sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

எவர் கபளீகரம் செய்தது?

/

எவர் கபளீகரம் செய்தது?

எவர் கபளீகரம் செய்தது?

எவர் கபளீகரம் செய்தது?

2


PUBLISHED ON : ஜூலை 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 08, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி., - ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் போன்ற கட்சியினருக்கு கூடுதல் சீட் மற்றும் ஆட்சியில் பங்கு என்ற ஆசை துளிர் விடத் துவங்கியுள்ளது. ஆனாலும், கூட்டணியிலிருந்து தி.மு.க., கழற்றிவிடுமோ என்ற அச்சமும் உள்ளது.

அதனால் தான், சீமான், விஜய் போன்றோரை விமர்சிக்காமல், 'பா.ஜ., - அ.தி.மு.க.,வை அழித்து தமிழகத்தில் கால் ஊன்றிவிடும்...' என்று பிதற்ற துவங்கியுள்ளார், வி.சி., தலைவர் திருமாவளவன்.

எந்தக் கட்சியை எவர் கபளீகரம் செய்தது என்பது, தமிழக அரசியலை உற்று நோக்கி வருவோருக்கு நன்றாகவே தெரியும்.

கடந்த 1967ல் தமிழக சட்டசபை தேர்தலில், எட்டு கட்சிகளுடன் தி.மு.க., கூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடித்தது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தில் காங்., தலைநிமிரவே இல்லை.

இரு திராவிடக் கட்சிகளை நம்பித்தான் இன்று வரை அரசியல் பிழைப்பு நடத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணம் யார்?

அதேபோன்று, 1952ல் -பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரசுடன் போட்டியிட்டு தமிழகத்திலிருந்து, எட்டு எம்.பி.,க்களை அனுப்பிய, அன்றைய ஒன்றுபட்ட கம்யூ., கட்சியை, இன்று வெறும் அறிக்கைவிட்டே காலம் தள்ளும் கட்சியாக மாற்றியிருக்கும் பெருமை, எந்தக் கட்சியை சேரும்?

கருணாநிதியின் வாரிசு அரசியலால் வெறுப்புக்குள்ளாகி, 1994-ல் தி.மு.க.,விலிருந்து விலகி, தனிக்கட்சி துவங்கிய வைகோ, இன்று அதே தி.மு.க., வெற்றிக்காக உழைப்பதுதான் தன் தலையாய கடமை என்று பிதற்றுகிறார் என்றால், ம.தி.மு.க., என்ற கட்சியை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக் கொண்டிருக்கும் ராஜதந்திரி யார்?

'தி.மு.க.,வின் ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டியே தீருவேன்...' என்று ஆவேசமாகப் புறப்பட்ட உலகமகா நடிகர் கமலஹாசனை, சாதுர்யமாக வளைத்துப்போட்டு, ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டின் வாயிலாக மக்கள் நீதி மையத்தை ஓரங்கட்டியது எந்தக் கட்சி?

அடுத்த தேர்தலுக்குள் கமலஹாசன் தன் கட்சியை தி.மு.க.,வுடன் இணைத்துவிடுவார் என்பது வேறு விஷயம்!

தமிழகத்தில் வி.சி., உட்பட எந்தக் கட்சியையும் வளரவிடாமல், தன் ஆக்டோபஸ் கரங்களால் சுற்றி வளைத்து, கபளீகரம் செய்து கொண்டு இருப்பது எவர் என்று திருமாவளவன் தன் மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்!



சீண்டினால் கூட்டணி சிதறும்!


வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரையில் ஹிந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு அமைதியாக நடந்து முடிந்தது.

ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., இருப்பதை மறந்து, ஹிந்து முன்னணியினர், ஈ.வெ.ரா., அண்ணாதுரை குறித்து பேசி, சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்து விட்டனர்.

தி.மு.க.,விற்கு தி.க., எப்படியோ அதுபோல் தான் பா.ஜ.,வுக்கு ஹிந்து முன்னணி!

தி.க., வழியில் வந்த தி.மு.க., அரசு, பழனியில் முருகன் மாநாடு நடத்தியது. அதை, தி.க., கண்டுகொள்ளவில்லை.

ஆனால், சனாதனம், கோவில், சம்பிரதாயம் என்பதை கொள்கையாக கொண்ட கட்சி, முருகன் மாநாடு நடத்தினால், அதை அரசியல் என்கிறது தி.மு.க.,

அதற்கு கூட்டணி கட்சிகளும் ஒத்து ஊதுகின்றன.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நடத்தினால் பக்தி; கடவுளை நம்புவோர் நடத்தினால், அது அரசியல்.

இதுதான், தி.மு.க.,வின் தில்லாலங்கடி அரசியல்!

