PUBLISHED ON : மார் 05, 2024 12:00 AM
என். தொல்காப்பியன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபலமானவர்கள் இப்போது பா.ஜ.,வுக்கு தாவுகின்றனர்.நீங்களும் அங்கு போய் விடுவீர்கள் என்ற தகவல்கள் உலா வருகிறதே' என, திருச்சியில் ஒரு நிருபர் கேட்க, காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் பொங்கி எழுந்து விட்டார்.
'எவன் அப்படி சொன்னான்? அவனை நான் செருப்பால் அடிப்பேன். கேள்வி கேட்பதில் ஒரு தகுதி, தராதரம் வேண்டாமா? என்னிடம் கேட்ட கேள்வியை ஸ்டாலினிடம் கேட்கும் துணிச்சல் உண்டா?' என்று வசைமாரி பொழிந்து தள்ளி விட்டார் திருநாவுக்கரசர்.
அதுவும் இல்லாமல், 'நாம் தமிழர் சீமான் போல தான் இனி பேசுவேன்' என்றும் சபதம் எடுத்துள்ளார். நமக்கு தெரிந்த வரை திருநாவுக்கரசர் போல, இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து, நிருபர்களிடம் சீமான் பேசியதாக தெரியவில்லை.
அநாவசியமாக சீமானை வம்புக்கு இழுத்ததற்காக அவர் என்ன பதிலடி தர போகிறார் என்று தெரியவில்லை. தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் யாரும் இந்த அளவுக்கு பத்திரிகையாளர்களிடம் மோசமாக பேசியதில்லை. மெத்தப் படித்த திருநாவுக்கரசர் இப்படி பொங்கி எழுந்ததற்கு காரணம், இவரைக் காணவில்லை என்று திருச்சி மாநகரம் முழுதும் போஸ்டர் ஒட்டியது தான்.
அந்த கோபத்தை மக்கள் மீது காட்டினால், மறுபடியும் திருச்சியில் ஓட்டு கேட்டு அவர்கள் மத்தியில் போக முடியுமா? அதனால் தான், பத்திரிகை நிருபர்கள் மீது பாய்ந்து விட்டார்.
அரசாணை 354ஐ நிறைவேற்றுமா அரசு?
ந.தேவதாஸ்,
சென்னையில்இருந்து எழுதுகிறார்: 'மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி
ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, அரசாணை 354ஐ செயல்படுத்தும்படி பல ஆண்டுகளாக
கூறி வருகிறோம். இந்த அரசாணை உட்பட மருத்துவர்களின் கோரிக்கைகளை
பரிசீலிக்கும் வகையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
'இக்கமிட்டி,
டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துகிறது. எனவே,
தொடர்ந்து மருத்துவர்களை வேதனைப்படுத்தாமல், கோரிக்கைகளை உடனடியாக
நிறைவேற்ற வேண்டும்' என, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு
தலைவர் டாக்டர் பிச்சை பெருமாள் பிள்ளை கூறியுள்ளார்.
'சமீபத்தில்,
அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் திடீர் மாரடைப்பில் இறந்தனர். அதீத மன
அழுத்தமே இவர்கள் உயிரிழப்பிற்கு காரணம்' என்றும் கூறியுள்ளார். இவர்கள்
இருவரும், இறப்பதற்கு முன்தினம் ஓய்வின்றி தொடர்ந்து, 24 மணி நேரம்
பணியாற்றி உள்ளனர். பணி நெருக்கடி கொடுத்த மன அழுத்தமே இவர்கள் மரணத்திற்கு
காரணமாக அமைந்துள்ளது.
போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை அரசு
நியமித்திருந்தால், இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது. பிரிட்டன்
போன்ற நாட்டில், 7.25 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவம்
செய்ய, 1 லட்சம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால்,
அதைவிட கூடுதலாக, 8 கோடிமக்கள் தொகை கொண்ட தமிழகத்தில், வெறும், 19,000
மருத்துவர்கள் தான் உள்ளனர். இந்த பற்றாக்குறையும், கூடவே அதிகமான பணி
நெருக்கடியும் தான், இவர்களை மன அழுத்தத்தில் தள்ளுகிறது.
