தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ புலம்பி என்ன பயன்?

 புலம்பி என்ன பயன்?

 புலம்பி என்ன பயன்?


PUBLISHED ON : பிப் 20, 2026 03:03 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 20, 2026 03:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வினைவலியும் தன்வலியும், மாற்றான் வலியும் துணைவலியும் துாக்கிச் செயல்' என்கிறது திருக்குறள்.

அதாவது, தான் செய்யும் செயலின் வலிமையும், தன் வலிமையும், மாற்றான் வலிமையும், துணைசெய்வோரின் வலிமையும் ஆராய்ந்தே, ஒரு செயலை செய்யவேண்டும் என்பதே இதன் பொருள்.

ஆனால், மறுமலர்ச்சி திராவிட கழக தலைவர் வைகோ, தன் வலிமை என்னவென்பதையும் அறியாமல், எதிரியின் வலிமையை கணிக்கும் திறனும் இல்லாமல், தன்னைத் தானே மேதாவி, உலக அரசியலை கரைத்துக் குடித்தவர், கம்பீரமாக உரக்க பேசும் பேச்சாற்றல் நிரம்பியவர் என்று மயக்கத்தில் ஆழ்ந்திருந்துவிட்டு, இப்போது, 'என் மீதான நம்பகத்தன்மையை, நானே நாசமாக்கி கொண்டேன்' என்று புலம்புகிறார்.

தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்த காலத்தில், வைகோவின் பேச்சைக் கேட்பதற்கு என்றே பெரும் கூட்டம் கூடும். அப்படிப்பட்டவரை கட்சியில் இருந்து கருணாநிதி வெளியேற்ற என்ன காரணம்?

எல்லாம் கள்ளத்தோணி விவகாரம் தான்!

கடந்த 1989ல், கட்சி தலைவரான கருணாநிதிக்கே தெரியாமல் ரகசியமாக வைகோ ஈழம் சென்றது, பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், கருணாநிதிக்குள் பல சந்தேகங்களை கிளப்பி விட்டது.

விளைவு, 'அரசியல் ஆதாயத்துக்காக விடுதலைப்புலிகள் ஆதரவுடன் என்னை கொலை செய்ய வைகோ திட்டமிட்டுள்ளார்' என்று கொலைப்பழி சுமத்தி, 1993ல் கட்சியில் இருந்து வைகோவை வெளியேற்றினார், கருணாநிதி.

அப்போது இவருடன் சேர்ந்து பல மாவட்ட செயலர்களும், ஏராளமான தொண்டர்களும் தி.மு.க.,வை விட்டு வெளியேறினர். பின், 'மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்' என்ற கட்சியை துவங்கினர்.

அப்போது, இவரும், இவரை நம்பி வந்தவர்களும் கூறியது என்ன?

'தி.மு.க.,வில் ஜனநாயகம் செத்து விட்டது; அக்கட்சியில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது' என்றனர். ஆனால், சிறிது காலத்திலேயே அவர்கள் ஒவ்வொருவராக விலகி சென்றனர்.

அது ஏன் என்று வைகோவால் கூற முடியுமா?

தன் அதிகாரத்தை தக்க வைக்க, பல கட்சிகளுடன் கூட்டணி கண்டார், வைகோ. ஜெயலலிதாவை புகழ்ந்து, அரசியல் செய்தார்; நடிகர் விஜயகாந்துடன் சேர்ந்து, மக்கள் நல கூட்டணி அமைத்தார்.

கடைசியில், எவரை எதிர்த்து கட்சி துவங்கினாரோ, அங்கேயே இப்போது சங்கமித்து விட்டார்.

அன்று, வாரிசு அரசியல் செய்வதாக கருணாநிதியை துாற்றியவர், இன்று தன் வாரிசை அரசியலில் வளர்த்து விட, கருணாநிதியின் வாரிசுக்கு குடைபிடிக்கிறார்; தலைமையின் மனம் குளிர, 'அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது மன்னிக்க முடியாத முடிவு' என்கிறார்.

