/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
அ.தி.மு.க., ஆட்சியில் என்ன செய்தனர்?
/
அ.தி.மு.க., ஆட்சியில் என்ன செய்தனர்?
PUBLISHED ON : பிப் 03, 2024 12:00 AM
டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்த அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக முதல்வர் ஸ்டாலின், எங்கு பார்த்தாலும் தன் தந்தை கருணாநிதி பெயரை வைக்கிறார். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முகப்பில் கருணாநிதி சிலையை வைத்துள்ளனர்' என்று, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பழனிசாமியின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில், கருணாநிதி காலத்தில் கட்டப்பட்ட, கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்., பெயரை சூட்டியதோடு நிறுத்தி கொண்டார். வருங்கால சந்ததிகள் தெரிந்து கொள்ளும் வண்ணம், அங்கு எம்.ஜி.ஆர்., சிலையை வைத்திருக்கலாம்; அதை ஏன் அ.தி.மு.க., அரசு செய்யவில்லை?
அதுபோல, தான் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட ஓமந்துாரார் மருந்துவமனை முன், ஜெயலலிதா அவரது சிலையை வைத்திருக்கலாம்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அங்கு கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடுவை வைத்து திறந்து விட்டனர்.
சென்னை, நந்தனம் ஓய்வூதிய அலுவலக வளாகத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்தத்திற்கு, 'ஜெயலலிதா வளாகம்' என்று பெயர் வைத்தனர். ஆனால் தி.மு.க., ஆட்சியில் அந்த அலுவலகத்திற்கு,'பேராசிரியர் அன்பழகன் மாளிகை' என்று பெயர் வைத்து, அவரது சிலையையும் நிறுவி விட்டனர்.
எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழாவை பிரதமரையோ அல்லது ஜனாதிபதியையோ அழைத்து, மிக பிரமாண்டமாக நடத்தி இருக்கலாம்; ஆனால், அந்த விழாவை தெருமுனை கூட்டம் போல் நடத்தி விட்டனர்.
ஆனால், தி.மு.க., ஆட்சியில், கருணாநிதி நுாற்றாண்டு விழாவை, முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தை அழைத்து பிரமாண்டமான முறையில் நடத்தி விட்டனர்.
சென்னை கடற்கரை அருகில், மக்கள் கண்களில் படாத உயர்கல்வி மன்ற வளாகத்தில், ஜெயலலிதாவின் சிலையை அ.தி.மு.க., ஆட்சியில் வைத்துள்ளனர்.
தி.மு.க.,வினரோ ஆட்சிக்கு வந்தவுடன், நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி வளாகத்தின் நுழைவாயிலுக்கு, 'அன்பழகன் வளாகம்' என பெயர் சூட்டி, கல்வெட்டு அமைத்து, அவரது சிலையையும் வைத்துள்ளனர்.
ஜெயலலிதா தான் முதல்வராக பதவி வகித்த காலத்தில், தன்னை அரசியலில் உயர்த்தி விட்ட ஆசான், எம்.ஜி.ஆரின் பெயரை ஒரு அரசு அலுவலகத்திற்காவது சூட்டியது உண்டா அல்லது அவரின் சிலையை தான் வைத்தது உண்டா? இதற்கு ஜெயகுமார் பதில் சொல்வாரா?
செந்தில் பாலாஜிக்கு இனியும் பதவி தேவையா?
வி.பத்ரி,
கிளாம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
-மெயில்' கடிதம்: கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விசாரணை கைதியாக,
சிறையிலிருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்து
வருகிறார்.
செந்தில் பாலாஜி, முன்பு அ.தி.மு.க., அரசில்
போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, அவர் செய்த முறைகேடுகளுக்காக,
ஆதாரத்தின் அடிப்படையில் அவரை அமலாக்கத் துறை கைது செய்து சிறையில்
அடைத்துள்ளது.
ஆனால், அவர் இதுவரை இலாகா இல்லாத அமைச்சராகவும்,
மக்கள் வரிப்பணத்தில் அமைச்சருக்குண்டான ஊதியத்தையும், இதர சலுகைகளையும்
அனுபவித்து வருகிறார்.
இதுவே ஒரு சாதாரண அரசு ஊழியர் சிறையில் இருந்தால், அவரையும் பதவி இல்லாத ஊழியராக வேலையில் தொடர அனுமதிப்பரா?
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டோர் யாராக இருந்தாலும், ஊழல் குற்றச்சாட்டுக்கு
ஆளானால், தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்கும் வரை, பதவியைத் துறந்து
வழக்கை எதிர் கொள்வது தானே நேர்மையான செயலாக இருக்க முடியும்?