கொரோனா
தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், உலகமே முடங்கியிருந்தது. அப்போதும்
கூட தன்னலம் பாராது பொது நலனே முக்கியம் எனக் கருதி, தீவிரமாக களப்
பணியாற்றியவர்கள் அரசு மருத்துவர்கள்.
அவர்கள், துணிந்து
மக்களுக்கு உயர் சிகிச்சை அளித்த காரணத்தால் தான், இங்கு கொரோனாவுக்கு
பலியானவர்களின் எண்ணிக்கை, பெரியளவிற்கு செல்லாமல் கட்டுக்குள் இருந்தது.
இப்படி பல விதத்திலும் தமிழக சுகாதாரத்துறைக்கு எவ்வித களங்கமும் ஏற்படாமல் காத்து வருபவர்கள் அரசு மருத்துவர்கள்.
காலியிடங்களை
பூர்த்தி செய்வதே இதற்கு நிரந்தரமான தீர்வாக அமையும். உடனடியாக, கருணாநிதி
வெளியிட்ட அரசாணை 354ஐ நிறைவேற்றி, இவர்களின் துயர் துடைக்க, தமிழக அரசு
போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்!
ஆர்.துரை,
மேற்கு ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
லோக்சபா தேர்தலில், பா.ஜ.,தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்.,
தலைமையில், 'இண்டியா' கூட்டணியும் மோதுகின்றன. பா.ஜ.,வை பொறுத்தமட்டில்,
இந்த தேர்தலில் வெற்றி பெற்று பாரதத்தை, உலகின் முதல் மூன்று நாடுகளில்
ஒன்றாக உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளது.
எதிர் அணியை
பொறுத்தமட்டில், நாடு எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை, பா.ஜ., கட்சி
மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என மட்டுமே நினைக்கிறது.
முதலில்
இரு அணிகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் கட்சிகளின் முந்தைய சரித்திரத்தை
பார்ப்போம். முன்பு ஜனசங்கமாக இருந்து பின், சூழ்நிலை காரணமாக பாரதிய ஜனதா
கட்சியாக மாறியது.
இதற்கு முன் ஆறு ஆண்டுகள் வாஜ்பாயும், தற்போது
10 ஆண்டு களாக மோடியும் சிறப்பான ஆட்சியை அளித்துள்ளனர். இதன் தலைவர்கள்
ஷியாமபிரசாத் முகர்ஜி, தீன்தயாள்உபாத்தியாயா, வாஜ்பாய், அத்வானி, நரேந்திர
மோடி அனைவரும் தேசத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.
கடந்த
10 ஆண்டுகளாகஎந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் இடம் தராமல், மோடி நல்லாட்சி
நடத்தி வருகிறார். ஆனால், அதற்கு முன் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்.,
தலைமையிலான கூட்டணி அரசில் எத்தனை ஊழல்கள் வெடித்து கிளம்பின என்பதை நாம்
மறந்திருக்க மாட்டோம்.
கடந்த 2004 முதல் 2014 வரையிலான காங்.,
கூட்டணி ஆட்சியை இருண்ட காலம் என்றே சொல்லலாம். காமன்வெல்த் விளையாட்டு
போட்டி ஊழல், '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல், நிலக்கரி ஊழல் என, பத்தாண்டுகளில்
ஊழல் முறைகேடுகள் வெளிவராத நாட்களே இல்லை எனலாம்.
ஆனால், பா.ஜ.,
ஆட்சி யாளர்கள் நீதி, நேர்மை, ஆன்மிக எண்ணம் உடையவர்கள். காஷ்மீருக்கான 370
சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே
நாடு, ஒரே சட்டம் என்பதை முன்னிறுத்தினர். அடுத்து அயோத்தி ராம ஜென்ம
பூமியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ராமர் கோவில் கட்டி
முடித்துள்ளனர்.
எனவே, லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணியை ஆதரிக்க
வேண்டும் என்பதில், நாடு முழுக்க உள்ள வாக்காளர்கள் தெளிவாகவே உள்ளனர்.
இது, தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

