PUBLISHED ON : பிப் 10, 2026 03:03 AM

அரசியல் ஞானசூனியமாக இருக்கலாமா?
சு.மனோகரன், குன்னுார், நீலகிரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கி.பி., ஒன்பதாம் நுாற்றாண்டில் சோழர் காலத்திலேயே, தகுதியுடைய பண்பாளர்களை கிராம நிர்வாகத்திற்காக குடவோலை முறையில் தேர்ந்தெடுத்த பெருமை உடையவர்கள் தமிழர்கள். ஆனால், இன்றோ ஊழல்வாதிகள் என்று தெரிந்தும், இலவசத்திற்கு மயங்கி, பணம் பெற்றுக் கொண்டு ஓட்டளிக்கின்றனர்.
தமிழர்களின் இந்த அவலநிலைக்கு திராவிட கட்சிகளே காரணம்!
கடந்த, 1967க்கு பின் ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை என, மாறி மாறி தமிழகத்தை குத்தகைக்கு எடுத்து, கொள்ளை அடித்து வருகின்றன.
'மக்களுக்கு நல்லாட்சி தருகிறோம்; மக்களை முன்னேற்றும் திட்டங்கள் தருவோம்' என்கின்றனர். மக்களை முன்னேற்ற நினைப்போர் ஓட்டுக்கு ஏன் பணம், பொருள் கொடுக்க வேண்டும்?
இவர்கள் ஆட்சிக்கு வருவதே கொள்ளை அடிக்கத்தான்!
ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், அமைச்சருக்கு, மாவட்ட செயலருக்கு, ஒன்றிய செயலருக்கு, கான்ட்ராக்டருக்கு என திட்டத்திற்கான பணம் பங்கிடப்படுகிறதே தவிர, திட்டங்கள் முறையாக செயல்படுத்தப் படுவதில்லை.
விளைவு, பள்ளிகள் முதல் மருத்துவமனை, அரசு கட்டடங்கள் என அனைத்தும் தரமற்றவையாக உருவாகின்றன.
அப்படி சுருட்டி வைத்த நிதியில் சிறிது எடுத்து, தேர்தலின் போது, ஓட்டுக்கு பணமாக கொடுக்கின்றனர்.
மக்களும் அது தங்கள் பணம் என்ற எண்ணம் இல்லாமல், கைநீட்டி வாங்கி விட்டோமே என நினைத்து, ஓட்டு போட்டு, ஊழல்வாதிகளிடம் ஆட்சியை ஒப்படைக்கின்றனர்.
மக்களை எத்தனை துாரம் அடிமுட்டாள்களாக நினைத்திருந்தால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தேர்தலின் போது புது வாக்குறுதிகளை கூறிக் கொண்டு ஓட்டுக் கேட்க வருவர்?
ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சும்; ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சும் என்று நாடகம் ஆடுவர்?
இந்த நாடகதாரிகளுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த தேர்தல் வியாபாரிகள் இனியும் தமிழகத்தை கொள்ளையடிக்க இடம் கொடாமல், நல்லவர்கள் யார், மக்களுக்கு நன்மை செய்பவர் யார் என்று சீர்துாக்கி பார்த்து ஓட்டளிக்க வேண்டும்.
இல்லையெனில் எதிர்காலம் என்பதே இருண்ட காலமாக போய்விடும்.
இனியும் அரசியல் ஞானசூனியங்களாக மக்கள் இருக்கலாமா?
படா பேஜாராகீதுபா! ரா.ஷண்முகசுந்தரம், அவிநாசி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஏம்பா கமலகாசா... இன்னைக்கி டில்லில நீ பேசின பேச்சு கேட்டுட்டு, சரக்கு போடாமலே தல கிர்ருனு சுத்திருச்சுப்பா... ஏதோ பிச்சை எடுக்கணும்றே... தமிளன் பிச்சக்காரன்றே... யாரோ தெலுங்கு இசை மேத பிச்சை எடுத்தான்றே... தங்கச்சின்ற, அக்கான்ற... நீ பேசுனத புரிஞ்சுக்கவ படா பேஜாரா பூட்ச்சுப்பா...
நீ பேச ஆரம்பிச்சதும் நம்ம தமிழ் ஆளு துணை சனாதிபதி முகத்தை கவனிச்சியா? வேப்பெண்ணை குடிச்ச சின்னப்புள்ளையாட்டம் முகத்தை வச்சுருந்தாருப்பா... பார்க்கவே பாவமா இருந்துச்சு.
அதுசரி... நீ யாருக்கொசரம் பேசின? ஓம் பேச்சால எங்கள மாதிரி ஏள சனங்களுக்கு ஏதாவது தம்பிடி பிரயோசனம் இருக்குதான்னு சொல்லு...
அப்புறம், நீ துாக்கி வச்சு கொண்டாடுற ஈ.வெ.ராமசாமி தானப்பா 'தமிழ் பிச்சை எடுக்கக் கூட உதவாது'ன்னு சொன்னது... நீ என்னமோ நிதியமைச்சரு சொன்னது போல பேசுறேயேப்பா...
