sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

வியூகம் வெற்றி பெறுமா?

/

வியூகம் வெற்றி பெறுமா?

வியூகம் வெற்றி பெறுமா?

வியூகம் வெற்றி பெறுமா?


PUBLISHED ON : நவ 09, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 09, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., நிர்வாகிகளுக்கான பயிற்சிக் கூட்டத்தில், 'தமிழகத்தை அழிக்க இன எதிரிகளும், துரோகிகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வருகின்றனர். இவர்களை வீழ்த்தி நம் மண், மொழி, மானத்தை காக்க வேண்டும்' என்று, ஏதோ போருக்கு தயாராகிவிட்ட சோழமன்னரைப் போல் சூளுரைத்துள்ளார், முதல்வர் ஸ்டாலின்.

இந்தப் போர் பிரகடனமெல்லாம் எதற்காக என்கிறீர்களா?

கடந்த தேர்தல்களில் பா.ஜ.,வை தமிழகத்தின் எதிரியாக சித்தரித்து ஜெயித்ததுபோல், வரும் சட்டசபை தேர்தலிலும் ஜெயித்து விட மாட்டோமா என்ற நப்பாசைக்கு தான்!

தி.மு.க.,வின் இந்த நரி தந்திரத்தை மக்கள் புரிந்து கொண்டு விட்டதால் தான், கடந்த பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு, 18 சதவீத ஓட்டுகளை வாரி வழங்கினர். அதாவது, நோட்டாவிற்கு கீழே இருந்த பா.ஜ., திடீரென அசுரபலம் பெற, மக்களின் அரசியல் விழிப்புணர்வு தான் காரணம்!

காங்கிரஸ் என்ற மாபெரும் இயக்கத்தை வீழ்த்தி, தொடர்ந்து மூன்று முறை மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருப்பதுடன், பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி நடத்தும் பா.ஜ.,வை, சிறுபான்மையினருக்கும், தமிழர்களுக்கும் எதிரான கட்சி என்ற பிம்பத்தை கட்டமைத்து, கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றது, தி.மு.க.,

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்பது, காங்கிரஸ் காலம் தொட்டு நடைபெறும் தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறை தான். அதையும் கூட ஏதோ உழைக்கும் மக்கள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் ஓட்டுகளை நீக்கிவிட்டு பா.ஜ.,வும் - அ.தி.மு.க.,வும் வெற்றி பெற நடத்தும் சதித்திட்டம் என்று கூறி பயமுறுத்துகிறது, தி.மு.க.,

இப்படித்தான், தி.மு.க., - அ.தி.மு.க., என இரு திராவிட கட்சிகளும் திரைப்படத்தில் வரும் ஹீரோ - வில்லன் போல மாறி மாறி நடித்து, கடந்த, 58 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றன.

இனியும் இந்த பாணி அரசியல் எடுபடாது!

தமிழகத்தில் பா.ஜ., காலுான்றி விட்டது. கூடவே, விஜயின் அரசியல் வருகை என, 2026 தேர்தல் எல்லா கட்சிகளுக்கும் சவாலாகவே இருக்கும்.

எனவே, தி.மு.க.,வின் வியூகம் வெற்றி பெறுவது சந்தேகமே!

மக்களுக்கு நன்கு தெரியுமே!


கே.எஸ்.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடியில் இருந்து எழுதுகிறார்: சட்ட அமைச்சர் ரகுபதி பேட்டி ஒன்றில், 'தி.மு.க., பயப்படும் கட்சி அல்ல' என்று கூறி இருந்தார். அவர் சொல்வது நுாற்றுக்கு நுாறு உண்மை. தி.மு.க., மற்றவர்களை பயமுறுத்தி பார்க்கும் கட்சியே தவிர, பயப்படும் கட்சியல்ல!

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் மீது கல்லெறிந்து, ஆபாசமாக பேசி பயமுறுத்தியது, தி.மு.க., ஆனால், அவர் பயப்படாமல், சர்க்காரியா கமிஷன் வாயிலாக நெருக்கடி கொடுத்ததும் காலில் விழுந்து கதறியது.

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை வெளியிடுவதை தடுத்து எம்.ஜி.ஆரை பயமுறுத்தியது, தி.மு.க., விளைவு, ஆட்சியை இழந்து வீட்டிற்குள் முடங்கியது.