ரயில்வே
அமைச்சராக லால்பகதுார் சாஸ்திரி இருந்தபோது, 1956ல் நடைபெற்ற அரியலுார்
ரயில் விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, தன் அமைச்சர் பதவியைத் துறந்தார்.
தன் கீழ் நடக்கும் நிர்வாகத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டதே
என்ற குற்ற உணர்ச்சி அவரிடம் மேலோங்கியது தான் இதற்கு காரணம்.
ஆனால், ஊழல் வழக்கில் சிறை சென்றாலும், பதவியை விட மனம் இல்லாதோரிடம் குற்ற உணர்ச்சி எங்கிருந்து வரும்?
'செந்தில்
பாலாஜி எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்' என உயர்
நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, இனியும், 'இது முதல்வருக்கான
தனிப்பட்ட உரிமை' என ஆளுங்கட்சியினர் வாதிடாமல், செந்தில் பாலாஜியை
அமைச்சரவையில் இருந்து நீக்கி வைப்பது தான், சரியான நடைமுறையாக இருக்கும்.
கமல் கட்சியின் கொள்கைகள் என்ன?
எஸ்.கண்ணம்மா,
விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில்,
இப்பகுதியில் மதுரை வாசகர் ஒருவர், 'நேர்மையான கமலை புறக்கணிக்காதீர்கள்'
என்ற தலைப்பில் கடிதம் எழுதி இருந்தார். அவர் புறக்கணிக்கப்படுவது அவரது
நேர்மையற்ற கொள்கைகளால் தான்.
அவர் நல்ல நடிகர் என்பதில் எள்ளளவும்
அய்யமில்லை. மறைந்த சோ, ஒரு நிகழ்ச்சியில், 'நான் நல்லவன் தான்; ஆனால்
எனக்கு அரசியல் ஒத்து வராது. அரசியலுக்கு நல்லவனாக இருந்தால் மட்டும்
போதாது' என்று கூறியிருப்பார்.
அரசியலுக்கு வர வேண்டும் என்றால்,
மக்களுக்கு நன்மை செய்யும் நல்ல திட்டங்களும், ஆளுமையும் தலைவனுக்கு
கண்டிப்பாக வேண்டும். இவை இரண்டும் விஜயகாந்திடம் இருந்தும், அவரால்
முதல்வராக முடியவில்லை என்பது துரதிர்ஷ்டமே!
ஆனால், கமலிடம்
இத்தகைய பண்பு இருக்கிறதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்
செய்யும் ஓட்டு அரசியல், உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரியும்.
அவருடைய கடவுள் மறுப்பு கொள்கையும், கிட்டத்தட்ட திராவிட மாடல் தான். ஹிந்து கடவுள்கள் இல்லை. கிறிஸ்துவ, முஸ்லிம் கடவுள்கள் உண்டு.
'பிக்பாஸ்'
நிகழ்ச்சியில் ஜி.பி.முத்துவை சங்கியா, மங்கியா என்று கலாய்த்தவர்,
வெளிநாட்டு விமான நிலையத்தில் அவர் பெயரை வைத்து சந்தேகத்துடன் சோதனை செய்த
போது, 'நான் ஒரு ஹிந்து' என்று கூறி, அந்தர்பல்டி அடித்தார்.
அ.தி.மு.க.,
ஆட்சியில் சென்னையில் வெள்ளம் வந்த போது, ஆட்சியாளர்களை குறை கூறிய அவர்,
தி.மு.க., ஆட்சியில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில், சென்னை
வெள்ளக்காடான போது, மக்களை அரசுடன் ஒத்துழைக்குமாறு பிளேட்டை திருப்பி
போட்டார்.
தி.மு.க., கொடுக்கப் போகும் ஒரு சீட்டுக்காக, அவர்களுக்கு
பலமாக ஜால்ரா அடிக்கிறார். நல்லவராக இருந்த கமல், வெள்ளத்தால் கஷ்டப்பட்ட
மக்களுக்கு என்ன செய்தார்?
அவர் கட்சிக்கு என்று என்ன கொள்கை
இருக்கிறது... அவர் ஆட்சி அமைத்து மக்களுக்கு என்ன செய்ய போகிறார்...
அவருடைய மக்கள் நலத் திட்டங்கள் என்ன... பல நேரங்களில் அவர் பேசுவது,
அவருக்கே புரியாது. இப்படிப்பட்ட கமலுக்கு ஓட்டளித்தால், மக்கள் கண்டிப்பாக
வேதனைதான் பட வேண்டும்.

