PUBLISHED ON : அக் 02, 2025 12:00 AM

எஸ்.சுப்பிரமணி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் தேர்வு எழுதும்போது, குறிப்பிட்ட ஒரு மாணவனின் விடைத் தாளின் மீது சந்தேகம் இருந்தால், அதை திருத்தி மதிப்பெண்கள் போட்டிருந்தாலும், முடிவை வெளியிட மாட்டர். மாறாக, 'வித்ஹல்ட்' என்று குறிப்பிட்டு தனியாக எடுத்து வைத்து விடுவர். பிரச்னை முடிவுக்கு வந்த பின்பே, தேர்வு முடிவை வெளியிடுவர்.
ஒரு சாதாரண பள்ளி - கல்லுாரி தேர்வு முடிவுகளுக்கே இவ்வளவு சட்ட திட்டங்கள் இருக்கையில், ஒரு மாநிலம், நாட்டின் மக்கள் பிரதிநிதியின் தேர்தல் வெற்றி குறித்து சந்தேகம் எழுந்து, விவகாரம் நீதிமன்ற படியேறினால், குறிப்பிட்ட அந்த வேட்பாளரை பதவியேற்க அனுமதிக்காமல், 'வித்ெஹல்ட்'என்று குறிப்பிட்டு, வழக்கு முடிவுக்கு வரும் வரை அவர் சட்டசபை மற்றும் பார்லிமென்ட் நடவடிக்கைகளில் பங ் கேற்பதை நிறுத்தி வைப்பது தானே முறை?
ஆனால், நடைமுறையில் என்ன நடக்கிறது... வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும்... சம்பந்தப்பட்டவர் பதவியேற்று, அந்த பதவிக்குரிய ஊதியம், இதர படிகள் மற்றும் சலுகைகளை அனுபவித்து கொண்டிருப்பார்!
இதே போன்று தான், 2011 சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக குற்றஞ்சாட்டி, ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, அ.தி.மு.க., முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனு தள்ளுபடி ஆனதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 14 ஆண்டுகளுக்கு பின் அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வுக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
கடந்த 2011 -- 2016 வரை நடந்த அத்தனை சட்டசபை கூட்டங்களிலும் ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார். சட்டசபை உறுப்பினருக்குரிய மாத ஊதியம், படிகள் மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் அனுபவித்தும் இருப்பார். இப்போது ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன?
அப்படியே ஸ்டாலின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வந்தால், 2011 - 2016 வரை அவர் வாங்கிய சம்பளம், படிகள் ஆகியவற்றை திருப்பி கொடுத்து விடுவாரா?
சம்பளத்தையும், படிகளையும் திருப்பி கொடுப்பதாக வைத்து கொண்டாலும், சட்டசபை உறுப்பினருக்கு என்று வழங்கிய சலுகைகளை எப்படி திருப்பி கொடுக்க முடியும்?
எனவே, தேர்தல் வெற்றியின் மீது சந்தேகம் எழுந்து, அது நீதிமன்றத்தின் கதவை தட்டினால், அந்த வழக்கின் மீது முடிவான தீர்ப்பு வரும் வரை, வெற்றி பெற்ற வேட்பாளர் பதவியேற்க கூடாது என்ற சட்டத்திருத்தம் வரும் வரை, இதுபோன்ற அபத்தங்கள் நீடித்து கொண்டுதான் இருக்கும்!
lll
தனிமனித கட்டுப்பாடு அவசியம்! ஸ்ரீ. பூவராகவன், படியூர்,
காங்கேயத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்பெல்லாம் ஒவ்வொரு
ஊரிலும் திடல் என்ற பெயரில் பெரிய மைதானம் இருக்கும். அரசியல் கட்சித்
தலைவர்கள் தங்கள் கூட்டத்தையோ, மாநாடுகளையோ, பரப்புரைகளையோ அங்கு தான்
நடத்துவர்.
உதாரணத்திற்கு, மதுரை என்றால் தமுக்கம் மைதானம், தஞ்சை
என்றால் திலகர் திடல், திருச்சியில் ஜி கார்னர் போன்ற பெரிய மைதானங்களில்
தான் கூட்டங்கள் நடைபெறும்.
ஆனால், இப்போதெல்லாம் ரோடுகளில் தான்
அரசியல் கூட்டங்களை நடத்துகின்றனர். ரோடு என்பது போக்குவரத்திற்கு தானே
தவிர, கூட்டங்கள் நடத்தும் இடம் அல்ல. அத்துடன், இங்கே கூட்டங்கள், ரோடு
ஷோ நடத்த அனுமதி கேட்பதும் தவறு; அனுமதி அளிப்பதும் தவறு!
