PUBLISHED ON : மார் 17, 2025 12:00 AM

ஆர்.வித்யாதரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்திலிருந்து
அகிலன், நா.பார்த்தசாரதி போன்ற எத்தனையோ எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி
விருது பெற்றுள்ளனர். அவர்கள் யாரும் அந்த விருதின் மாண்பையும்,
மரியாதையையும் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதில்லை.
தகுதி
இல்லாத ஒருவருக்கு, அந்த விருதை வழங்கிய சாகித்ய அகாடமி, தற்போது ஏன் அந்த
விருதை இவருக்கு வழங்கினோம் என்று தலையில் கை வைக்கிறது.
அவர் வேறு யாரும் அல்ல; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி., வெங்கடேசன் தான்!
இவருடைய சமீபகால நடவடிக்கைகள், விருது பெற்ற அந்த, 'வேள்பாரி' என்ற புதினத்தை இவர் தான் எழுதினாரா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இருபதாயிரம்
ரூபாய் செலவில் ஓர் ஓலை கொட்டகை போட்டு, 2 லட்சம் ரூபாய் கணக்கு காட்டிய
இந்த நேர்மையாளர் தான், 'திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், உனக்கு
தேவையான தீர்ப்பை எழுதி கொடுத்து விட்டு, நாளை ஓய்வு பெற்ற பின், ஒரு
மாநிலத்தின் கவர்னராக உட்காருவது போன்ற அசிங்கத்தை நாங்கள் ஒருபோதும் செய்ய
மாட்டோம்' என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி பி.தனபாலை
சாடியுள்ளார்.
தான் ஒரு எம்.பி., இந்த உலகமே தனக்கு கீழ்தான் என்பது போல், அவரது பேச்சில் தான் எத்தனை அகந்தை, திமிர்!
இவரை எதிர்த்தும் மதுரை மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை மறந்து விட்டார் போலும்!
'எந்த துறை என்றாலும், எத்தகைய உயரிய பதவியில் இருந்தாலும், எந்த முகமூடி போட்டாலும் அயோக்கியன் தான்' என்றும் கூறி இருக்கிறார்.
இப்படி, அவர் தன்னை தானே விமர்சித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
முன்னாள்
முதல்வர் எம்.ஜி.ஆர்., அவரது ஆட்சி காலத்தில், 'மக்கள் பிரதிநிதிகளை
திரும்ப பெறும் திட்டம்' எனும் ஓர் அருமையான திட்டத்தை
அறிமுகப்படுத்தினார். இதன்படி, மக்கள் பிரதிகளில் செயல்பாடு திருப்தி
அளிக்கவில்லை எனில், அத்தொகுதி பிரதிநிதியை அவர்கள் திரும்ப அழைத்துக்
கொள்ளலாம்!
துரதிருஷ்டவசமாக அத்திட்டம் அமலுக்கு வரவில்லை.
அப்படி வந்திருந்தால், இன்றைய நிலையில், எத்தனையோ பேர் அழைக்கப்பட்டிருப்பர் என்றாலும், முதலாவது வெங்கடேசனை அழைத்திருப்பர்!
மாற்றி யோசியுங்கள்!
ஜெ.விநாயகமூர்த்தி, திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வெளிநாடுகளைப் போல், கண்ணாடி பாட்டில், எளிதில் மறுசுழற்சி செய்யப்படக்கூடிய நெகிழி பாட்டில்களில் ஏன் பால் விற்பனை செய்யக்கூடாது?' என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆவின் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
பால் பாக்கெட்டுகளின் புழக்கத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் தொடுத்துள்ள வழக்கில் இக்கேள்வியைக் கேட்டுள்ளது.
நெகிழி பாக்கெட்டுகளுக்கு பதிலாக, வேறு மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய்ச்சி நடந்து வருவதாகவும், இதுகுறித்து இரு வாரங்களில் விளக்கம் அளிப்பதாக பதில் அளித்துள்ளது, ஆவின் நிர்வாகம்.
பொங்கலுக்கும், தீபாவளிக்கும், 'டார்கெட்' நிர்ணயித்து சரக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, காலி பாட்டில்களை திருப்பிக்கொடுத்தால், 10 ரூபாய் சரக்கு வாங்கும்போது திருப்பிக் கொடுக்கப்படுகிறது.
டாஸ்மாக் பாட்டில்கள் மீது அக்கறை காட்டும் அரசு, பால் பாக்கெட்டுகள் மீது ஏன் காட்டுவதில்லை?