சட்டசபையில் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி பயமுறுத்தியது; அவர் பயப்படாமல் திருப்பி அடிக்கவே, 'ஐயோ... கொல்றாங்க...' என்று அலறியது, தி.மு.க.,

ஆட்டுக்குட்டி கழுத்தில், பா.ஜ., முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை மாட்டி, நடுரோட்டில் ஆட்டை வெட்டி பயம் காட்டியது; அவர் தி.மு.க.,வின், 'ஊழல் பைல்ஸ்' என்ற பெயரில் திருப்பி அடிக்கவே, 'ஐயோ... அண்ணாமலை வெரி டேஞ்சர்' என்று புலம்புகிறது, தி.மு.க.,

இப்படி எதிர்க்கட்சிகளையே பயமுறுத்தி வாங்கிக் கட்டிக் கொண்ட தி.மு.க., சாதாரண மக்களை விட்டுவிடுமா என்ன?

'கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க கூடாது' என்று கூறிய மாணவர் உதயகுமார் மர்மமாக இறந்து போனார். அவர் தந்தை வாயிலாக, 'இவன் என் மகன் இல்லை' என்று சொல்ல வைத்தது முதல், 'ஓசி' பிரியாணி தராவிட்டால் கடையை உடைப்பது, பெண் காவலரிடம் அத்துமீறுவது, சமூக வலைதளத்தில் எதிர் கருத்து பதிவிடுவோரை நள்ளிரவில் கைது செய்வது, அவர்கள் வீட்டில் மலத்தை வீசுவது என்று மக்களை பயமுறுத்தும் கட்சி தான், தி.மு.க.,வே தவிர, பயப்படும் கட்சி அல்ல என்பது, தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியுமே!

கவனம் அவசியம்!


ஆர்.சுப்பிரமணியம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாடகை வீட்டில் வசிப்போருக்கு சொந்த வீடு என்பது கனவு; அதிலும், சென்னைவாசிகளுக்கு அது ஒரு பெருங்கனவு. அதேநேரம், வீடு வாங்க நினைப்போர், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவதை நாகரிகமாகவும், வசதியாகவும் கருதுவதால், தாங்கள் சிறுகச் சிறுக சேமித்து வைத்ததையும், வங்கிகளில் கடன் வாங்கியும் வீடு வாங்குகின்றனர்.

ஆனால், அக்கட்டடங்கள் தகுதியான நிலத்தில், முறையாக கட்டப்பட்டுள்ளனவா என்பதை கவனிக்க மறந்து விடுகின்றனர்.

சுமார், 12 ஆண்டுகளுக்கு முன், வடசென்னை முகலிவாக்கத்தில் அருகருகே உயர்ந்து நின்ற இரண்டு அடுக்குமாடி கட்டடங்களில் ஒன்று, மண்ணோடு மண்ணாக அமிழ்ந்து போக, பக்கத்தில் இருந்த கட்டடத்தையும் தகர்த்து தரைமட்டமாக்க நீதிமன்றம் ஆணையிட்டது .

இதனால், சேமித்த பணத்தை இழந்ததுடன், கடன் வாங்கி வீடு வாங்கியவர்கள் கடன்காரர் களானது தான் மிச்சம்.

இப்போதும் அதுபோன்றதொரு சூழ்நிலையை, தி.மு.க., அரசு உருவாக்க முயன்ற நிலையில், நீதிமன்றம் தலையிட்டு அரசின் ஆணையை நிறுத்தி வைத்துள்ளது.

சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணை, சதுப்பு நிலப்பகுதி; எம்.ஜி.ஆர்., ஆட்சிக்காலத்தில் அதை துார்த்து கல்லுாரிகளும், அடுக்குமாடி கட்டடங்களும் கட்ட அனுமதிக்கப்பட்டது.

தற்போது, 'ராம்சார்' தளம் எனும் ஈரநிலமாக அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், விதிகளை மீறி, 1,400 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, 'பிரிகேட்' என்ற தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிலப்பகுதியில், தனியார் நிறுவனம் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இனி, அக்கட்டுமான நிறுவனம் தன் அரசியல் செல்வாக்கை வைத்து உச்ச நீதிமன்றம் சென்று, சென்னை உயர் நீதிமன்ற தடைக்கு விலக்கு பெற்று, கட்டடங்களை கட்டி விற்கத் துணியலாம்.

சொந்த வீடு கனவில் மிதப்போர், முகலிவாக்கம் அடுக்குமாடி கட்டடங்களுக்கு நிகழ்ந்ததை நினைவில் வைத்து, இதுபோன்ற கட்டடங்களில் பிளாட் வாங்காமல் தவிர்ப்பது, அவர்களது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பாகும்!






      Dinamalar
      Follow us