இவரின் அரசியல் வீழ்ச்சிக்கு அ.தி.மு.க., காரணமல்ல; பச்சோந்தி போல், இருக்கும் இடத்திற்கு ஏற்ப பேசும் பேச்சுகளே காரணம்!

அதுதான், அவர் மீதான நம்பிக்கையை இழக்க வைத்துள்ளது. எனினும், கண்கெட்ட பின் சூரிய தரிசனம் செய்து என்ன பலன்?



ஏழைகள் மாற்றுமொழி படிக்கக் கூடாதா? ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தி.மு.க., கையில் எடுப்பது, 'ஹிந்தி திணிப்பு' என்ற அஸ்திரத்தை தான்!

இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த புளித்துப் போன மாவையே அரைப்பர் என்று தெரியவில்லை. இந்நாட்டில் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி, ஹிந்தி!

அந்தந்த மாநிலங்களுக்கு என்று தனியாக தாய்மொழி இருந்தாலும், வடமாநிலங்களுக்கு செல்லும் போது, ஹிந்தி ஒரு தொடர்பு மொழியாக உதவுகிறது.

அரசியல் ஆதாயத்திற்காக ஒரு மொழியை பகடைக் காயாக்காமல், தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கூடுதலாக ஒரு மொழியை கற்றுக் கொள்ளும் போது, எத்தகைய பெருமித உணர்வு ஏற்படுகிறதோ, அந்த உணர்வை சாதாரண ஒரு பாமர தந்தைக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டியது, ஆளுவோரின் கடமை.

ஆனால், இங்கு பணம் படைத்தோர் வீட்டுப் பிள்ளைகள், 30 மொழிகள் கூட கற்கலாம்; ஆனால், அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவனுக்கு கூடுதலாக ஒரு மொழியை கற்று விடக்கூடாது என்று வன்மத்துடன் செயல்படுகிறது, அரசு.

ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் ஓர் அரசை, எப்படி அனைவருக்குமான அரசாக கருத முடியும்?



தெருச்சண்டை போடும் இடமா பார்லிமென்ட்? எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜனநாயகத்தின் புனிதமான இடமாக கருதப்படும் பார்லிமென்ட்டில், சமீபத்தில் அரங்கேறிய நிகழ்வுகள், ஒவ்வொரு குடிமகனையும் தலைகுனியச் செய்துள்ளன.​

பார்லிமென்ட்டில் பிரதமரை தாக்குவதற்கு, காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சிஅளிக்கிறது.

குறிப்பாக, தமிழகத்தை சேர்ந்த காங்., - எம்.பி., ஜோதிமணி, மக்கள்பிரச்னைகளைப் பேசுவதற்குப் பதில், சபையின் நடுப்பகுதிக்குச் சென்று, அநாகரிகமான முறையில் பிரதமரை நோக்கி ஆக்ரோஷமாக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.

​நாட்டின் பிரதமருக்கே சபைக்குள் பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்குவது தான் எதிர்க்கட்சியினரின் வேலையா? பெண் உறுப்பினர் என்ற போர்வையில், ஜோதிமணி தொடர்ந்து சபையின் மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்படுவது, ஓட்டளித்த மக்களுக்குச் செய்யும் துரோகம்.

சபாநாயகரே சுட்டிக்காட்டும் அளவுக்கு, 'தாக்குதல்' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றால், இது ஒரு ஜனநாயகப் படுகொலை.

​பிரதமர் என்பவர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; அவர், 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதி. அவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், அவரை நோக்கித் தடையை மீறிப் பாய்வதும், அராஜகத்தின் உச்சம்.

காங்கிரஸ் போன்ற ஒரு முதுபெரும் கட்சி, தன் உறுப்பினர்களின் இத்தகைய வன்முறைப் போக்கைக் கண்டிப்பதற்குப் பதில் ஊக்குவிப்பது, அதன் வீழ்ச்சியையே காட்டுகிறது.

சபாநாயகர் இவ்விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற அநாகரிக உறுப்பினர்களை சபையை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும்.

இல்லையெனில், பார்லிமென்ட் என்பது தெருச்சண்டை போடும் களமாக மாறிவிடும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us