இன்றைக்கும் எத்தனையோ நடுத்தரக் குடும்பங்களில், பெண்கள், பாலை பயன்படுத்தியபின், பிளாஸ்டிக் கவர்களை சுத்தப்படுத்தி, மொத்தமாக வைத்திருந்து, பிளாஸ்டிக் பழைய பொருட்கள் கடைகளில் கொடுத்து, பணம் பெறுகின்றனர்.
காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால், 10 ரூபாய் தருவதைப் போல், காலி பால் பாக்கெட்டுகளை திரும்ப ஒப்படைத்தால், குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்று ஏன் ஆவின் நிர்வாகம் அறிவிக்கக்கூடாது?
நெகிழி பாக்கெட்டுகளுக்கு மாற்றாக வேறொன்றை அறிமுகப்படுத்தும் வரை, காலி பால் பாக்கெட்டுகளை ஆவின் நிர்வாகமே திரும்பப் பெறலாமே!
இதன் வாயிலாக, துாக்கி எறியப்படும் பாக்கெட் கழிவுகளால் மண்வளம் காக்கப்படும்; குப்பை சேர்வதும், வீதியில் கிடக்கும் காலி பால் பாக்கெட்டுகளை ஆடு, மாடுகள் சாப்பிட்டு உயிரிழக்கும் பரிதாபம் தடுக்கப்படுமே!
அரசு யோசிக்குமா?
இது அந்த காலம் இல்லைங்கோ!
ஆர்.எஸ்.ஐயங்கார், சென்னையில் இருந்து எழுது கிறார்: கடந்த 1967 ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காமராஜர் தலைமையிலான காங்., கட்சி தோல்வியை தழுவியது. காரணம், தேர்தல் பரப்புரையில், காமராஜர் தன் சாதனைகளை சொல்லவே இல்லை. அரசு செய்த சாதனைகளை மக்கள் அறிந்திருக்க மாட்டனரா என்று கூறிவிட்டார். ஆனால், அதை மக்கள் உணரவே இல்லை. பொய்யான வாக்குறுதிகளை நம்பி, காமராஜரை தோற்கடித்தனர்.
அதேபோன்று தான், கடந்த தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் அளித்து, தேர்தலில் வெற்றி பெற்றது, தி.மு.க.,!
பூக்கடைக்கும் விளம்பரம் செய்ய வேண்டிய காலம் இது!
எனவே, பா.ஜ., தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். கூடுதலாக, ஒரு மொழியை படிப்பதினால், ஒரு மாணவனின் அறிவுத் திறனில் ஏற்படும் மாற்றம் குறித்து உரக்க பேச வேண்டும்.
தற்போது, மும்மொழி கல்வியை எதிர்த்து, ஹிந்தி எதிர்ப்பு எனும் ஆயுதத்தை துாக்கிக் கொண்டு, போர் முனைக்கு தயாராகி விட்டார், துணை முதல்வர் உதயநிதி. 1,000 பேர் உயிரை விடுவர் என்று உத்தரவாதம் வேறு கூறுகிறார்.
திருப்பூரில், 1965ல் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, ஓர் உதவி ஆய்வாளர் வாயில் பெட்ரோலை ஊற்றி, வண்டியில் போட்டு எரித்தனர்; பலர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர்.
ஆனால், உதயநிதி ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இது 1965 அல்ல; 2025!
அன்றைய இளைஞர்கள் வெளியுலகம் அறியாதவர்கள்; அக்காலத்தில், 'டிவி' மொபைல் போன், கம்ப்யூட்டர், சமூக வலைதளங்கள் என எதுவும் கிடையாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் டைப்ரைட்டிங், ஷார்ட்ேஹண்ட், அரசு வேலை அவ்வளவு தான்!
ஆனால், இன்றைய இளைஞர்கள் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் அல்ல; நடுத்தர வர்க்க மக்கள் கூட பல மொழிகள் கற்று, சர்வ சாதாரணமாக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
அத்துடன், அன்று தி.மு.க., எதிர்க்கட்சி; காங்கிரஸ் ஆளுங்கட்சி. அதனால், வேண்டுமென்றே மாணவர்களை துாண்டி, வன்முறையை கையாண்டு நாட்டை சுடுகாடாக ஆக்கினர். ஆனால், இன்று தி.மு.க., ஆளுங்கட்சி!
வன்முறையை கட்டவிழ்த்து விட்டால், தி.மு.க., தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை உதயநிதி மறந்து விட வேண்டாம்!