sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

நீச்சலடித்தால் சரியாகி விடுமா?

/

நீச்சலடித்தால் சரியாகி விடுமா?

நீச்சலடித்தால் சரியாகி விடுமா?

நீச்சலடித்தால் சரியாகி விடுமா?

3


PUBLISHED ON : மே 26, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 26, 2025 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.அறவாணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டு மக்களை முட்டாள்களாகவும், மூடர்களாகவும் கருதும் அரசியல்வாதிகள், தேர்தல் பிரசாரத்தின் போது, துணி துவைத்துக் கொடுப்பது, மாவு அரைப்பது, இட்லி - தோசை சுடுவது, வாசல் தெளித்து கோலம் போடுவது, இஸ்திரி போட்டு கொடுப்பது போன்ற இன்னபிற வேலைகளை செய்து கொடுத்து, வாக்காளர்களை கவர்ந்து, ஓட்டுகள் சேகரிப்பது வழக்கம்.

தற்போது அவ்வரிசையில் தன்னையும் இணைத்து கொண்டிருக்கிறார், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்.

சமீபத்தில் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து காட்டி, தன் ஆற்றலையும், திறனையும் பலரும் பார்க்க வேண்டுமென்பதற்காகவே நீந்தினேன் என்று கூறி பெருமிதமடைந்துள்ளார்.

பிறந்த குழந்தையை தண்ணீருக்குள் தள்ளினால், அந்த சிசு அற்புதமாக நீச்சலடிக்கும்.

காரணம், தாயின் வயிற்றில் இருந்த போதே நீந்தியபடி தான் வளர்ந்து வந்திருக்கிறது.

அதனால், நீச்சலடிப்பது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல.

குற்றாலீஸ்வரன் கூட, 10 வயதில் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு நீந்தி சாதனை புரிந்துள்ளார்.

சமீபத்தில் கூட ஒரு மாற்றுத்திறனாளி பெண் நீச்சலில் சாதனை புரிந்துள்ளார். முதலைகளும், திமிங்கலங்களும் இருக்கும் அரசியலில், அரசு நிர்வாகத்தில் நிலவும் பிரச்னைகளை, சிறிய நீச்சல் குளத்தில் நீந்தி காட்டிவிட்டால், சரிசெய்து விட முடியுமா?

எத்தனை காலம் ஏமாறுவர்?


மா.மனோகரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 5,000 ஆண்டுகளுக்கு மேல் ஹிந்து கடவுள்களையும், 3,000 ஆண்டுகளுக்கு மேல் புத்த கடவுள்களையும், 2,000 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்துவ கடவுள்களையும், 1,400 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாம் மார்க்க கடவுள்களையும் வணங்கி வரும் உலகிலுள்ள, 800 கோடி பேருக்கு தோன்றாத நாத்திக பகுத்தறிவு, 18ம் நுாற்றாண்டில் பிறந்த ஈ.வெ.ராமசாமிக்கு தோன்றியது ஆச்சரியம் தான்!

அவரை பின்பற்றும் கும்பல், தமிழக மக்களை தேசிய நீரோட்டத்தில் கலக்க விடாமல், கல்வி, மருத்துவம், தொழில் வளர்ச்சி என, அனைத்திலும் குழப்பம் விளைவித்து வருவதுடன், பகுத்தறிவு என்ற போர்வையில் நாத்திகத்தை பரப்புகிறது!

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பகுத்தறிவு பூஜை நடத்தி வரும் இவர்களால், மாந்திரீகத்தை நம்புவோரையும், வீட்டிலுள்ள நகைகளை வைத்து பூஜை செய்து, நகைகளை பறி கொடுப்போரையும் ஏன் மாற்ற முடியவில்லை?

காரணம், தமிழகத்தில் நாத்திக பகுத்தறிவு பருப்பு வேகாதது தான்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து, பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று, சமூக நீதியை நிலை நாட்டியவர், ராமானுஜர்.

