sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

உண்மையான ஆன்மிகவாதிகள் வரவேற்பர்!

/

உண்மையான ஆன்மிகவாதிகள் வரவேற்பர்!

உண்மையான ஆன்மிகவாதிகள் வரவேற்பர்!

உண்மையான ஆன்மிகவாதிகள் வரவேற்பர்!


PUBLISHED ON : பிப் 10, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 10, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் தமிழகத்தில் தான் ஹிந்துக்கள் மனம் புண்படும் வகையில், நாத்திகவாதிகள் ஹிந்து மதக் கடவுள்களையும், ஹிந்து மதக் கலாசாரத்தையும் கேலியும், கிண்டலும் செய்வது வழக்கத்தில் உள்ளது.

அதிலும் ஹிந்துக்கள் வணங்கும் கோவில்களின் எதிரிலேயே, கடவுள் நம்பிக்கை இல்லாத ஈ.வெ.ரா., சிலைகளை வைத்து அழகு பார்ப்பதும், கோவில்களுக்கு எதிரில் மேடை போட்டு, ஹிந்து கடவுள்களை கேவலமாக பேசுவதும் வழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், ஹிந்து அல்லாதோர், அனைத்து கோவில்களிலும் கொடி மரத்திற்கு அப்பால் செல்ல தடை விதித்துள்ளார்.

இது, ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ள ஆன்மிகவாதிகள் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. சிலர், கோவில்களை ஒரு சுற்றுலா தலமாக நினைத்ததன் விளைவு தான், அமைதியான வழிபாடுகளுக்கு தீங்கு விளைவித்தன.

தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் முதல் மற்ற மதத்தினர் அனைவரும் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல், கோவில்களுக்கு வந்து உண்மையான ஆன்மிகவாதிகளின் இறைவழிபாட்டுக்கு இடையூறு செய்கின்றனர்.

ஹிந்துக்கள், கோவில்களுக்கு செல்லும் நாட்களில் அசைவம் உண்பது இல்லை; பெண்கள், மாதவிலக்கான நாட்களில், கோவில்களுக்கு செல்வது இல்லை; குடும்பத்தில் ஒரு துக்க சம்பவம் நடந்தாலும், குறிப்பிட்ட நாட்கள் கோவிலுக்கு செல்வது இல்லை.

ஆனால், மற்ற மதத்தினர் இதையெல்லாம் கடைப்பிடிக்காமல், கோவில்களுக்குள் சுதந்திரமாக வலம் வருவது சரியல்ல. இதற்கு முடிவு கட்டும் வகையில், நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பு அமைந்துள்ளது.

நீதிபதி ஸ்ரீமதி கூறியிருப்பது போல, 'ஹிந்து கோவில்கள், அதன் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை பாதுகாக்க வேண்டியது, அறநிலையத் துறையின் கடமை' என்று கூறியுள்ளதை, அத்துறை அதிகாரிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.



கொள்கைகள் காற்றில் பறந்து போகும்!


கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் குறைந்தபட்சம் மும்முனை போட்டி இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், எந்தெந்த கட்சிகள், எந்தெந்த கூட்டணியில் இருக்கும் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

தி.மு.க., கூட்டணியில், முன்பிருந்த எல்லா கட்சி களும் தொடர்கின்றன என்றாலும், இன்னும் அவர்களுக்குள் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படவில்லை. அ.தி.மு.க., நிலை இன்னும் பரிதாபம். பா.ஜ.,வை கழற்றி விட்டதால், தி.மு.க., அணியில் உள்ள சில முஸ்லிம் இயக்கங்களும், வி.சி., கட்சியும் தங்கள் அணிக்கு வரும் என்று, கதவை திறந்து வைத்திருக்கும் பழனிசாமிக்கு பெரும் ஏமாற்றம்.

பா.ம.க., - தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுக்க, அ.தி.மு.க., முயற்சிக்கிறது. ஆனாலும், 'மத்தியில் மீண்டும் பா.ஜ., தான் ஆட்சிக்கு வரும்' என்று கருத்துக்கணிப்புகள் கூறுவதால், இந்த கட்சிகள் அ.தி.மு.க., பக்கம் போவதற்கான வாய்ப்புகள் குறைவு.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க.,வுக்கு உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுவது, பா.ஜ.,வும், அதன் தமிழக தலைவர் அண்ணாமலையும் தான் என்பது மக்களுக்கு தெரியும். ஆளுங்கட்சியின் ஊழலை, குடும்ப ஆட்சியின் அவலங்களை, அவர் மிகவும் தெளிவாக விளக்குகிறார்.