'ரோட்டில் கிரிக்கெட் விளையாட்டு நடத்த வேண்டும்' என்று விளையாட்டு அமைப்பு
அனுமதி கேட்டு விட முடியுமா? விளையாட வேண்டும் என்றால், அதற்கான மைதானங்
களில் தானே விளையாட வேண்டும்.
அப்படி இருக்க, அரசியல் கட்சிகளுக்கு மட்டும் ரோடுகளில் கூட்டங்கள் நடத்த எவ்வா று அனுமதிக்கின்றனர்?
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று எந்தக் கட்சியாக இருந்தாலும், சாலையை
மறித்து மேடை போடுவதும், கூட்டம் நடத்துவதும், ரோடு ேஷா நிகழ்த்துவதும்
அடிப்படையிலே தவறான செயல். தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர்
கூட்டத்தில் பெரும் உயி ரிழப்பு ஏற்பட்டுள்ளது.
குறுகிய சாலையில்
அனுமதி கொடுத்தது அரசின் தவறு என்றால், கூட்டத்தை சரியாக வழிநடத்தாதது
த.வெ.க., ஒருங்கிணைப்பாளர் கு ழுக்களின் தவறு.
பொறுப்பற்ற
இவர்களால், 41 உயிர்கள் பறிபோயியுள்ளன. இப்போதும் கூட தவறை எவரும்
உணர்ந்ததாக தெரியவில்லை. 'உயிரிழப்பு களுக்கு காரணம் அவர் தான், இவர்
தான்... நான் இல்லை, அவரில்லை...' என்ற யூக விளையாட்டு விளையாடுகின்றனர்.
தனிமனித கட்டுப்பாடு, ஒழுக்கம் இல்லாத வரை, இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்கதையாகத் தான் இருக்கும்!
lll
ரோஷம் வரலாமா? என்.ஏ.நாகசுந்தரம், குஞ்சன்விளை, கன்னியா குமரி
மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'செல்வப்பெருந்தகையின் அரசியல், யாசகரின் ஒட்டுப் போட்ட சட்டையைப் போல்
இருக்கிறது' என்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சனம் செய்ய,
செல்வப்பெருந்தகையை அவமரியாதை செய்து விட்டார் என்று போராட கிளம்பி
விட்டனர் தமிழக காங்கிரசார்.
அரசியல்வாதி என்றால் ஆயிரம்
விமர்சனம் இருக்கத் தான் செய்யும். விமர்சனத்துக்கு அப்பாற்றபட்ட
அப்பழுக்கற்ற உத்தமரா செல்வப்பெருந்தகை?
தி.மு.க., - எம்.பி.,
திருச்சி சிவா, காமராஜரை இழிவுபடுத்தியபோது வராத ரோஷம், செல்வப்பெருந்தகை
குறித்து விமர்சனம் செய்ததும் பொங்குவது ஏன்?
பேசியவர் எதிர்க்கட்சி தலைவர் என்பதாலா?
காங்.,கட்சியை உருவாக்கி, செதுக்கிய தலைவர்களை தி.மு.க., விமர்சித்தால்,
சீட்டுக்காக காங்கிரசாரின் காதுகள் கேட்கும் திறனை இழந்து விடும்; வாய்
பேசும் சக்தியை துறந்து விடும். அதேநேரம், பல கட்சிகள் தாவி, பதவிக்காக
காங்கிரசில் தஞ்சம் புகுந்தவர் குறித்து எதிர்க்கட்சி விமர்சித்தால்
பொங்குவீர்களா?
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை தி.மு.க., விடுதலை செய்து, விருந்து வைத்தபோது வராத ரோஷம் இப்போது வருவது ஏன்?
'உடன் இருந்து கொல்லும் வியாதி' போல், கூட்டணி வைத்தே, தமிழகத்தில் காங்.,
கட்சியை மெல்ல மெல்ல அழித்து, இன்று தங்கள் தயவு இல்லாமல் தமிழகத்தில்
காங்., கட்சியே இல்லை என்ற நிலைக்கு உருவாக்கியது யார்?
இதில்,
'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடையாளம் தருவது தி.மு.க.,' என்று
கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் கூறுகின்றனர் காங்கிரசார்.
கூட்டணி
கட்சி என்ற ஒரே காரணத்திற்காக, தி.மு.க., மக்கள் விரோத காரியங்களை
செய்தாலும், வாய் மூடி மவுனம் காக்கும் காங்கிரசாருக்கு ரோஷம் வரலாமா?
lll