இதேபோன்று தான், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா அமல்படுத்திய அவசர நிலை பிரகடனத்தை மத்திய பா.ஜ., அரசு நினைவூட்டுகிறது. ஆனால், எமர்ஜென்சியில் பாதிக்கப்பட்ட தி.மு.க., அதை கண்டுகொள்ளவில்லை.

காரணம், கூட்டணி தர்மம்!

இந்த விஷயத்தை தமிழகபா.ஜ.,வினர் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இங்கு, பா.ஜ.,விற்கு உட்கட்டமைப்பு பலமாக இல்லை. கூட்டணியில் இருந்தால் தான் சொற்ப இடங்களிலாவது ஜெயிக்க முடியும்.

கடந்த 1967 - 1975ல் எதிரிகளாக இருந்த காங்., - தி.மு.க., இன்று இணைப்பிரியாத தோழர்கள்!

கூட்டணி என்று வந்து விட்டால், சில விஷயங்களை விட்டுக் கொடுத்து தான் போக வேண்டும். இனிவரும் நாட்களில் அண்ணாதுரை, ஈ.வெ.ரா., படங்கள் இல்லாமல் அ.தி.மு.க., பிரசாரம் செய்யாது.

அதனால், பா.ஜ.,வை வளர்க்கிறேன் பேர்வழி என்று அண்ணாதுரையை சீண்டினால், கூட்டணி உடைந்து விடும். இதனால், இரண்டு கட்சிகளுக்குமே பாதிப்பு தான்.

இங்கு, மஹாபாரத சகுனிகளே வெற்றி பெற முடியும். கொள்கை, சித்தாந்தம், நேர்மை, மக்கள் சேவை என்று பேசிக்கொண்டு இருப்பதை விட்டு, அரசியல் சூட்சுமம் புரிந்து பா.ஜ.,வினர் செயலாற்ற வேண்டும்!



தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கும் அரசு!


ஆர்.தர்மலிங்கம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தலைவலி, ஜுரம், வயிற்றுவலி, இருமல், தும்மல், விக்கல், அபானவாயு, ஏப்பம், தாகம் போன்றவை முன் கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு வருவதில்லை.

எதிர்பாராத விபத்துகளைபோன்று, இவையும் திடீரென்று மனித உடலில் தாக்குதல் நடத்துபவை.

ஆனால், ஆளும் தி.மு.க., அரசோ, பள்ளிகளில் மாணவ - மாணவியர் தண்ணீர் குடிக்க ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, அதை நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளது.

அதாவது, காலை 11:00 மணி, பிற்பகல் 1:00 மற்றும் மாலை 3:00 மணி என, தண்ணீர் குடிக்க நேரத்தை ஒதுக்கியுள்ளது.

மதியம் 1:00 மணி மதிய உணவு நேரம். அந்த நேரத்தில் உணவுடன் சேர்த்து தண்ணீரும் பருகி விடுவரே... பின் எதற்கு வாட்டர் பெல்?

இதுபோன்று நகைப்பிற்கிடமளிக்கும் யோசனைகள், எந்த மகானுபாவரின் சிந்தனையில் உதயமாகிறதோ தெரியவில்லை.

முன்பெல்லாம், பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பறையிலும் சுத்தமான மண் பானையில் தண்ணீரும், அதை எடுத்துக் குடிக்க ஒரு டம்ளரும் வைத்திருப்பர்.

தாகம் எடுக்கும்போது ஆசிரியர் அனுமதியுடன் தண்ணீர் குடித்து வந்து தங்கள் இருக்கையில் அமர்வர் மாணவர்கள். அதன்பின், பாட்டிலில் குடிநீர் கொண்டு போகும் பழக்கம் வந்தது. மாணவர்களும் குடிநீர் பாட்டில்களை தங்கள் அருகிலேயே வைத்திருந்து தேவைப்படும் நேரம் குடித்தனர்.

இப்போதோ, அதற்கென்று ஒரு நேரம்... பெல் அடித்தால் தண்ணீர் குடிக்க வேண்டுமாம்!

தாகம் எடுப்பதை உடம்பு உணர்த்தும்போது, தாகத்தை தீர்த்துக் கொள்வதை விடுத்து, இந்த நேரத்தில் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வரைமுறைப் படுத்துவது சரியா?

வகுப்பின் போது திடீரென்று ஒரு மாணவனுக்கு விக்கல் வந்து விடுகிறது. அருகில் இருக்கும் குடிநீர் பாட்டிலை எடுத்து, தாகத்தை தீர்த்து கொள்ள வேண்டுமா அல்லது 'வாட்டர் பெல்' அடிக்கும்வரை விக்கிக் கொண்டிருக்க வேண்டுமா?

எதற்கெல்லாம் ரூல்ஸ் போடணும் என்ற விவஸ்தை இல்லையா?








      Dinamalar
      Follow us