PUBLISHED ON : ஜூலை 02, 2025 12:00 AM

எஸ்.ஆர்.ரத்தினம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தி.மு.க.,வின் நிம்மதி தொலைந்து போனது. தங்கள் பயத்தை, கடுமையான விமர்சனம் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். 'அ.தி.மு.க., - பா.ஜ., பொருந்தாத கூட்டணி' என்பது முதல், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கட்சியை பா.ஜ.,விடம் அடகு வைத்து விட்டார். அமித் ஷா அவரை மிரட்டி பணிய வைத்துவிட்டார்...' என்றெல்லாம் வரம்பு மீறி விமர்சித்து வருகின்றனர்.
இதை சில அறிவுஜீவிகளும், 'அரசியல் விமர்சகர்கள்' என்ற பெயரில் ஒத்து ஊதுவதுதான் கொடுமை!
ஆளுங்கட்சியை தோற்கடிக்க, இரண்டு அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வது என்ன உலகத்தில் இல்லாத அதிசயமா? எல்லா மாநிலங்களிலும் நடப்பது தானே!
தி.மு.க., அதிகாரத்தில் இருப்பதால், தங்கள் கூட்டணி பலமாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளது. தேர்தல் நெருங்கும் போதுதான் தெரியும்; அவற்றில் எத்தனை கழன்று கொள்ளப் போகின்றன என்று!
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை கணிசமான ஓட்டு வங்கி இருந்தாலும், தி.மு.க.,வை வீழ்த்த அது போதுமானதாக இல்லை என்பதே உண்மை. இதை கடந்த மூன்று தேர்தல்களிலும் கட்சி தலைமை நன்றாகவே உணர்ந்து விட்டது.
இந்நிலையில், வேறு கட்சிகளும் கூட்டணிக்கு வர தயங்கும் நிலையில், அக்கட்சி தங்கள் பலத்தை கூட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பா.ஜ.,வை பொறுத்தவரை தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி. இன்றைய நிலையில் தனியாக நின்று, தி.மு.க.,வை வீழ்த்த முடியாது.
ஆகவே, பலமான கூட்டணியில் இணைய வேண்டிய தேவை அக்கட்சிக்கு உள்ளது.
இப்படி இரு கட்சிகளுமே தங்களின் எதிர்கால வெற்றியை மனதில் கொண்டு, சில முரண்பாடுகளை மறந்து கூட்டணி அமைத்துள்ளன.
இதில், 'மிரட்டப்பட்டனர், கட்சியை அடமானம் வைத்துவிட்டனர், அமித் ஷாவிடம் மண்டியிட்டுவிட்டனர்' என்பதெல்லாம் பித்தலாட்ட பிரசாரம்!
அப்படியென்றால், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளை மிரட்டி தான் தி.மு.க., கூட்டணியில் வைத்துள்ளதா? அவர்கள் தங்கள் கட்சியை தி.மு.க.,விடம் அடமானம் வைத்து விட்டனரா அல்லது தி.மு.க.,வின் மிரட்டலுக்கு மண்டியிட்டு விட்டனரா?
தி.மு.க.,வின் இத்தகைய மலிவான அரசியல், இனியும் மக்களிடம் எடுபடாது!
குருகுல கல்வியை குறை சொல்லலாமா?
ஆர்.சுகுமாறன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆன்மிக அடையாளமான
கயிறு, ருத்ராட்சத்தை அணியக்கூடாது என, தி.மு.க.,வின் மதசார்பற்ற
பள்ளிகள்தான் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன.
'ருத்ராட்சம் அணிவது,
ஜாதி பேதங்களை தகர்க்கும்; ஆன்மிகத்தை வளர்க்கும் என, அண்ணாமலை கூறியது
இவர்களுக்கு ஏன் உறுத்துகிறது. ஹிந்து என்ற ஒரே குடையின் கீழ் அனைத்து
ஜாதியினரும் வந்து விட்டால், இவர்கள் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும்.
'அமைச்சருக்கு
பள்ளிக்குள் ருத்ராட்சம் அணிவது பிற்போக்குத்தனமாக தெரிகிறது. ஆனால்,
பள்ளிக்கூடமே இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்துவது கேவலமாகத்
தெரியவில்லையா...' எனக் கேட்டுஉள்ளார், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர்.