அவரின் பாத யாத்திரையில் பொதுமக்கள், இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்வதில், அவர் காட்டும்முனைப்பும், கடும் உழைப்பும், தேர்தலில் நல்ல பலனை தரும் என, மக்கள் நம்புகின்றனர்.

தமிழக நிலை இப்படி மாறிக் கொண்டிருக்கும் போது, அ.தி.மு.க., அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டதாகவே தெரிகிறது. எப்போதும், நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் காணப்படும் பழனிசாமி, சிறுபான்மை மக்களின் கூட்டத்துக்கு அப்படி வருவதில்லை.

தொலைக்காட்சி விவாதங்களுக்கு வரும் சில தி.மு.க., தலைவர்கள், புதிய கட்சி துவங்கியிருக்கும் விஜய், நெற்றியில் விபூதி, குங்குமத்தோடு இருக்கின்றனர். ஊழலை எதிர்க்க கட்சி துவங்கிய கமல்ஹாசன் தி.மு.க., கொடுக்கும் ஒரு சீட்டுக்காக எப்படியெல்லாம் வளைந்து போகிறார்.

தேர்தல் வந்து விட்டால், தமிழகம் ஒரு சர்க்கஸ் கூடாரமாக மாறும் என்பது அனைவருக்கும் தெரியும். எந்த கட்சி எங்கிருக்கும், எங்கே தாவும் என்பது யாருக்கும் தெரியாது. பெரிய கட்சிகள் கொடுக்கும் ஒன்றிரண்டு தொகுதிகளுக்காக, காலம் முழுக்க பேசும் கொள்கைகளை, காற்றில் பறக்க விடுவது தமிழக அரசியல் தலைவர்களின் வாடிக்கை தானே!



விஜய் கட்சியின் செயல்திட்டம் என்ன?


குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில், கட்சி துவங்கிய நடிகர் விஜய், தமிழகத்தில் நல்லாட்சியை விரும்பும் மக்களின் சில சந்தேகங்களையும் விரைவில் போக்கினால், அது அவரது அரசியல் பயணத்துக்கு உறுதுணையாய் அமையும்...

அவர், தன் அறிக்கையில் முக்கிய கொள்கைகளாக, லஞ்சம், ஊழலற்ற திறமையான நிர்வாகம் மற்றும் ஜாதி, மத பேதமற்ற அரசியல், நிர்வாகம் என்பவற்றை குறிப்பிடுகிறார். மேலும், தமிழகத்தில் நல்லிணக்கத்தை பேணும் வகையில், தன் அரசியல் பயணம் இருக்கும் எனவும், அறிவித்துள்ளார்.

முதலில் அவர் தமிழகத்தில் தலை விரித்தாடும் ஊழலை ஒழிக்க, என்னென்ன திட்டம் வகுத்துள்ளார்... அதை எப்படி, நடைமுறைப்படுத்தப் போகிறார்... அமல்படுத்த எவ்வளவு காலம் எடுத்துக் கொள்வார் என்பதை, தெளிவாக மக்களுக்கு விளக்க வேண்டும்...

அடுத்ததாக, ஜாதி, மத பேதங்களை களைய, என்ன மாதிரியான ஆக்கப்பூர்வ திட்டங்களை வகுத்துள்ளார்? உதாரணமாக, தேர்தலில் ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவதை, அவர் எப்படி களைய போகிறார் என்பதையும் திட்டவட்டமாக, தெள்ளத் தெளிவாக தெரிவிக்க வேண்டும்...

மேலும், சாமானியர்களும் தேர்தலில் பங்கு கொள்ளும் வகையில், பணம் விளையாடும் தேர்தல் அரசியலை சுத்தப்படுத்த என்ன செய்ய போகிறார் என்பதை அறிவிக்க வேண்டும்.

இதற்கெல்லாம், ஒரு தெளிவான செயல் திட்டத்தை, நடிகர் விஜய் தமிழக மக்களுக்கு தெரிவித்தால், அவரது கட்சியின் நம்பகத்தன்மை உயரும்; அவருக்கு பிரகாசமான, அரசியல் எதிர்காலமும் அமையும்; மக்களின் ஆதரவும் விஜய்க்கு கிடைக்கும்.








      Dinamalar
      Follow us