில் கயிறு திரிக்கும் தி.மு.க.,! என்.சோமசுந்தரம், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மொழிப் போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோர் உருவப்படங்களுக்கு, சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் அமைந்துள்ள தாளமுத்து -- நடராசன் மாளிகையில், மலர் துாவி அஞ்சலி செலுத்திய தோடு, அவர்கள் இருவரின் மணிமண்டபத்துக்கும் சென்று வழிபட்டு வீர உரை நிகழ்த்தியுள்ளார், திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின்.
இதில் வேடிக்கை என்னவென்றால், தி.மு.க., துவங்கப்பட்டதே, 1949ல் தான்!
தாளமுத்துவும், நடராசனும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, தியாகிகளாக மாறியது, 1937 - -1939 கால கட்டத்தில்!
கழகம் துவங்கப்படுவதற்கு, 10 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தவர்களை, ஏதோ தி.மு.க., நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்கள் போன்று காட்டி, ஆதாயம் தேடிக்கொள்ள நினைக்கிறார், ஸ்டாலின்.
இதில், அண்ணாதுரை, கருணாநிதி போன்ற போராளிகள் பரம்பரையில் வந்தவர்களாம் தி.மு.க.,வினர்!
'அடைந்தால் திராவிடநாடு; இல்லையேல் சுடுகாடு' என முழங்கி கொண்டிருந்த அண்ணாதுரை, 'பிரிவினை வாதம் பேசினால், தேசத்துரோக வழக்கு பதியப்படும்' என்று பிரதமர் நேரு பார்லிமென்டில் அறிவித்த அடுத்த நிமிடமே, அந்த திராவிட நாடு கோரிக்கையை குழி தோண்டி புதைத்த அண்ணாதுரை, ஒரு போராளி; சர்க்காரியா கமிஷன் வழக்கிலிருந்து விடுதலை அடைய, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க கையொப்பமிட்டு கொடுத்த, கருணாநிதி ஒரு போராளியாம்!
'தட்டிக்கேட்க ஆளில்லை என்றால், தம்பி சண்டப்பிரசண்டன் ஆவான்' என்ற சொலவடைக்கு, கழகத்தின் ஒவ்வொரு அசைவும், எவ்வாறு கட்டியம் கூறுகிறது பாருங்கள்!
தமிழர்கள் இன்னும் துாங்கிக் கொண்டே இருந்தால், 'துாங்குகிறவன் தொடையில், திரித்த வரை கயிறு, என்பது போன்று, 1937- - 39ல் மரணமடைந்தவர்களின் சடலத்தை, 10 ஆண்டுகளுக்கு பின் தோண்டி எடுத்து, ஒப்பாரி வைக்கத்தானே செய்வர்!

