PUBLISHED ON : ஏப் 13, 2025 12:00 AM

கு.அருணாச்சல
மூர்த்தி, கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஓட்டு வங்கி
அரசியலுக்காக, வக்ப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில்
வழக்குதாக்கல் செய்துள்ளன, எதிர்க்கட்சிகள்.
மத்திய அரசு ஒன்றும்
இச்சட்டத்தை எடுத்தோம், கவிழ்த்தோம் என்று அவசர கதியில் கொண்டு வந்துவிட
வில்லை. பார்லிமென்ட் கூட்டுக் குழு ஆறு மாதமாக ஆய்வு செய்து, ஒப்புதல்
தந்த பின்னரே, பார்லிமென்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
மாநில
அரசுகள், வக்ப் வாரியங்கள், நிபுணர்கள், முஸ்லிம் பிரதிநிதிகள், பிற
மதத்தவர்கள் என அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து, 97 லட்சம் பேர்களின்
ஆலோசனைகளை இணையம் வாயிலாக பெற்றும், அதன் பின்னர் பல மாநிலங்களுக்கு பயணம்
செய்த பார்லிமென்ட் கூட்டுக் குழு, 25 மாநில வக்ப் வாரியங்கள்,15 மாநில
அரசுகள், 5 சிறுபான்மை ஆணையங்கள், 284 பங்களிப்பாளர்கள், 20 அமைச்சர்கள்,
எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் என, அனைவருடனும் கலந்தாலோசனை செய்தும்,
விவாதங்களை நடத்திய பின்பே, இச்சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உண்மையில், இது பெரும்பாலான இஸ்லாமியரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேநேரம்,
வக்ப் சட்டத் திருத்தத்தை எதிர்ப்போர் யார் என்றால், தற்போது வரை வக்ப்
சொத்துக்களை அனுபவித்து வரும், உயர் ஜாதி முஸ்லிம்களான அஷராப்கள் தான்!
இவர்கள் கைகளில் தான் வக்ப் வாரிய சொத்துக்கள் சிக்கி சீரழிந்து வருகின்றன.
ஏழ்மை
நிலையில் உள்ள கீழ் ஜாதி முஸ்லிம்களான பஸ்மந்தாக்கள் நலனுக்காக
அமைக்கப்பட்டது தான் வக்ப் வாரியங்கள்; ஆனால், அவர்களுக்கு அது பயன்
அளிக்கவில்லை.
தற்போது, இப்புதிய சட்டத் திருத்தம் தான், அவர்கள் பயன் அடைய வழிவகுத்துள்ளது.
அத்துடன், 2013 க்கு முன், 18 லட்சம் ஏக்கராக இருந்த வக்ப் சொத்துக்கள், இன்று, 39 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது என்றால் எப்படி?
நம் திருச்செந்துார் கோவிலுக்கு, 1,500 ஆண்டுகளாக சொந்தமாக இருந்த, 400
ஏக்கர் நிலத்தை வக்ப் வாரியம் அபகரித்தது. இதுபோன்ற கணக்கற்ற அரசு
நிலங்கள், கோவில், தனியார் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு உள்ளன.
இவை எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன!
அன்று,
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கு
எதிராக, உச்ச நீதிமன்றம் சென்ற எதிர்க்கட்சிகள் எப்படி தோல்வியை தழுவினரோ,
அதுபோன்று, இன்று, வக்ப் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றம்
சென்றுள்ள அனைவரும் தோல்வியை தழுவப்போவது நிச்சயம்!
ஏனெனில், இச்சட்டத் திருத்தத்தால் பயன் அடைய போவது பெரும்பாலான ஏழை இஸ்லாமியர்களே!
அது ஓர் அழகிய கனாக்காலம்!
வே.ஆதிரை வேணுகோபால், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தினமலர்' நாளிதழில், 'நலம் அறிய ஆவல்... கடிதம் எழுதுங்கள்; பரிசை வெல்லுங்கள்' என்ற விளம்பரத்தை படித்ததும், ஏதேதோ அழகிய நினைவுகள்...
உறவுகள் துாரத்தில் இருந்த போதும், உயிரோட்டமாய் அவர்களின் எண்ணங்களை சுமந்து வந்த அஞ்சல் அட்டையையும், வெளிர் நீல மடல்களையும் மறக்க முடியுமா?
