/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
திருமாவளவனின் பயத்திற்கு காரணம் என்ன?
/
திருமாவளவனின் பயத்திற்கு காரணம் என்ன?
PUBLISHED ON : அக் 09, 2025 12:00 AM

கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'விஜயை கைது செய்ய வேண்டிய சூழல் வந்தால், தவிர்க்க முடியாத ஆதாரங்கள் இருப்பின் நிச்சயமாக கைது செய்வோம். தேவையில்லாமல் எவரையும் கைது செய்ய மாட்டோம். எல்லா விஷயத்திலும் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியம், தி.மு.க.,வுக்கு இல்லை' என்று கூறியுள்ளார், அமைச்சர் துரைமுருகன்.
அதேநேரம், தி.மு.க., கூட்டணியில் உள்ள வி.சி., தலைவர் திருமாவளவன், 'தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விஜய் மீது வழக்கு போடாதது ஏன்? விஜய்க்கும், தி.மு.க., வுக்கும், 'அண்டர் கிரவுண்ட் டீலிங்' இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது' என்று கூறியுள்ளார்.
வி.சி., கட்சியில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள், விஜயின் ரசிகர்கள். தற்போது, அவர்கள் த.வெ.க., ஆதரவாளர்களாக மாறி இருப்பதால், எங்கே தம் கட்சி கரைந்து காணாமல் போய் விடுமோ என்ற பயம் திருமாவளவனுக்கு தொற்றிக் கொண்டுள்ளது. அதனால் தான், விஜயின் அரசியல் பிம்பத்தை சிதைக்க நினைக்கிறார்.
திருமாவளவன் சந்தேகத்தை போக்க, விஜய் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தால், அவரது ரசிகர்களுக்கும், த.வெ.க., தொண்டர்களுக்கும் தி.மு.க., மீது வெறுப்புணர்வு ஏற்படும்.
இது, 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு சரிவை உண்டாக்கும்.
மேலும், இதையே முன்மாதிரியாக எடுத்து, மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் ஐந்து பேர் உயிரிழந்ததற்காக, அப்போது மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் உட்பட முக்கிய பிரமுகர்கள் மீது, த.வெ.க.,வினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடலாம்!
இதையெல்லாம் யோசித்து தான் விஜயை கைது செய்வதை தவிர்த்து வருகிறது, தி.மு.க.,
ஆனால், விஜயின் அரசியல் வருகை, திருமாவளவனின் அடிமடியில் கை வைத்துள்ளதால், அவரை இப்படியெல்லாம் புலம்ப வைத்துள்ளது!
பரிந்துரைத்த பின் பரிகாசம் ஏன்? ஆர்.கோவிந்தன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
மத்திய அரசு எதைச் செய்தாலும், அதை எதிர்த்தே தீருவது என்ற கொள்கையோடு
இயங்கி கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசு, காவல் துறை தலைவர் மற்றும்
சட்டம் - -ஒழுங்கு டி.ஜி.பி., நியமனத்திற்கு மத்திய அரசு பரிந்துரைத்த
பெயர்களை பரிகாசம் செய்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய யோசித்து
வருகிறதாம்.
ஒரு படத்தில், நகரில் பயங்கரவாதிகள் ஆங்காங்கே
வைத்திருக்கும் வெடிகுண்டுகளை, கதாநாயகன் துல்லியமாக கண்டறிந்து செயலிழக்க
வைப்பார். அது குறித்து, வில்லன் நடிகர், 'இவரே குண்டு வைப்பாராம்... அதை
இவரே கண்டுபிடிப்பாராம்' என்று ஏளனமாகவும், எகத்தாளமாகவும் கூறுவார்.
அதுபோல், தமிழகத்தின் டி.ஜி.பி., பதவிக்கு மத்திய அரசு தானாக எந்தப்
பெயரையும் பரிந்துரை செய்யவில்லை. தமிழக அரசு பரிந்துரைத்த பட்டியலில்
இருந்து தான் மூன்று பேரை தேர்வு செய்து, அதிலிருந்து, ஒருவரை நியமனம்
செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளது.
தீயணைப்பு துறை இயக்குநர் சீமா
அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரி ராஜிவ்குமார் மற்றும் காவல்
துறை பயிற்சியகத்தின் இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோட் ஆகியோர் தான் அந்த
மூவர்.
