/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஆட்சியாளர்கள் பாடம் கற்பது எப்போது?
/
ஆட்சியாளர்கள் பாடம் கற்பது எப்போது?
PUBLISHED ON : அக் 22, 2025 12:00 AM

ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கரூர், தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், தமிழக அரசின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இவ்விவகாரத்தில், ஆளும் தி.மு.க., அரசுக்கு எதிராக ஒரு தரப்பினரும், த.வெ.க., தலைவர் நடிகர் விஜய்க்கு எதிராக மற்றொரு தரப்பினரும் மாறி மாறி அறிக்கை விடுகின்றனர்.
ஆனால், கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்படுவது தமிழகத்திற்கு ஒன்றும் புதிது இல்லை.
கடந்த 1992-ல் ஜெயலலிதா பங்கேற்ற கும்பகோணம் மகாமகம் நிகழ்ச்சியில், 60 பேர் உயிரிழந்தனர். 2005-ல் சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதற்காக வழங்கப்பட்ட டோக்கனை வாங்குவதற்காக முண்டியடித்த கூட்டத்தில் சிக்கி, 42 பேர் உயிரிழந்தனர்.
அதேபோன்று, 2019-ல் திருச்சியில் சாமியார் ஒருவரிடம், 'பிடிக்காசு' வாங்குவதற்காக கூடிய கூட்டத்தில், 7 உயிர்கள் பலியாகின. 2024ல் மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்த கூட்டத்தில், வெப்பத்தாக்குதலுக்கு ஆளாகி, ஐந்து பேர் உயிரிழந்தனர்.
அதேநேரம், ஓர் அரசியல் கட்சிக் கூட்டத்தில், கரூரில் நடந்தது போன்ற கொடூர சம்பவம் நடந்தது இல்லை.
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில், 21 கூட்ட நெரிசல் சம்பவங்களில், 741 பேர் உயிரிழந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலே கூறப்பட்ட அனைத்து சம்பவங்களுக்கும் பொதுவான காரணம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் முறையான திட்டமிடல் இன்மையும், கவனக்குறைவும், பாதுகாப்பு வழங்குவதில் காவல் துறையினரின் குளறுபடியும் தான்!
கடந்த 1989-ல் பிரிட்டனில் ஹில்ஸ்பரோ விளையாட்டரங்கில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி, 97 பேர் உயிரிழந்தனர்; 766 பேர் காயமுற்றனர்.
உலகையே உலுக்கிய இந்த சம்பவத்தின் வாயிலாக பாடம் கற்றுக்கொண்ட பிரிட்டன், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்தது. அதன்பின், இன்றுவரை அந்நாட்டில் அதுபோன்று ஒரு சம்பவம் நிகழவில்லை.
ஆனால், தமிழகத்தில் இத்தனை சம்பவங்கள் நிகழ்ந்தும், அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல், கரூரில், 41 பேர் உயிரிழப்பிற்கு பின், இப்போது, 'அரசியல் கட்சிக்கூட்டங்களுக்கு விதிமுறைகள் வகுக்க சட்டம் இயற்றப்படும்' என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தும்பைவிட்டு வாலைப்பிடிப்பதே, ஆட்சியாளர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது!
இடஒதுக்கீடுக்கு மூடுவிழா! ஆர்.குப்புசாமி, புதுச்சேரியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க, நட்சத்திர விடுதிகளில்
இரவு நேரத்தில் காபரே நடனம் ஆடும் நாட்டிய பெண்மணியின் நிலைக்கு வந்து
விட்டது ஆளும் தி.மு.க., அரசு.
காரணம், காபரே நடனமாடும் பெண்கள்,
இசைக்கு ஏற்ப, தான் அணிந்திருக்கும் ஆடைகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்து வீசுவர்.
கடைசியில் எல்லாரும், 'ஆ'வென்று வாய் பிளந்து பார்த்திருக்கையில் விளக்கை
அணைத்து விடுவர்.
அதுபோன்று, திராவிட மாடல் அரசு ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவிப்புக்களை வெளியிட்டு, மக்களிடம் வித்தை காட்டி வருகிறது.
முதலில், சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலை நாட்ட, 'ன்' என்று
முடியும் ஜாதி பெயர்களை, 'ர்' என்று குறிப்பிட வேண்டும் என்று அறிவித்தது.