அதேபோன்று, கணவரை இழந்த பெண்கள், 'சதி' எனும் உடன்கட்டை ஏறும் கொடிய சம்பிரதாயத்தை எதிர்த்ததுடன், விதவைகள் மறுமணம் புரிந்து, சமுதாயத்தில் சீரோடும், சிறப்போடும் வாழ வழி வகுத்த, உண்மையான பகுத்தறிவாளர் ராஜாராம் மோகன்ராய்!

இவர்களை விடவா, இங்குள்ள நாத்திக பகுத்தறிவாளர்கள் சமூக புரட்சி செய்து விட்டனர்?

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிபட்டி பஞ்சாயத்து தேர்தலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இனத்தவர், நாற்காலியில் அமர முடியாமல் இருப்பதை, வேடிக்கை பார்ப்பவர்கள் தானே இவர்கள்!

சுதந்திரம் பெற்று, 78 ஆண்டுகள் ஆகியும், பட்டியலின மக்களை பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் நிறுத்தி, அடுத்த வேளை சோற்றுக்கும், இலவசத்திற்கும் கையேந்த வைப்பதற்கு பெயர் தான் இவர்கள் அகராதியில் சமூக நீதி!

ஒரு மில்லி கிராம் தங்கம் கூட இல்லாத வறிய நிலையில், கல்வி அறிவின்றி இருக்கும் இருளர், குறவர் போன்ற பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்கு இந்த சமூகநீதி காவலர்கள் என்ன செய்து விட்டனர்?

அவர்கள் வாழ்வு ஏன் ஏற்றம் பெறவில்லை?

பகுத்தறிவு, சமூகநீதி என்ற வார்த்தைகளை பயன்படுத்தி, 70 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தை கொள்ளையடித்து வரும் இவர்களை நம்பி, இன்னும் எத்தனை காலம்தான் மக்கள் ஏமாறுவரோ?

நீதிமன்றத்தாலும் தடுக்க முடியாது!


அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில நுாறு ரூபாய் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை தேடிப்பிடித்து, கைது செய்து சிறைக்கு அனுப்பி வைப்பதும், பல கோடி ரூபாய் ஊழல் செய்தவரை காப்பாற்ற, அரசே உச்ச நீதிமன்றம் வரை சென்றதையும் முன்னாள் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் பார்த்தோம்.

தற்போது டாஸ்மாக் நிறுவனம் மீதான, 1,000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் உச்ச நீதிமன்றம் சென்று, விசாரணைக்கு இடைக்கால தடை பெற்று உள்ளன.

எந்தவொரு வழக்கையும் உச்ச நீதிமன்றம் வரை சென்று, தங்களுக்கு சாதகமான உத்தரவை பெறலாம் என்பதை, இந்த வழக்கும் நிரூபித்து விட்டது.

கடந்த மாதம் 23ம் தேதி, 'டாஸ்மாக் முறைகேடு குறித்து விசாரணை செய்ய தடை இல்லை' என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியவுடனே, விசாரணையை துவக்கி விட்டது அமலாக்கத் துறை.

இந்நிலையில், 'டாஸ்மாக் முறைகேடு வழக்கை, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை எப்படி விசாரணை செய்ய முடியும்' என்று கேள்வி எழுப்பி, 'தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தான் விசாரணை செய்ய வேண்டும்' என்று கூறி, இடைக்கால தடை விதித்து உள்ளது உச்ச நீதிமன்றம்.

இவ்வழக்கில் குற்றம் செய்ததாக கூறப்படுவோர் ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்றவர்கள். அப்படி இருக்கும்போது, தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் எப்படி நியாயமான முறையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பர்?

இதற்கு முன் பல அமைச்சர்களை, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க வைத்ததே, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தான். அப்படி முடிக்கப்பட்ட பல வழக்குகளை மீண்டும் விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதே!

இந்நிலையில், குற்றவாளிகள் தப்பிக்கும் வகையில் உள்ளது, உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு.

எது எப்படியோ... பணம் மற்றும் செல்வாக்கு படைத்தவர்கள், சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்துக் கொள்வதை, நீதிமன்றத்தால் கூட தடுக்க முடிவதில்லை என்பதே உண்மை!






      Dinamalar
      Follow us