PUBLISHED ON : மார் 06, 2026 02:45 AM

விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது!
ப.ராஜேந்திரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இத்தனை ஆண்டுகளாய், தி.மு.க.,வை வசைபாடிவிட்டு, இப்போது ராஜ்யசபா 'சீட்' கொடுத்ததனால், பல்லிளித்து அதே கட்சியுடன் ஒட்டிக் கொண்டு விட்டது தே.மு.தி.க.,
தொகுதி பங்கீட்டு பேச்சில், 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும், தே.மு.தி.க., தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ஆறு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் வழங்க தி.மு.க., முன்வந்துள்ளதாக கூறப்பட்டது. உடனே, 'விஜயகாந்த், பிறவிப் பயனை அடைந்துவிட்டார்' என்று புளகாங்கிதம் அடைந்தார் கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா.
'இந்த எம்.பி., பதவி, குடும்பத்திற்குத் தானே அன்றி, எங்களுக்குக் கிடைக்காதே' என, தே.மு.தி.க., தொண்டர்கள் கொதித்து போயுள்ளனர். இதன் விளைவு, வரும் தேர்தலில் தெரியும் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2005ல் தே.மு.தி.க., என்ற கட்சியை ஆரம்பித்து, 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில் 8 சதவீதத்திற்கும் மேல் ஓட்டு பெற்றதுடன், தான் போட்டியிட்ட விருதாச்சலம் தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினர், விஜயகாந்த்.
அவரது வளர்ச்சியை தாங்க முடியாமல், சென்னை, கோயம்பேடு சந்திப்பில், மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது, அங்கிருந்த விஜயகாந்தின் கல்யாண மண்டபம் இடித்து நொறுக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல... விஜயகாந்தை அரசியலில் இருந்து ஒளித்துக்கட்ட அத்தனை யுக்திகளையும் கையாண்டது தி.மு.க., ஆனாலும் இன்று, தி.மு.க.,வுடன் இணைந்திருக்கிறார் அவர் மனைவி பிரேமலதா. விஜயகாந்தின் ரசிகர்களும், தற்போதைய கட்சியின் தொண்டர்களும், முகம் சுளிக் காமல், வேறென்ன செய்வர்?
கட்சி தொடங்கியது முதல், 2023 வரை, விஜயகாந்த் பெயர், அரசியலில் நிலைத்து நின்றது. தி.மு.க.,வுக்கு எதிரான மனநிலையில் இருந்த தொண்டர்களே, அவரது கட்சியில் இருந்தனர்.
சமீபத்தில், 'தே.மு.தி.க., எல்லாம் ஒரு கட்சியா...' என, தி.மு.க., அமைச்சர் ராஜகண்ணப்பனும், பதிலுக்கு, 'ராஜகண்ணப்பன் யாருன்னு மக்களுக்கு தெரியும்' என பிரேமலதாவும், மாறி மாறி சாடிக் கொண்டனர். இதனால், தி.மு.க., பக்கமே தே.மு.தி.க., திரும்பாது என்று, தொண்டர்களும், மக்களும் நம்பி இருந்தனர்.
கடைசியில், தி.மு.க.,விடம் பிரேமலதா சரணடைந்து விட்டார்.
'ஈட்டி, எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாளம் வரை பாயும்' என்று சொல்வது உண்டு. அது போல, தி.மு.க., - தே.மு.தி.க.,வை ஜால்ரா போட வைக்க எவ்வளவு கொடுத்திருக்கும் என்பது தான், இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.
'தி.மு.க.,வின் செயல்கள், 50 சதவீதம் வெறுப்பைக் கொடுக்கின்றன' என்ற பிரேமலதா, இனி, தி.மு.க., பற்றி எதிர்காலத்தில், தப்பித் தவறிக் கூட, இழிவாக பேச மாட்டார்.
பா.ஜ.,வின் தமிழிசையும், விஜய் ரசிகர்களும் கூறுவது போல, பிரேமலதாவின் இந்த செயல்களை, விஜயகாந்தின் ஆன்மா கூட மன்னிக்காது!
வாய் திறந்து பேசுங்கள் விஜய்! என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன் வளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: புதிதாக தமிழக அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜய்க்கு எதிராக, நிறைய விமர்சனங்கள் வலைதளங்களில் புதிது புதிதாக முளைக்கின்றன.