'அன்புள்ள...' என்று ஆரம்பித்து, கொஞ்சல், சிணுங்கல், கூப்பாடு, கோபம், வருத்தம், அன்பு என, கடிதங்கள் பாட்டிசைத்த அழகான காலம் அது!
பேச்சு உணர்த்தும் அன்பைவிட, இரண்டு வரிக் கடிதம் இன்னும் ஆழமாக அதை மனதில் பதிக்கும் அற்புதத்தை என்னவென்பது!
கல்லுாரி காலத்தில், பேனா நண்பர்களின் எண்ணங்களை சுமந்து வரும் கடிதங்களைப் படிக்கும்போது வரும் சந்தோஷம் இருக்கிறதே... அதற்கு ஈடு இணை கிடையாது. அதிலும், வெளிநாட்டு அஞ்சல் முத்திரையுடன் வரும் கடிதங்களை கையில் வாங்கும்போதே கர்வமாக இருக்கும்.
ஒவ்வொரு பொங்கல் வாழ்த்து அட்டையும் எத்தனையோ சுவாரஸ்யங்களுடன், அனுப்பியவர்களின் அன்பையும் அல்லவா தாங்கி நின்றன!
அன்று, கடிதம் எழுதும்போது உறவுகளின் அன்பு, உள்ளத்தால் நம்மை பிணைத்தது; இன்றோ உறவுகளும் தொலைந்துபோனது; அன்பும் மறைந்து போனது!
பிரச்னை, சிந்தனை, உணர்வு, தகவல்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகள், கண்ணீரில் தோய்ந்த மன காயங்கள் என எல்லாம் இளமஞ்சள் அட்டைகளாய், வெளிர்நீல மடல்களாய் கையில் வழிந்ததெல்லாம் ஒருகாலம்!
'அன்புள்ள...' எனத் துவங்கி, 'ஆசை முத்தங்களுடன்' என முடியும் அக்காலக் காதல் கடிதங்கள் போல் இல்லை... இன்று வாட்ஸாப்பில் நொடிக்கு ஒரு முறை சொல்லும், 'டார்லிங்களும், ஐ லவ் யூ'க்களும்!
மொபைல்போன் மோகினி, 'உள்ளேன் ஐயா' என்று சொல்வதற்கு முன்வரை, சிலரிடமாவது வாழ்த்து அட்டையும், கடிதம் எழுதும் பழக்கமும் இருந்தது.
இப்போது, ஒருவரி குறுஞ்செய்தியோடு முடிந்து போகிறது கடித வடிவம்!
இன்றைய தலைமுறைக்கு கடிதம் எழுதுவது எப்படி என்றே தெரியவில்லை; தபால் பெட்டி என்றால் என்னவென்று கேட்கின்றனர்.
இத்தகைய சூழலில், மாணவ - மாணவியர் கடிதம் எழுதுவதை ஊக்குவிக்கும் விதமாக,'தினமலர்' நாளிதழ் அறிவித்த போட்டி, இனிய ஆச்சரியம்!
இதன்வாயிலாகவாவது பிள்ளைகள் கடிதம் எழுத கற்றுக் கொண்டால், 'தினமலர்' இதழுக்கு என் போன்றோர் சொல்வர், கோடான கோடி நன்றிகள்!
ஏமாற்ற முடியாது!
எஸ்.அபிநந்தன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில், 50 ரூபாய் உயர்த்தியுள்ளதை கண்டித்து, 'நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா அல்லது அவர்கள் வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில், 50 ரூபாய் அதிகமானதற்கு இவ்வளவு ஆதங்கப்படும் ஸ்டாலின், அவரது நான்காண்டு ஆட்சி காலத்தில், மின் கட்டணத்தை மூன்று முறை ஏற்றியுள்ளாரே... மக்கள் வயிறு குளிர்ந்து போய்தான் கட்டணம் கட்டுகின்றனரா?
வீட்டு வரி, தண்ணீர் வரியை ஏற்றியதுடன் நடுத்தர, ஏழை மக்கள் தாங்கள் வைத்திருக்கும் சொற்ப நிலத்தை விற்கவோ, வாங்கவோ முடியாமல் பத்திர பதிவு கட்டணத்தை இஷ்டத்திற்கு ஏற்றியதும் கூட ஏழைகளின் மனம் குளிரத் தானா?
சிலரை சில நாளும், பலரை பல நாளும் ஏமாற்றலாம்; ஆனால், எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது முதல்வரே!