PUBLISHED ON : மார் 16, 2026 01:41 AM

வாரிசு அரசியலுக்கு மூடுவிழா எப்போது?
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் பதவியைத் துறந்து, ராஜ்யசபா உறுப்பினராகியுள்ளது பேசுபொருளாகி உள்ளது. பதவி விலகலுக்கு அவரது வயது, ஞாபக மறதி, உடல் நலத்தை காரணமாக கூறுகின்றனர். வயது முதிர்ந்து நினைவாற்றல் மங்கிய, உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் முதல்வர் பதவிக்கு ஏற்புடையவர் இல்லை என்றால், ராஜ்யசபாவிற்கு மட்டும் எப்படி ஏற்புடையவராக இருப்பார்? ராஜ்யசபா என்ன பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களின் கூடாரமா என்ன?
நிதிஷ் குமார் பதவி விலகியதும், இதுவரை அரசியலிலேயே இல்லாத அவரது மகன், துணை முதல்வராகிறார். ஏன், ஜனதா தள கட்சியில் தகுதியானவர்கள் வேறு எவரும் இல்லையா?
தமிழகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியைத் தொடர்ந்து, அவரது மகன் ஸ்டாலின் முதல்வராகிறார்; அதைத் தொடர்ந்து, கட்சிக்காக உழைத்த பலர் புறக்கணிக்கப்பட்டு, ஸ்டாலின் மகன் உதயநிதி, துணை முதல்வர் ஆகிறார். உதயநிதியை தொடர்ந்து அவரது மகன் இன்பநிதி, இப்போதே கட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி தென்பட துவங்கியுள்ளார்.
கருணாநிதியின் மகள் கனிமொழி, ஸ்டாலின் மருமகன் சபரீசன், கருணாநிதியின் அக்கா பேரன் தயாநிதி போன்றோர் கட்சியின் அதிகார மையங் களாக உள்ளனர். கூடுதலாக, தி.மு.க., அமைச்சர்களாக இருந்த, இருக்கின்ற டி.ஆர்.பாலு, பொய்யாமொழி, ஆற்காடு வீராசாமி, அன்பழகன், தங்கம், பொன்முடி, நேரு, துரைமுருகன், பி.டி.பழனிவேல் ராஜன் போன்றோரின் வாரிசுகள் அதிகார மையங்களாக உள்ளனர்.
இவர்களை தவிர, அடிமட்ட தொண்டர்கள் எவரேனும் கட்சியின் அதிகார மையமாக வந்துள்ளனரா... ஏன் அவர்களால் திறமையாக செயல்பட முடியாதா அல்லது அரசியல் என்பது மேற்குறிப்பிட்ட வர்களின் குலத்தொழிலா?
'அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்' என்று அடிக்கடி கூறி வருகிறார், திராவிட மாடல் முதல்வர்.
கட்சி, ஆட்சி அதிகாரத்தை தன் குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு பெயர் தான், அதிகாரம் பரவலாக்கப்படுவதா?
தி.மு.க.,வின் இந்த மன்னராட்சி சிந்தனையை, இப்போது பிற மாநிலங்களிலும் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு சமீபத்திய உதாரணம் தான் நிதிஷ் குமார்.
இது ஜனநாயக அமைப்பிற்கு, அரசியல்வாதிகளால் விடப்பட்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல்!
எனவே, ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமெனில், வாரிசு அரசியலை எந்தக் கட்சி முன்னிறுத்தினாலும், மக்கள் அக்கட்சிக்கு தோல்வியை பரிசாக கொடுத்தால் மட்டுமே, இங்கு ஜனநாயகம் காக்கப்படும்!
ஸ்டாலின் மனக்கோட்டை கட்ட வேண்டாம்! டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்தபோது, அவரை வரவேற்று, 'திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரை தாங்கிய பன்னீர்செல்வம் நம்முடன் இணைந்துள்ளார். அவரின் வரவு நல்வரவாகட்டும்; தமிழகம் வெல்லட்டும்' என்று நீதிக்கட்சியின் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வத்தோடு, ஓ.பன்னீர் செல்வத்தை ஒப்பிட்டு வாழ்த்தியுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
கடந்த 1918ல் தஞ்சை நகர்மன்ற தலைவராக ஏ.டி.பன்னீர்செல்வம் இருந்தபோது, தன் பகுதி மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் தவிப்பதை கண்டு, அவர்களின் தாகம் தீர்க்க குளம் அமைத்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ, 2017ல் தன் பண்ணை நிலத்தில் பாசனம் செய்வதற்காக ஆழ்கிணறு தோண்டி, தேனி லட்சுமிபுரம் கிராம மக்கள் தண்ணீருக்காக போராடும் அளவுக்கு, குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தினார்.
