தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ தேர்தல் முடிவில் தெரியும்!

 தேர்தல் முடிவில் தெரியும்!

 தேர்தல் முடிவில் தெரியும்!


PUBLISHED ON : மார் 26, 2026 02:11 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2026 02:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.முருகையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இது வரை அதிகம் விமர்சிக்கப்படாமல் இருந்த வாரிசு அரசியல், தற்போது பேசுபொருளாகி உள்ளது.

ராஜாஜி அறிமுகப்படுத்திய தொழில் கல்வி திட்டத்தை, 'குலத்தொழில் திட்டம்' என்று எதிர்த்து, அந்த திட்டத்திற்கே மூடுவிழா கண்ட அரசியல் கட்சிகள் தான், இப்போது, தங்கள் வாரிசுகளை அரசியலில் நுழைத்து, பதவிகளிலும் அமர்த்துகின்றன.

இப்படி அரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசியலில் கோலோச்சிக் கொண்டிருப்பதற்கு மூல காரணமே வாக்காளர்கள் தான்.

ஓர் அரசியல்வாதி தன் வாரிசை தேர்தலில் நிறுத்தினால், அவரின் கல்வித் தகுதி, சேவை மனப்பான்மை மற்றும் திறமை போன்ற எதையும் கருத்தில் கொள்ளாமல், அந்த அரசியல்வாதி கொடுக்கும் இலவசங்களில் மயங்கி, கண்ணை மூடி ஓட்டுப் போட்டு வாரிசு அரசியலுக்கு ஊக்கம் கொடுத்து நாட்டை கெடுத்து குட்டிச் சுவராக்கியதே வாக்காளர்கள் தான்.

ஆரம்பத்திலேயே வாரிசு பேர்வழிகளுக்கு ஓட்டு போடாமல் தவிர்த்து, அவர்களுக்கு தோல்வியை பரிசளித்திருந்தால், படிப்பும், நிர்வாகத் திறனும் அற்ற, ரவுடி மனப்பான்மை கொண்டவர்களை நம்மை ஆளச் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்காது.

ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களாக நிற்கும் அரசியல் வாரிசுகளுக்கு ஓட்டு போட்டு, பின், குத்துதே குடையுதே என்று ஒப்பாரி வைக்கின்றனரே தவிர, சிந்தித்துச் செயல்படுவதில்லை.

அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவசங்களுக்கும், பரிசுப் பொருட்களுக்கும், ரொக்கத்திற்கும் ஈடாக, வாங்கிய தொகையை காட்டிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐம்பது முதல் நுாறு சதவீதம் வரை கூடுதலாக கட்டணங்களாகவும், வரிகளாகவும் கொடுக்கப் போகிறோம் என்பதை உணர்ந்தால், எவரும் இலவசங்களுக்கு மயங்கி வாரிசுகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

வாரிசுகளுக்கு மட்டுமல்ல; இலவசத்தை காட்டி ஏமாற்றும் எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டளிக்க மாட்டார்கள்.

வரும் சட்டசபை தேர்தலிலாவது மக்கள், இதையெல்லாம் யோசித்து ஓட்டு போடுவரா என்பது தேர்தல் முடிவின் போது தான் தெரியும்! lll

ஒய்யார கொண்டைக்குள் இருக்கும் ஈரும் பேனும்! அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1954 - -63 வரை தமிழகத்தின் முதல்வராக கோலோச்சிய கர்ம வீரர் காமராஜர், ஓர் ஆட்சியாளர் எப்படி நாட்டை ஆள வேண்டும் என்பதற்கு, உதாரண புருஷராக திகழ்ந்தார்.

மக்களின் வரிப்பணம் ஒரு ரூபாய் கூட வீணாகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஆயிரக்கணக்கான பள்ளிகளையும், பல அணைகளையும், தொழிற்கூடங்களையும் கட்டியிருந் தாலும், எதிலும், கமிஷனோ, கரப்ஷனோ இல்லை!

அதனால் தான், அவரது ஆட்சி தமிழகத்தின் பொற்காலம் என்று போற்றப் படுகிறது.

ஆனால், விளம்பர மாடல் தி.மு.க., அரசோ, சமூக வலைதளங்கள் முதல், வார இதழ்கள், பத்திரிகை, தொலைக்காட்சிகள் என அனைத்து ஊடகங்கள் வாயிலாக தினமும் விதவிதமான வார்த்தை ஜாலங்களுடன், விளம்பரம் செய்கிறது.

