sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

எவருடையது பொற்கால ஆட்சி?

/

எவருடையது பொற்கால ஆட்சி?

எவருடையது பொற்கால ஆட்சி?

எவருடையது பொற்கால ஆட்சி?

1


PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில், 'திராவிட மாடல் ஆட்சிதான் தமிழகத்தின் பொற்கால ஆட்சி' என்று சுயதம்பட்டம் அடித்துள்ளார், முதல்வர் ஸ்டாலின்.

அப்படியெனில், தமிழகத்தில் லஞ்சம், ஊழல் ஒழிந்து, மதுவிலக்கை அமல்படுத்தி விட்டனரா? கள்ளச்சாராயம், போதை பொருள் புழக்கம் ஒழிந்து விட்டதா, அனைவருக்கும் சமமான கல்வி, தரமான மருத்துவம் கிடைக்கிறதா?

ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை மேம்படுத்தி, கனிமவள கொள்ளைகள் தடுக்கப்பட்டு விட்டதா? வறுமை குறைந்து, தமிழகத்தின் கடன் சுமை தீர்ந்து, உபரி பட்ஜெட் போடுகின்றனரா?

எதுவும் இல்லையே... அப்படியிருக்கும் போது எதை வைத்து பொற்கால ஆட்சி என்கிறார், முதல்வர்?

அடுத்த தேர்தல் குறித்து சிந்திப்பவர் அல்ல... அடுத்த தலைமுறை குறித்து சிந்திப்பவரே சிறந்த தலைவர்!

அதன்படி காமராஜர் ஆட்சி காலமே தமிழகத்தின் பொற்காலம்!

அவருடைய ஆட்சியில் தான் நேர்மையான, எளிமையான, ஊழலற்ற மனிதர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.

கல்வியும், மருத்துவ வசதியும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, காமராஜர் சலுகை வழங்கினாரே தவிர, திராவிட கட்சிகளை போல் ஓட்டுக்காக பல்பொடி, செருப்பு, 'டிவி' மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, சைக்கிள், லேப்டாப், 1,000 ரூபாய் என இலவச திட்டங்களை அமல்படுத்தவில்லை.

ஏராளமான பள்ளிகளை திறந்து, பிள்ளைகளை படிக்க வைத்தாரே தவிர, மதுக்கடைகளை திறந்து அனைவரையும் குடிக்க வைக்கவில்லை, காமராஜர்.

உழைத்து மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக, நிறைய தொழிற்சாலைகளை திறந்தார்; விவசாயத்தை மேம்படுத்த, ஒன்பது அணைகளை கட்டி, நீர்நிலைகளை மேம்படுத்தினார். திராவிட கட்சிகளோ, அந்த நீர்நிலைகளை மூடி, அதில் கட்டடங்களை கட்டினர்.

காமராஜர் நினைத்திருந்தால், அவரது பதவியை பயன்படுத்தி விருதுநகர் மாவட்டத்தையே வளைத்துப் போட்டிருக்கலாம்; ஆனால், அவர் இறக்கும் போது அவரிடம் இருந்தது வெறும், 200 ரூபாய்!

ஆனால், கருணாநிதி இறந்தபோதோ பெரும் கோடீஸ்வரர்!

இப்போது சொல்லுங்கள் முதல்வரே... எவருடையது பொற்கால ஆட்சி என்று?

இறுமாப்பு ஆகாது!


ஆர்.முருகன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அரசு என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறவில்லை. அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தான் சொன்னார். அதனால், வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியில் பங்கு கிடையாது' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார், பழனிசாமி.

'அரச மரத்தை சுற்றி வந்து, அடி வயிற்றை தொட்டுப் பார்த்தாளாம் ஒருத்தி' அதுபோன்று உள்ளது, பழனிசாமியின் பேச்சு!

என்னமோ, தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் வென்று, ஆட்சியமைக்க கவர்னர் அழைத்து கொண்டிருப்பது போல், இறுமாப்புடன் கூறுகிறார்.

பா.ஜ.,வைப் போல் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கும் கட்சி இந்தியாவில் வேறு எதுவும் கிடையாது.

பீஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை விட, பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதும், பெருந்தன்மையுடன் முதல்வர் பதவியை நிதிஷ் குமாருக்கு விட்டு கொடுத்துள்ளது.

