PUBLISHED ON : பிப் 11, 2026 01:49 AM

தடை விதிக்குமா நீதிமன்றம்?
எஸ்.கந்தையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல்களின் போது மற்றும் மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும், 'டுபாக்கூர்' வாக்குறுதிகளை வாரி வழங்கி, ஓட்டுகளை பெற்று, ஆட்சியில் அமர்ந்ததும், அவற்றை முற்றிலும் மறந்தோ -அல்லது மறந்தது போல் நடித்தோ மக்களை ஏமாற்றுகின்றன.
தேர்தல் கமிஷனால், அரசியல்கட்சிகள் வழங்கும் இந்த போலி வாக்குறுதிகளையும் தடுக்க முடியவில்லை; வாக்காளர்களுக்கு பணமும், பரிசு பொருட்கள் வழங்குவதையும் முறியடிக்க முடியவில்லை. கடனே என்று தேர்தலை நடத்தி முடிக்கிறது.
ஆரம்பம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்றும் ஒன்று இருந்தாக வேண்டுமல்லவா?
அதற்கு பிள்ளையார் சுழி போடுவது போல், மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 'தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதும், பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதும் தொடர்கிறது. தேர்தல் நேரத்தில் இலவசங்களை அறிவிப்பது சட்ட விரோதம் இது வாக்காளர் களுக்கு பணம் கொடுப்பதை போன்ற செயல் என்பதால், அதற்கு தடை விதிக்க வேண்டும்.
'அதேபோல், நிறைவற்றவே முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து, ஓட்டுகளை பெறுவது மக்களை ஏமாற்றும் செயல். எனவே, அதற்கும் தடை விதிக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.
இம்மனுவை, விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளும்படி, தலைமை நீதிபதி அமர்வில் மனுதாரர் சார்பில், முறையீடும் செய்யப்பட்டது. தலைமை நீதிபதியும் வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் தமிழகம் மற்றும் கேரள சட்டசபைகளுக்கு, தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன், அரசியல் கட்சிகளின் பணப் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வினியோகம் மற்றும் நிறைவேற்ற முடியாத போலி வாக்குறுதிகள் அனைத்துக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிடுமானால், நிகழ்கால சந்ததிக்கு மட்டுமல்ல; எதிர்கால சந்ததியும் ஆனந்தக் கூத்தாடும்!
தி.மு.க.,விடம் கமல் சூளுரைத்திருக்கலாமே! என்.ஜி.ராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியங்களையும் இழிவுபடுத்தி, 'விடுதலை' பத்திரிகையில், 1943 முதல் 1972 வரை ஈ.வெ.ராமசாமி எழுதிய கட்டுரைகள், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவருகின்றன.
இது, உண்மையான தமிழர்களுக்குத் தான் கோபத்தை ஏற்படுத்தி வருகிறதே தவிர, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
மாறாக, யாரெல்லாம் ஈ.வெ.ராமசாமியின் பேச்சை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவிக்கின்றனரோ, அவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வேலையை கன கச்சிதமாக செய்து வருகின்றனர்.
அவ்வகையில், 2025 மார்ச் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், ஒரு விவாதத்தின் போது, நிதியமைச்சர் நிர்மலா, 'தமிழ், பிச்சை எடுக்கக் கூட உதவாது' என்று ஈ.வெ.ராமசாமி பேசியதை சுட்டிக் காட்டி, 'இப்படி பேசியவரை தலைவராக கொண்ட நீங்கள் தமிழ் குறித்து பேசலாமா?' என்று கேட்டு, தி.மு.க., - எம்.பி.,க்களை சபையை விட்டே ஓடச் செய்திருந்தார்.
அந்த உரை தற்போது, 'கட்' செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் மீண்டும் உலா வந்தது.
அந்த வீடியோவில் வந்தவற்றை அரைகுறையாக புரிந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், ராஜ்யசபாவில் நிதியமைச்சரை கண்டித்து, 'தமக்கென நிதி திரட்ட ஆங்கிலம், ஹிந்தி இருக்கும் போது அதில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது; தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்' என்று வீரவசனம் பேசியுள்ளார்.
தன்னை பெரிய படிப்பாளி போல் காட்டிக் கொள்ளும் கமல்ஹாசனுக்கு, ஈ.வெ.ராமசாமி, தமிழர்களையும், தமிழையும் எப்படியெல்லாம் இழிவு படுத்தி பேசினார் என்பது தெரியாமல் போனது விந்தை தான்!
மேலும், 'தமக்கென நிதி திரட்ட கன்னடம் இருக்கும் போது, தமிழரிடம் ஏனய்யா பிச்சை எடுத்தாய்?' என்று, ஈ.வெ.ராமசாமியை தான் கமல்ஹாசன் கண்டித்திருக்க வேண்டுமே தவிர, நிதியமைச்சரை அல்ல.
அத்துடன், 'தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்; ஈ.வெ.ராமசாமியின் தட்டில் பிச்சை தான் போடுவான்' என்று, திராவிட கழகத்திடம் சூளுரைத்திருக்க வேண்டுமே தவிர, பார்லிமென்டில் அல்ல!
போற்றுதலுக்கு உரிய பொக்கிஷங்கள்! ரா. அக் ஷரா , திருப்பத்துார், சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மக்கள் பணி என்று கூறி ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள், தன் சொந்த மக்கள் நலனுக்காக, நாட்டையே சுரண்டி தின்று கொழுக்கும் இக்காலத்தில், துாய்மை பணியாளராக, வறுமையில் வாழ்ந்த போதிலும், குப்பையில் கிடந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 45 சவரன் தங்க நகைகளை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார், சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த துாய்மை பணியாளர் பத்மா.
நேர்மையாளர்களின் வாழ்வு போராட்டமாக இருந்தாலும், அவர்கள் எதற்காகவும் தங்கள் நேர்மையில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் பத்மா.
இன்று பல பள்ளி - கல்லுாரிகள் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து, நேர்மைக்கு அடையாளமாக அவரை காட்டுகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலியை பரிசளித்து பாராட்டியுள்ளார். தமிழக அஞ்சல் துறையோ, பத்மாவின் நேர்மையை பாராட்டி, அவரது புகைப்படத்தை அஞ்சல்தலையாக வெளியிட்டு, கவுரவப்படுத்தியுள்ளது.
மலேசியாவின் சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன், தன் உதவியாளரை நேரில் அனுப்பி, தங்க மோதிரத்தை பரிசளித்து பாராட்டியுள்ளார்; நடிகர் பார்த்திபன் அவரது காலை தொட்டு வணங்கி, மரியாதை செலுத்தியுள்ளார்.
அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படாத பத்மா போன்றவர்கள் வாழும் இம்மண்ணில் தான், எளிய மனிதர்களின் உடல் உறுப்புகளை திருடி, அதில் சொகுசு வாழ்க்கை வாழும் பிணம் தின்னி கழுகுகளும் உள்ளன.
எனவே, வானமே கூரையாக வாழ்ந்தாலும், வாழ்வின் நெறிதவறாத பத்மா போன்றவர்கள், என்றும் போற்றுதலுக்கு உரிய பொக்கிஷங்களே!