'பொது வாழ்வு என்று வந்த பின், வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் ஒளிவு மறைவு கூடாது' என்றார் கவிஞர் கண்ணதாசன்.
பிரபல கவிஞர் பல தத்துவங்களுக்கு சொந்தக்காரர், தன் வாழ்க்கையை, 'வனவாசம்' என க டை விரித்து விட்டார்.
அவரை யாரும் ஒதுக்கவில்லை; அவர் எழுதிய பாடல்களை யாரும் ரசிக்காமல் விடவில்லை.
அதுபோன்ற திறந்த நிலை தலைவர்களுக்கு தேவை. நம்மை விமர்சனம் பண்ணுபவர்களை, விமர்சனங்களை தேட விடாமல் பண்ணுவது புத்திசாலித்தனம்.
'ஊர் நாலு பேசும்' என்று சொல்லப்படுவதை, கரூர் சம்பவத்திலேயே உணர்ந்திருப்பார் விஜய்.
இப்போது, அவரின் குடும்ப வாழ்க்கை, பொதுவெளியில் பேசும் பொருளாகி விட்டது. இதைத் தடுக்க, விஜய் மனம் திறந்து பேச வேண்டும். இல்லையெனில், சிறு உளி, பெரிய மலையைத் தகர்க்கும் என்பது போல, விஜயின் சொந்த வாழ்க்கையோடு சேர்ந்து, பொது வாழ்க்கையும் அஸ்தமனம் ஆகிவிடும்.
இலவச திட்டத்திற்கு நிதி ஆதாரம் எங்கே? என்.கந்தையா, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட கட்சிகளிடையே ஒரு பழக்கம் உண்டு. ஆட்சி குறித்து எவராவது எதிர் கருத்து தெரிவித்தால், அதை அப்படியே மடை மாற்றிவிடுவர்.
அவ்வகையில், சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, 'இலவச திட்டங்களை அளிக்க நிதி எங்கிருந்து வருகிறது?' என்று கேட்டிருந்தார்.
இதுகுறித்து அனைவரும் பேச ஆரம்பிக்கவும், திராவிட மாடல் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், 'இலவசங்கள் என்பது இங்கு மட்டுமல்ல; அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும் காணப்படுகிறது. இது மக்களை சோம்பேறியாக்கும் திட்டம் அல்ல. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்றால், இலவச திட்டங்கள் வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இலவச திட்டங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்பது தான், உச்ச நீதிமன்றத்தின் கேள்வி!
அதற்கு விளக்கம் அளிக்காமல், வாய்க்கு மேல் மூக்கு இருக்கிறது; நாக்கு மேல் பல் இருக்கிறது என்பது போன்று, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிலேயே இலவச திட்டங்கள் உள்ளன என்கிறார். அமெரிக்கா அந்நாட்டு மக்களுக்கு வழங்கும் இலவச திட்டம் குறித்து விளக்கம் அளிப்பாரா சிவசங்கர்?
வளர்ந்த நாட்டில் உள்ள மக்கள் எதற்கு, 1,000 - 2,000 ரூபாய்க்கு கையேந்தப் போகின்றனர்?
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இலவச திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்கிறார் சிவசங்கர்.
உரிமை தொகை என்ற பெயரில் மகளிருக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்குவதால், தமிழகத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைத்து, மகிழ்ச்சியின் உச்சத்தில் நீந்துகின்றனரா அல்லது தி.மு.க., வழங்கிய இலவச திட்டங்களால் தமிழக மக்கள் அனைவருக்கும் எல்லாம் கிடைத்து விட்டதா?
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவிடம் ஒரு குணம் உண்டு. அவரிடம், 'உங்கள் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது' என்று எவராவது சொன்னால், உடனே, 'ஊழல் உலகளாவியது' என்று ஒரே போடாய் போட்டு வாயை அடைத்து விடுவார்.
அதுபோல, இலவசங்களை வழங்க எங்கிருந்து நிதி கிடைக்கிறது என்று கேட்டால், 'அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும் இலவசம் வழங்கப்படுகிறது' என்று கூறுகிறார், சிவசங்கர்.
பேச்சை மடைமாற்றம் செய்வதற்கு தி.மு.க.,விற்கு சொல்லியா தர வேண்டும்; பேசியே வளர்ந்த கட்சியல்லவா?