அதுபோல் கர்நாடகாவில் குமாரசாமியிடமும், உ.பி.,யில் மாயாவதியிடமும் கூட்டணி ஆட்சியில், விட்டுக் கொடுத்து ஏமாந்து இருந்தாலும், பா.ஜ., கெட்டு போய்விடவில்லை.

இன்று, கர்நாடகாவில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தையும், உ.பி.,யில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை யும் பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டிஉள்ளது.

ஆனால், குறிப்பிட்ட அந்த இரண்டு மாநிலங்களிலும், பா.ஜ., அசுர வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

ஆனானப்பட்ட ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் தோல்வியை தழுவி இருக்கிறார் என்பதை, பழனிசாமி மறந்துவிடக் கூடாது.

மக்கள் ஓட்டளித்தால் மட்டுமே பழனிசாமி வெற்றி பெற முடியும்.

தோல்வியுற்றால், மேல்சபை வாயிலாக கூட சட்டசபைக்குள் நுழைய முடியாது. ஏனெனில், தமிழகத்தில் தற்போது மேல்சபையே கிடையாது. வெண்ணிற ஆடை நிர்மலா பதவியேற்க, முட்டுக்கட்டை விழுந்த நிலையில், எம்.ஜி.ஆர்., அந்த மேல்சபைக்கே மூடுவிழா நடத்தி விட்டார்.

வெற்றி பெற்ற எவராவது பெரிய மனது வைத்து ராஜினாமா செய்து, அந்த தொகுதி இடைத்தேர்தலில் நின்று வென்றாக வேண்டும். வெற்றி பெற்ற ஒருவருமே விட்டுக் கொடுக்க முன்வரவில்லை என்றால், பழனிசாமி அதோகதிதான்!

அதனால், பழனிசாமி தன் இறுமாப்பையும், பேராசையையும் குழிதோண்டி புதைத்து விட்டு, பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது, அ.தி.மு.க.,வின் எதிர்காலத்திற்கு நல்லது!

வாய் கொழுப்புக்கு தண்டனை!


எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொது வெளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவதும், எதிர்ப்பு கிளம்பியதும், 'ஐயோ தவறாகப் பேசியிருந்தால், மன்னித்து விடுங்கள்' என்று ஒப்பாரி வைப்பதும் துரைமுருகன், பொன்முடி போன்ற தி.மு.க., அமைச்சர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

பொன்முடியின் பேச்சுக்கு அனைத்து தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதும், அவரது துணை பொதுச்செயலர் பதவி பறிப்பு என்ற நடவடிக்கையின் வாயிலாக, ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றிஉள்ளார், முதல்வர் ஸ்டாலின். அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருந்தால், எதிர்க்கட்சியினரே அவரை பாராட்டியிருப்பர்.

ஆனால், ஊழல் வழக்கில் சிறை சென்று ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி, அவரது கண்களுக்கு தியாகியாகத் தெரிந்த நிலையில், பொன்முடியின் பேச்சு எல்லாம் ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது.

முதல்வராக பதவியேற்ற புதிதில், 'கட்சிக்காரர்களின் தகாத செயல்களால், துாக்கமே போச்சு' என்று புலம்பியதையும், 'தவறு செய்யும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க சர்வாதிகாரியாகவும் மாறத் தயங்க மாட்டேன்' என்றும், ஸ்டாலின் கூறியதை தமிழகம் மறந்துவிடவில்லை.

பொன்முடியின் அமைச்சர் பதவியை பறிக்குமளவுக்கு அவர் ஒன்றும் பெரிய தவறு செய்து விடவில்லை என்று முதல்வர் எண்ணுகிறாரா அல்லது அந்த சர்வாதிகாரிதான் ஓடி ஒளிந்து கொண்டாரா?

ஸ்டாலின் தன் கட்சிக்காரர்களை அடைகாக்கட்டும்... 'எரிவதை பிடுங்கினால், கொதிப்பது தன்னால் அடங்கும்' என்பதுபோல், இவர்களுக்கு ஓட்டுபோட்டு அதிகாரத்தை கொடுப்பதை நிறுத்தினால், இந்த வாய் கொழுப்பர்கள் தானாக வழிக்கு வந்து விடுவர்!






      Dinamalar
      Follow us