அதேபோன்று, 1934ல் கவர்னரின் நிர்வாகக் குழுவில் ஏ.டி.பன்னீர்செல்வம் இருந்தபோது, அவரது மகன் ஜார்ஜ், பொறியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார். அந்த பதவியை தன் மகனுக்கு பரிந்துரை செய்ய மறுத்து, தகுதியின் அடிப்படையில் தேர்வாகட்டும் என கூறிவிட்டார், ஏ.டி.பன்னீர்செல்வம்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ, 2019ல் அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பை பயன்படுத்தி, தன் மகன் ரவீந்திரநாத்தை மட்டும் தேனி எம்.பி.,யாக்கி மகிழ்ந்தார்.
இப்படி மக்கள் சேவையிலும், நேர்மையிலும் கொள்கை குன்றாக வாழ்ந்த ஏ.டி.பன்னீர்செல்வத்தோடு, சுயநலமே முழு உருவாக கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தை ஒப்பிடுவது சரியா?
முக்குலத்தோர் சமூகத்தினரின் கணிசமான ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பன்னீர்செல்வத்தை இப்படி, 'மானே, தேனே, பொன்மானே' என புகழ்ந்து கொண்டிருக்கிறார், ஸ்டாலின்.
ஆனால், கடந்த கால தேர்தல் வரலாற்றை திருப்பிப் பார்த்தால், ஸ்டாலின் போடும் கணக்கு தப்புக் கணக்கு என்பது புரியும்.
கடந்த 1973ல் திண்டுக்கல் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அ.தி.மு.க., சார்பில் எவரை களத்தில் இறக்குவது என்று எம்.ஜி.ஆர்., யோசித்துக் கொண்டிருந்தபோது, மாயத்தேவர் என்பவரை தேர்வு செய்ய கோரி, தந்தி அனுப்பினர், அவ்வூரைச் சேர்ந்த சிலர்.
சென்னை உயர் நீதிமன்ற வக்கீலாக பணியாற்றிக் கொண்டிருந்த மாயத்தேவரை தேடிப்பிடித்து, அ.தி.மு.க., வேட்பாளர் ஆக்கினார், எம்.ஜி.ஆர்.,
அத்தேர்தலில், தி.மு.க., சார்பில் பொன் முத்துராமலிங்கம், இந்திரா காங்கிரஸ் சார்பில், கரு.சீமைசாமி, காமராஜ் காங்கிரஸ் சார்பில், என்.எஸ்.வி.சித்தன் ஆகியோர் வேட்பாளராக களம் இறங்கினர்.
இந்த நான்கு பேருமே முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான்!
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் மூக்கையா தேவர், தி.மு.க.,வை ஆதரித்தும், எம்.ஜி.ஆரின் செல்வாக்கால், இரண்டு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மாயத்தேவர் வெற்றி பெற்றார்.
அதேபோன்று, 1977ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மதுரை திருமங்கலம் தொகுதியில் கிறிஸ்துவ நாடார் வகுப்பைச் சேர்ந்த பி.டி.சரஸ்வதியை வெற்றி பெற வைத்து, அவரை எதிர்த்து நின்ற இந்திரா காங்., வேட்பாளரான முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த சித்தனை தோற்கடித்தார், எம்.ஜி.ஆர்.,
தி.மு.க., வேட்பாளர் கண்ணுசாமியோ மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அவ்வளவு ஏன்... ஜெயலலிதா காலத்தில், பெரியகுளத்தில் போட்டியிட்ட பன்னீர்செல்வம் தொடர்ந்து எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார். அந்த செல்வாக்கை பயன்படுத்தி தன் மகனையும் எம்.பி.,யாக்கினார். அதே பன்னீர்செல்வம் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, கடந்த பார்லிமென்ட் தேர்தலில் சுயேச்சையாக ராமநாதபுரத்தில் போட்டியிட்ட போது தோற்றுப் போனார்.
பன்னீர்செல்வம் இதுவரை வெற்றி பெற்றது, அ.தி.மு.க., என்ற கட்சியின் செல்வாக்கால் தானே தவிர, அவருக்கென்று தனிப்பட்ட முறையில் முக்குலத்தோர் மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதே நிதர்சனம்.
எனவே, பன்னீர்செல்வத்தின் வாயிலாக முக்குலத்தோர் ஓட்டை அறுவடை செய்து விடலாம் என, ஸ்டாலின் மனக்கோட்டை கட்ட வேண்டாம்!