சொன்ன ஈ.வெ.ராமசாமிய தந்தை பெரியாருங்கிற... அவர் இப்படி சொன்னாருன்னு சொன்ன நிதியமைச்சருகிட்ட வீர வசனம் பேசறே... என்னப்பா உன்னோட பெரிய பேஜாராகீது!
'திருடன ராஜ முழி முழிக்கச் சொன்னா எப்படி முழிப்பான்'ங்கிற மாதிரி, முன்னாளு முதல்வரு கருணாநிதி மகன் ஸ்டாலினோட கைய கால புடிச்சு எம்.பி., ஆனாலும், நீ இன்னும் நடிகனாத்தான்ப்பா இருக்கே!
அதனால, நீ நல்லது செய்யலனாலும் பரவாயில்லப்பா; தயவு செஞ்சு இனிமே பார்லிமென்ட்ல பேசாத!
மத்த தி.மு.க., - எம்.பி.,க்கள மாதிரி நீயும் சும்மா ஜாலியா டில்லி போ, நல்லா சாப்பிடு, ராஜ்பாத்ல சுத்து, போட்டோ எடு, குளுகுளு பார்லிமென்ட்ல குந்து... முடிஞ்சதும் திரும்ப வந்தமான்னு இரு!
அதான்பா தேசத்துக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது. இல்ல பேசியே தீருவேன்னு அடம்புடிச்சா, பேசாம தமிழ்ல ஒரு மொழிபெயர்ப்பாளர அப்பாய்மென்ட் பண்ணிப்புடுப்பா... உனக்கு புண்ணியமா போவும்!
இயற்கையை பாதுகாக்க இனியாவது சிந்திப்போம்! மீனா வெங்கடேஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மழை யும், வெயிலும், கடலும், காற்றும் மக்களின் சேவைக்காக காத்திருக்கின்றன. இயற்கையும் அப்படித்தானே!
மழை கொடுத்து, மரத்தை வளர்த்துக் கொடுத்து, பூமியை குளிர்ச்சியுடன் வைத்து, நம்மை வாழத் தான் வழி சொல்லியது.
ஆனால், மானிடனோ இருக்கும் இடத்தை விட்டு, இயற்கையின் இடத்தைப் பிடித்தால் அதற்கு கோபம் வரத்தானே செய்யும். கனரக வாகனங்கள், தொழிற்சாலைகள் அதிகமானதால், காற்றும், நீரும் மாசுபட்டு விட்டது.
சுவாசிக்கும் காற்று மட்டும் தான், இயற்கையிடம் இருந்து, தாராளமாக மனிதனுக்கு கிடைத்தது. இன்று அதுவும் கேள்விக்குறியாகி விட்டது.
வெப்பம் அதிகமானால், அதைக் குறைக்க நாம் ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறோமா? மேலும் மேலும் செயற்கையாக வெப்பத்தை அதிகரித்து சுற்றுச்சூழலை நாமே கெடுத்துக் கொள்கிறோம்.
கதிரவன், தன் வேலையை தினமும் செய்தால் தான், பயிர்கள், மரம், செடி, கொடி, காய், இலை, கனி என எல்லாம் செழித்து வளரும். ஆனால், நம்மைக் காப்பாற்ற, அதே கதிரவன் மரங்களை ஓங்கி வளரச் செய்து, அவற்றில் இளைப்பாற நமக்கு உதவுகிறான்.
அத்தகைய மரங்களை வேகமாக அழிக்கும் நாம், மீண்டும் அவற்றை வளர்த்தால் தானே, சுகமான வாழ்க்கை வாழ முடியும்.
வீட்டுக்கு ஒரு மரம் என்ன... நான்கு மரங்கள் வளர்த்தால் தான் இனி காற்று மாசு, வெப்ப தாக்கம் ஆகியவற்றிலிருந்து நாம் தப்பிக்க முடியும்.
குளம், குட்டை, ஆறு, நதி என எங்கு பார்த்தாலும், கட்டிடங்களைக் கட்டி ஆக்கிரமிக்கிறோம். பின் குடிநீர் கேட்டு, தெருத் தெருவாய் அலைந்து திரிகிறோம்.
இயற்கை சீற்றம் கொண்டால் தாங்க மாட்டோம், கவனமாக இருக்க வேண்டும்!
முற்கால மன்னர்கள் மழைநீரைச் சேமிப்பதற்கென்றே பல வசதிகளைச் செய்து வைத்திருந்தனர். அதையெல்லாம் நாம் கபளீகரம் செய்து விட்டோம்; முன்யோசனை இன்றி, பணத்தைத் தேடி ஓடி, அனைத்தையும் தொலைத்து நிற்கிறோம்.
நாம் நிம்மதியாக வாழ, இயற்கையை நாம் நிம்மதியாக வாழ விட வேண்டும். சிரித்து மலர்ந்து, செழிப்புடன் நிற்கும் இயற்கை அழகை ரசித்தால், அதை அழிக்க மனம் வராது. இனியாவது சிந்திப்போம்!