ஹிந்து என்ற ஒரே குடையின் கீழ் அனைத்து ஜாதியினரையும் கொண்டுவரத் துடிக்கிறது, பா.ஜ.,
ஆனால், திராவிட மாடல் அரசோ, 'டாஸ்மாக்' என்ற சரக்கின் வாயிலாக ஒரே, 'குடி'யின் கீழ் அனைத்து ஜாதியினரையும் அரவணைத்து கொண்டுள்ளது.
பள்ளிக்கூடமே இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்துவது பா.ஜ., வினருக்கு கேவலமாக தெரிகிறது.
ஆனால்,
திராவிட மாடல் அரசுக்கோ, இயற்கை சூழ்நிலையில், காற்றோட்டமாக, பண்டைய
காலத்தில் மரத்தடியில்,'குருகுலக் கல்வி' எப்படி கற்பிக்கப்பட்டதோ,
அதேபோன்று மாணவர்கள் குருவுக்கு பீடி, சிகரெட், டீ, பிஸ்கட் வாங்கி வருவது,
பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை
செய்தவாறே கல்வி கற்க வாய்ப்பளிப்பதாக நினைக்கிறது.
இதற்காக, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற ரீதியில் அரசை விமர்சிக்கலாமா?
ராமாயணம் மற்றும் மஹாபாரத சகோதரர்களே வசிஷ்டர், துரோணாச்சாரியாரிடம் மரத்தடிகளில் அமர்ந்து தான் கல்வி கற்றனர்.
அதனால், மரத்தடியில் பாடம் படிப்பதை எல்லாம் சேகர் குற்றமாக சொல்லலாமா?
பிளாஸ்டிக் நாற்காலிக்குள் சமூக நீதி!
ஜி.சூர்யநாராயணன்,
விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: --சமத்துவம்
என்பதை எல்லா நிலையிலும் கடைப்பிடிக்க முடியாது. 'நானும் காக்கி சட்டை;
நீயும் காக்கி சட்டை. நான் ஏன் காவல் நிலையத்தில் பணி புரிய கூடாது?' என்று
ஒரு வாட்ச்மேன் போலீசை பார்த்து கேட்க முடியாது.
அதுபோன்று,
தி.மு.க., - எம்.பி., ராசா, வி.சி., தலைவர் திருமாவளவன் போன்றோர், தங்கள்
கட்சிக்குள் உள்ள பிரச்னையை திசை திருப்ப, இதுபோன்ற அறிவீலித்தனமான
கேள்விகளை கேட்டு மடை மாற்றுகின்றனர்.
திட்டமிட்டு மொபைல் போனை
கண்ணாடியாக்கி, இரு விரலால் விபூதியை அழித்து விட்டு, எதிர்க்கட்சிகள்
கண்டனம் தெரிவித்ததும், 'நான் விபூதியை அழிக்கவில்லை. வியர்வையைத் தான்
துடைத்தேன்...' என்று சமாளித்தார், திருமாவளவன்.
இப்போது, 'நான் விபூதி வைத்துக் கொண்டால் மட்டும் என்னை கருவறைக்குள் விடுவரா?' என்று கேட்கிறார்.
பகுத்தறிவு
இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் இவரது கூட்டணி கட்சியினரே தங்கள் வீட்டு
நாற்காலியில் இவருக்கு இடம் கொடுக்காமல், பிளாஸ்டிக் நாற்காலி தான்
கொடுக்கின்றனர்!
அதனால், முதலில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
கூட்டணியை விட்டு வெளியே வந்து, சமூக நீதிக்காக போராடட்டும்; அப்புறம்
பார்க்கலாம் கருவறைக்குள் போவதை!
வாழ்க ஜனநாயகம்!
மகிழ்நன்,
கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முதல்வர்
ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை பார்த்து,
'அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார்' என்கிறார். பதிலுக்கு பழனிசாமி,
'முதல்வர் மாய உலகில் வாழ்கிறார்' என்கிறார்.
இது வெறும் வார்த்தைப்போர் அல்ல; வன்ம அரசியல்!
உண்மையில்,
இவர்கள் எவரும் அரைவேக்காடோ, மாய உலகில் வாழ்கிறவர்களோ அல்ல; இவர்களை
தேர்ந்தெடுத்த நாம் தான் அரைவேக்காடுகள், மாய உலகில் வாழ்கிறவர்கள்.
வாழ்க ஜனநாயகம்!