இவர்களில் ஒருவரை, சட்டம்- - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக தமிழக அரசு நியமனம் செய்ய வேண்டும் என, யு.பி.எஸ்.சி., அறிவுறுத்தி உள்ளது.
சீமா அகர்வால், சட்டம்- - ஒழுங்கு பிரிவில் குறைந்த ஆண்டுகளே
பணிபுரிந்துள்ளார் என்றும், மேலும் அவர் சீருடை பணியாளர் தேர்வாணையத்தில்
தலைவராக இருந்த போது, உதவி இன்ஸ்பெக்டர் தேர்வை முறையாக நடத்தவில்லை
என்றும், சந்தீப்ராய் ரத்தோட் மீது விஜிலென்ஸ் விசாரணை நிலுவையில் உள்ளது
என்றும், ராஜிவ்குமார் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் கூறி,
யு.பி.எஸ்.சி., பரிந்துரையை ஏற்க மறுத்து, திராவிட மாடல் அரசு, உச்ச
நீதிமன்றத்தை நாட ஆலோசித்து கொண்டிருக்கிறதாம்.
புதிய டி.ஜி.பி.,
நியமனத்திற்கான அதிகாரிகளின் பெயர் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பும்
போது, மேற்குறிப்பிட்ட மூன்று பேர் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில்
உள்ளது திராவிட மாடல் அரசுக்கு தெரியாதா அல்லது பட்டியலை அனுப்பிய பின்
தான், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதா?
இவர்களே பரிந்துரைப்பராம்... பின் இவர்களே பரிகசிப்பராம்!
காவல் துறையின் நிர்வாக பிரிவில் பணிபுரிந்த வெங்கட்ராமனை, தற்போது
பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமித்து இருப்பது போன்று, தமிழர் எவரும்
அப்பட்டியலில் இல்லை போலும். அதனால் தான் இந்த வெறுப்பும், கசப்பும்!
***
நீதிபதிகள் காலிப்பணியிடங்கள் நிரப்புவது எப்போது? சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்:
நாடு முழுதும் பல்வேறு நீதிமன்றங்களில், 5.34 கோடி வழக்குகள் நிலுவையில்
உள்ளன. அதேநேரம், நாட்டில் உள்ள, 25 உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட
மொத்த நீதிபதிகளின் பணியிடம், 1,122. ஆனால், 792 நீதிபதிகள் மட்டுமே
பணிபுரிகின்றனர்; 330 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், உயர்
நீதிமன்றங்களில் மட்டும், 67 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில்
உள்ளன.
பொதுநல வழக்கு, முன்ஜாமின், ஆட்கொணர்வு மனு, சிவில்
வழக்குகள், கிரிமினல் வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மேல்முறையீடு,
அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போடும் வழக்குகள், பணமோசடி, சைபர்
குற்றங்கள் என, வழக்குகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில், வக்கீல்கள் திட்டமிட்டே வழக்குகளை பல ஆண்டுகளாக இழுத்தடிக்கின்றனர்.
இந்நிலையில், நீதிபதிகள் பற்றாக்குறையும் இணைந்து, வழக்கு விசாரணை
தேக்கமடைகிறது.
'தாமதமாக கிடைக்கும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி' என்பது சட்ட பழமொழி.
சிறு சிறு குறைபாடுகள், பேசி தீர்க்க வேண்டியவை, எளிதில் சமரசம் செய்து
கொள்ளக்கூடிய நிலையில் இருப்பவை கூட நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுகின்றன.
இவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
வளர்ந்து வரும் நம் நாட்டில்,
வழக்குகள் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதை ஈடு செய்யும்
பொருட்டு, மத்திய - மாநில அரசுகள் விரைந்து காலிப்பணியிடங்களை நிரப்ப
வேண்டும். அப்போதுதான், வழக்குகள் துரிதமாக விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள்
வழங்கப்படும்.
விடிவு வேண்டி நம்பிக்கையுடன் நீதிமன்றங்களின் கதவை
தட்டுவோருக்கு, தாமதம் இன்றி கிடைக்கும் நீதியே அவர்கள் வாழ்வை
ஒளிபெறச்செய்யும்!
-