இப்போது, தெருக்களின் பெயர் பலகைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜாதி
பெயர்களை அழிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே
ஸ்டேஷன்களில் ஊர் பெயர் தாங்கிய போர்டுகளில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை தார்
பூசி அழிப்பது போன்று, தெரு பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை அழித்து
விட்டால், நாட்டில் சமத்துவமும், சமூக நீதியும் தழைத்து விடுமா?
சென்னை தி.நகரில் பாண்டி பஜாருக்கு செல்லும் சாலையின் பெயர் டாக்டர் நாயர் சாலை!
அதிலுள்ள நாயர் என்ற ஜாதியை அழித்து விட்டால், டாக்டர் சாலை என்றாகிவிடாதா?
இதனால் என்ன சமத்துவம் நிகழ்ந்து விடும்?
ஜாதி பெயர்களை அழிப்பதால் சமத்துவம் மலராது. 'நீ இந்த ஜாதிக்காரன்' என்று
அடையாளப்படுத்தும் விதமாக, துவக்கப் பள்ளியில் இருந்து
கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு தான், ஏற்ற தாழ்வுகளை
ஏற்படுத்துகிறது.
எனவே, உண்மையிலேயே தமிழகத்தில் சமத்துவமும்,
சமூக நீதியும் தழைக்க வேண்டும் என தி.மு.க., நினைத்தால், இடஒதுக்கீடு
முறைக்கு மூடுவிழா நடத்தலாமே!
***
கல்வியில் சிறந்தது
தமிழ்நாடு தானா? சி.ஸ்ரீதேவி, இடுக்கி, கேரளாவிலிருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: சினிமா பாடல் வெளியீட்டு விழா பாணியில், 'கல்வியில் சிறந்த
தமிழ்நாடு' என்றொரு விழாவை நடத்தி, தன்னைத் தானே புகழ்ந்து கொண்டது
தி.மு.க., அரசு.
உண்மையில் தமிழகம் கல்வியில் சிறந்து
விளங்கியிருந்தால், நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்
அமைத்திருந்த ஏரி, குளம், கண்மாய்களை எல்லாம் மூடி, அதன்மீது கட்டடங்கள்
எழுப்பியிருப்பரா?
மழைநீரை சேமிக்காமல், வீணாக கடலில் கலக்க
விட்டு, பின், கடல் நீரை குடிநீராக்குகிறேன் என்று சொல்லி, பல்லாயிரம்
கோடி ரூபாயை செலவிடத் தான் செய்வரா?
'மது உடலுக்கு, வீட்டிற்கு, நாட்டிற்கு கேடு' என்று தெரிந்தும், அதை வீதிகள் தோறும் விற்பனை தான் செய்வரா?
மெல்ல மெல்ல உயிரைக் குடிக்கும் மதுபானங்களை பாதுகாப்பாக குடோன்களில்
சேமித்து விட்டு, உயிர் வாழ தேவையான தானியத்தை மழையில் நனைய விட்டு
வேடிக்கை தான் பார்ப்பரா?
பொறியியல் கல்லுாரிகள் இல்லாத காலத்தில்
கட்டப்பட்ட கல்லணை, தஞ்சை பெரிய கோவில் போன்ற கட்டுமானங்கள், ஆயிரம்,
இரண்டாயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் கம்பீரமாக நிற்கும்போது, ஊருக்கு
இரு பொறியியல் கல்லுாரிகள் இருக்கும் தமிழகத்தில், 16 கோடி செலவில்
தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்ட பாலம், மூன்றே மாதத்தில் தண்ணீரில் கரைந்து
தான் போகுமா? கல்வியில் சிறந்த தமிழகத்தில் தான் புத்தக பையினுள்
மாணவர்கள் கத்தியை கொண்டு செல்வரா?
ஆசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுவரா, வேலியே பயிரை மேய்வது போல், ஆசிரியர்களே பாலியல் குற்றங்கள் செய்வார்களா?
எதை வைத்து, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று திராவிட மாடல் அரசு கொண்டாடியது?
எனவே, பெருமைக்கு வெறும் உரலில் மாவு இடிக்கும் வேலையை விட்டு விட்டு,
சட்டம் - ஒழுங்கில் முதல்வர் தன் கவனத்தை செலுத்துவது நல்லது!