'ஒய்யார கொண்டையாம் தாழம்பூ; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்' என்ற சொலவடைக்கு ஏற்ப, ஏற்கனவே, நிதி பற்றாக்குறையில் தள்ளாடும் திராவிட மாடல் அரசு, பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமலும், இன்னும் சில பணிகளில் நிரந்த ஊழியர்களை நியமிக்க நிதி இல்லாமல், தொகுப்பு ஊதியத்தில் வேலை வாங்கி வரும் நிலையில், பெரும் சாதனை புரிந்து விட்டது போல் விளம்பரம் செய்கிறது .

அவ்வளவு சிறப்பாக ஸ்டாலின் ஆட்சி செய்திருந்தால், எதற்கு இத்தனை விளம்பரங்கள்?

lll

கொள்கைவாதி அல்ல; சந்தர்ப்பவாதி! செ.சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் ஒரு சதவீதம் கூட தனக்கு இல்லை என்று கூறியுள்ளார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலர் வைகோ.

வரும் சட்டசபை தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும்; தனி சின்னத்தில் களம் காண வேண்டும் என தொடர்ச்சி யாக தன் விருப்பத்தை தெரிவித்திருந்த நிலையில், தி.மு.க., தலைமையோ, நான்கு தொகுதிகள் மட்டும் ஒதுக்கியதுடன், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று, ம.தி.மு.க.,வை கட்டம் கட்டியதால் ஏற்பட்ட விரக்தி இது!

முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 'கழகத்தின் போர்வாள்' என்றழைக்கப்பட்டவர், 30க்கும் மேற்பட்ட முறை சிறை சென்றவர், போராட்ட குணம் கொண்டவர் என்றெல்லாம் போற்றப்பட்ட வைகோ, இன்று விரக்தியி ன் உச்சத்தில் உள்ளார்.

கொலைப் பழி சுமத்தி கட்சியிலிருந்து கருணாநிதி வெளியேற்றிய போது, சீறி சினந்து, தனிக் கட்சி ஆரம்பித்து, 'தி.மு.க.,வை எதிர்ப்பதே தன் வாழ்நாள் பணி' என்று முழக்கமிட்டவர், வைகோ.

'கருணாநிதியா தமிழனத்தலைவர்... அவர் ஓர் இனத்துரோகி' என்று வசை பாடிய வைகோ, அதே கருணாநிதியின் பிறந்த நாள் விழா ஒன்றில், 'என் எஞ்சிய வாழ்வை இனி, தி.மு.க.,வோடு இணைந்து பயணிப்பேன்' என்று சரணாகதி அடைந்தார்.

அதிலும், 2024ல் பார்லிமென்ட் தேர்தலில், தி.மு.க., ஆதரவில் வைகோவின் மகன் துரை, திருச்சி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றதும், கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்து தான் வீணாய் போனது போல், தன் மகனின் அரசியல் வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது என்று தீர்மானித்து, முதல்வர் ஸ்டாலின் காலடியில் மொத்தமாகவே வீழ்ந்து விட்டார்.

கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட போதே தெரிந்து விட்டது, ம.தி.மு.க., என்ற தனித்த அடையாளம், இனி மெல்ல மெல்ல துடைத்தெறியப்படும் என்பது!

அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

வைகோவை நம்பி, தி.மு.க.,வை விட்டு வெளியே வந்த பலர், இவரது அரசியல் நிலைபாட்டால், இன்று அரசியல் அனாதைகளாகிவிட்டனர். இவருக்காக அன்று உயிர் நீத்தவர்களின் குடும்பங்கள் இன்று ஆதரவற்ற நிலையில் இருக்கின்றன.

கொள்கையில் நிலையாக இருந்து, காலத்தை வெல்பவன் தான் வீரன்; காலத்தோடும், கொள்கையோடும் சமரசம் செய்து கொள்பவர்கள் வீரர்கள் அல்ல; அவர்கள் சந்தர்ப்பவாதிகள்!

அவ்வகையில், வைகோ ஒரு சந்தர்ப்பவாதி; அதுவே, அவரது இன்றைய நிலைக்கும் காரணம்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us