PUBLISHED ON : பிப் 09, 2026 02:24 AM

தண்டனை அவசியம்!
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் முதல், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவி அதிகாரிகள் வரை, தங்கள் கடமையை சுதந்திரமாக செய்ய, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
அதனால் தான், ஒரு சிலராவது ஆட்சியாளர்களிடம் விலை போகாமல், தங்கள் கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.
இப்பதவிகளில் உள்ளவர்கள், எப்போது ஆட்சியாளர்களின் அடிவருடிகளாக மாறினரோ, அப்போதே இவர்களின் செயல்பாடுகளும் கேள்விக் குறியாகி விட்டது.
அதற்கு சமீபத்திய உதாரணம், திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத, மதுரை கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் போன்றோர்!
இதற்கு காரணம், தி.மு.க.,!
அக்கட்சி எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது எல்லாம் தங்களுக்கு வேண்டிய, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேடிப் பிடித்து, முக்கிய பதவிகளை வழங்கி, தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொள்கின்றனர்.
அவ்வகையில், சிறுபான்மையினர் ஓட்டுகளை பெற, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரத்தில் அதிகாரிகளை வைத்து சதிராட்டம் ஆடியது, தி.மு.க., அரசு.
மேலும், இஸ்லாமியர்களுக்கு தாங்களே பாதுகாப்பு என்பது போல், இவ்வழக்கை மேல்முறையீடு செய்து, உச்ச நீதிமன்றத்தில் குட்டுபட்டுள்ளது. தற்போது, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் அடி வாங்கியுள்ளது, தி.மு.க., அரசு.
இந்நிலையில், வழக்கில் இருந்து தப்பிக்க, நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்த கலெக்டர், போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் மற்றும் கோவில் செயல் அலுவலர் போன்றோர், பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளனர்.
சரி... நீதிமன்றம் இவர்களை மன்னித்து விட்டது என்றே வைத்துக் கொள்வோம்... ஆனால், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் விட்டதால், மதுரையைச் சேர்ந்த வாலிபர் பூரணசந்திரன் தற்கொலை செய்து கொண்டாரே... அவரது உயிரை இவர்களால் திருப்பி தர முடியுமா?
அன்று, 10 பேரை தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதித்து இருந்தால், ஓர் உயிர் பறிபோய் இருக்காது. மதுரை மக்கள் பல நாட்களாக தங்கள் வேலைகளை விட்டு போராடியிருக்க மாட்டார்கள். நாடு முழுதும் உள்ள முருக பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்க மாட்டார்களே!
அதிகாரமற்ற மக்கள் தங்களுக்கான நீதியை வேண்டி நிற்கும் இடம் நீதிமன்றம்; அத்தகைய நீதிமன்றம் ஒரு விஷயத்தை ஆய்ந்து அறிந்து தீர்ப்பு சொன்னால், அதை செயல்படுத்த மறுத்து, மேல் முறையீடும் செய்து விட்டு, இப்போது மன்னிப்பு கேட்டால், அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா?
அறியாமல் செய்வதற்கு மன்னிப்பு வழங்கலாம்; திட்டமிட்டு செய்த காரியத்திற்கு மன்னிப்பு வழங்குதல் என்பது, மீண்டும் குற்றம் செய்ய ஊக்கம் கொடுத்தது போல் ஆகிவிடும்.
எனவே, நீதிமன்றம் இந்த அதிகாரிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. இவர்களுக்கு தண்டனை வழங்கினால் தான், இனி எந்தவொரு அரசு அதிகாரியும், நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்ய தயங்குவர்!
பட்ஜெட் உரைப்பது என்ன? முனைவர் செ.அ.ராகுல் கோல்டன், உதவி பேராசிரியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பட்ஜெட் என்பது, அரசின் வரவு - செலவு கணக்கு மட்டுமல்ல; அது, எதை முன்னிலைப்படுத்துகிறது என்பதைக் காட்டும் அரசியல் ஆவணம்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டும் அதற்கு விதிவிலக்கல்ல!
உரையில் வளர்ச்சி, எதிர்காலம், தொழில்நுட்பம், முதலீடு என்ற வார்த்தைகள் அடிக்கடி ஒலித்தாலும், அதில், எளிய மக்களுக்கான குரல், எவ்வளவு துாரம் ஒலித்தது என்பதே கேள்வி!
சாலைகள், ரயில்கள், நகர வளர்ச்சி, தொழில்நுட்ப கட்டமைப்பு ஆகியவற்றில் பெரும் முதலீடு செய்வதன் வாயிலாக, பொருளாதாரம் வேகமெடுக்கும் என அரசு நம்புகிறது.
ஆனால், இவ்வளர்ச்சி யாருக்கானது என்ற கேள்விக்கு பட்ஜெட்டில் தெளிவான பதில் இல்லை.
வேலை இழந்த இளைஞர், விவசாயக் கடனில் சிக்கிய விவசாயி, விலைவாசி உயர்வால் திணறும் நடுத்தர வர்க்க குடும்பம் ஆகியோரின் அன்றாட வாழ்க்கையில், இந்த முதலீடுகள் எப்போது, எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் சொல்லப்படவில்லை.
இப்பட்ஜெட்டின் மற்றொரு முக்கிய அம்சம் தொழில்நுட்பம். செமிகண்டக்டர், டிஜிட்டல் கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகள், எதிர்கால இந்தியாவின் அடையாளங்களாக வர்ணிக்கப்படுகின்றன.
இதன் வாயிலாக, அடிப்படை வசதி கூட இல்லாத கிராமப்புற மாணவர்கள், விவசாயிகள், சிறு தொழிலாளர்கள் பயனாளிகளாக மாறுவரா அல்லது பார்வையாளர்களாக மட்டுமே இருந்து விடுவரா என்பதற்கான பதிலும் இல்லை.
வரி சீர்திருத்தம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் மாற்றங்களும், பொதுமக்களுக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை.
பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும், வரிவிலக்குகளும் தொடரும் நிலையில், நடுத்தர மற்றும் குறைந்த வருமானக் குழுக்களுக்கு நேரடியான நிவாரணங்கள் குறைவாகவே உள்ளன.
இந்த பட்ஜெட்டின் மிக முக்கியமான அம்சம், மாநிலங்களின் நிலை. மத்திய அரசு திட்டங்களை வடிவமைக்கிறது, நிதியை கட்டுப்படுத்துகிறது; ஆனால், செயல்படுத்தும் பொறுப்பை மாநிலங்களிடம் தள்ளுகிறது.
இதனால், மாநிலங்களின் நிதி சுயாதீனம் சுருங்கி, மத்திய அரசின் கட்டுப்பாடு அதிகரிக்கும் சூழல் உருவாகிறது.
மேலும், பெண்கள், விளிம்புநிலை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோருக் கான அறிவிப்புகள் குறுகிய இடத்திலேயே முடிவடைகின்றன.
இப்பட்ஜெட், வளர்ச்சியின் கனவுகளை முன்வைக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவை சாதாரண மக்களின் வாழ்க்கையில் நிஜமாவது குறித்து தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
வளர்ச்சி என்பது உயரமான கட்டடங்களில் மட்டுமல்ல; மக்களின் வாழ்க்கை தரத்தில், அவர்களின் பாதுகாப்பில், எதிர்கால நம்பிக்கையில் பிரதிபலிக்க வேண்டும். இல்லையெனில், இந்த பட்ஜெட்டும் பல முந்தைய பட்ஜெட்டுகளைப் போல, அரசியல் உரைகளின் தொகுப்பாக மட்டுமே வரலாற்றில் பதிவு செய்யப்படும்!

