/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
சீமானுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
/
சீமானுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
PUBLISHED ON : ஜன 09, 2025 12:00 AM
கே.ரமேஷ், நாகர்கோவிலில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம்; நியமன உறுப்பினரான கவர்னருக்கு ஏது அதிகாரம்? தமிழன் காசு வேணும்; தமிழன் வேணாமா...' என்று கேட்டுள்ளார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கவர்னர் என்னவோ, தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டாம்; தேசிய கீதம் மட்டும் தான் பாட வேண்டும் என்று சொன்னது போல் உளறி கொட்டியுள்ளார், சீமான்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின், தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று தானே கேட்டுக் கொண்டார்!
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தை, கருணாநிதி தன் இஷ்டத்துக்கு திருத்தி, அதை மாநில அரசின் வாழ்த்துப் பாடலாக வைத்துள்ளதாக இதே சீமான் குற்றம்சாட்டி, புதுச்சேரியில் இசைக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்தை, சென்னை புத்தக திருவிழாவில் இசைக்கச் செய்தாரே... சீமானுக்கு யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இதுவரை கடைப்பிடித்து பாடி வரும் தமிழ்த்தாய் வாழ்த்தை புறம்தள்ளி, தன் இஷ்டத்துக்கு ஒரு தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்க, சீமானுக்கு என்ன அதிகாரம் உள்ளது?
'தமிழன் காசு வேணும்; தமிழன் வேணாமா...' என்று கேட்கிறார்.
தெலுங்கானா கவர்னராக தமிழிசை இருந்தபோது, அப்போதைய ஆளும் அரசுக்கும், கவர்னருக்கும் பிரச்னை இருக்கத் தான் செய்தது... அதற்காக, அங்கிருப்போர், 'தெலுங்கன் காசு வேணும்; தெலுங்கன் வேணாமா' என்றா கேட்டனர்?
நாம் அடுத்த மாநிலத்துக்கு, நாட்டுக்கு போனால், நமக்கு ராஜ மரியாதை வேண்டும்; நம் அண்டை மாநிலத்தவர் பணி நிமித்தமாக இங்கு வந்தால், பிச்சை எடுக்க வந்தது போல் பேசுவது தான், தமிழன் மரபா?
தமிழ் தேசியம் பேசுங்கள்... அதை வைத்து பிரிவினை அரசியல் செய்யாதீர்கள். அது நாட்டுக்கும் நல்லதல்ல; மக்களுக்கும் நல்லதல்ல!

