PUBLISHED ON : செப் 30, 2024 12:00 AM

கே.ரங்கராஜன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மக்கள் நீதி மய்யம்' பொதுக் குழு கூட்டத்தில் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலின் உரை, சராசரி அரசி யல்வாதியை விட தரம் தாழ்ந்து அமைந்தது.
'நாலு வயசுலேர்ந்து மக்களோட இருக்கேன்; அதனால் அரசியலுக்கு வந்தேன்' என்கிறார். ஏன் இன்னும் முதல்வராக முடியவில்லை?
'அதிக வரி செலுத்தும் ஒரே மாநிலம் தமிழகம்' என்கிறார். ஜெகத்ரட்சகன் சொத்தும் சேர்த்து கட்டி இருக்கிறோமா என்ற கேள்விக்கு பதில் சொல்வாரா கமல்?
'ஒரே நாடு ஒரே தேர்தல் சரிப்படாது' என்கிறார்; இந்தியா சுதந்திரக் காற்றை அனுபவித்த காலத்தில் அது தான் நடைமுறையில் இருந்தது, நாலு வயசு பாப்பாவுக்கு தெரியாமல் போச்சு போங்க!
'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என்பவருக்கு, தமிழகமே ஒரு குடும்பத்தின் கைக்கு சென்று விட்டது ஏன் இன்னும் புலப்படவில்லை?
இவர் முக்கி முக்கிப் பேசுவதை ரசிக்கும் விசிலடிச்சாங்குஞ்சுகளைத் தவிர மற்ற யாரும் இவருக்கு ஓட்டுப் போட மாட்டர் என்பது மட்டும் புரிகிறது!
விபத்தில்லா மாநிலமாக உருமாறும்!
எம்.மனோகர்,
காங்., மாஜி கவுன்சிலர், சங்கரன்கோவில், தென்காசி மாவட்டத்தில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் மாநிலம் முழுதும், மது விலக்கு
உடனடியாக அமல்படுத்தப்பட்டால், மிக்க மகிழ்ச்சி.
தாமதமாக
செயல்படுத்த முடிவு செய்தால், மது வாங்குவோர் ஒவ்வொருவரின் ஆதார் எண்ணையும்
பதிவு செய்து, 'ஸ்ட்ரீம்லைன்' செய்யலாம்; இதன் வாயிலாக, 18 வயதுக்கு கீழே
உள்ளவர்களுக்கு மது கிடைப்பது தவிர்க்கப்படும். முழுதுமாக அமல்படுத்த
முடியவில்லை என்றால், ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு, 180 முதல் 200 மிலி., வரை
மது வழங்கலாம்; அதற்கு மேல் கிடையாது என்று சொல்லலாம்.
பின்,
மெதுவாக ஒவ்வொரு வரையும் அழைத்து, மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
குறித்து, 'கவுன்சிலிங்' வழங்க வேண்டும்; இதில் மனம் திருந்தி மீள்வோர்
இருந்தால் மகிழ்ச்சியே.
ஏனையோருக்கு, அரசு மருத்துவமனையில் பரிசோதனை
கட்டாயமாக்கப் பட்டு, தகுதி இருந்தால், 'லைசென்ஸ்' கொடுத்து, மது சப்ளை
செய்யலாம்; கடைகளில் கண்டிப்பாக, 'பார்' இருக்கக் கூடாது. மது
அருந்திவிட்டு, பொதுவெளியில் வரவே கூடாது. அப்படியிருந்தால், விபத்தில்லா
மாநிலமாக உருமாறும் தமிழகம்!
சென்னைக்கு ஒரு சட்டம்; நெல்லைக்கு வேறு சட்டமா?
சி.ஆர்.குப்புசாமி,
உடுமலைப் பேட்டை, திருப்பூர் மாவட்டத் தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சியில் தினமும் நிகழும் சம்பவங்கள், இது நாடா
அல்லது சுடுகாடா என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பி உள்ளது. அதற்கு,
சமீபத்தில் நடந்த இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டு கூறலாம். ஒன்று, சென்னை
அசோக் நகர் அரசு மேல் நிலைப் பள்ளியில் பேச்சாளராக அழைக்கப்பட்ட பரம்பொருள்
அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்ட விவகாரம்.
இரண்டு, திருநெல்வேலி தியாகராஜ நகரைச் சேர்ந்த சுந்தர் என்ற பிராமணரின் பூணுாலை அறுத்த சம்பவம்.
உலகப்
பொதுமறையான திருக்குறளில் கூறப்பட்ட கருத்தை மட்டுமே மகாவிஷ்ணு மாணவர்கள்
முன் வைத்தாரே தவிர, யாரின் ஊனத்தையும் குறிப்பிடவில்லை. இதற்கு
கொந்தளித்த, தி.மு.க., அரசும் மொத்த, 'நெட்டிசன்'களும், திருநெல்வேலியைச்
சேர்ந்த சுந்தர் என்ற பிராமணரின் பூணுாலை அறுத்த சம்பவத்திற்கு வாய் கூட
திறக்கவில்லை; இதற்கு காவல்துறை நடவடிக்கை ஒன்றுமே இல்லை.
'தமிழகம்
அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது' என்று பெருமை பேசிக் கொள்ளும் முதல்வர்
ஸ்டாலின், இவ்விரு சம்பவங்களையும் தீர ஆராய்ந்து, தருமத்தை நிலைநாட்ட
வேண்டும்.
இவர்களை இப்போதே வீட்டுக்கு அனுப்பலாமா!
மா.ஜெயக்கொடி,
சந்தையூர், மதுரை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: 'மக்களுடன் முதல்வர்'
திட்டத்தின் கீழ், கிராமத்தில் ஆக., 14, 2024 அன்று நடந்த முகாமில் ஒரு
மனு அளித்தேன். 'விண்ணப்பத்தின் நிலை அறிய, '1100' என்ற எண்ணை அழைக்கவும்'
என, மொபைல் போனில் குறுஞ்செய்தி வந்தது.
குறிப்பிட்ட எண்ணை
அழைத்ததில், 'முதல்வரின் உதவி மையத்தை அழைத்ததற்கு நன்றி. இணைப்பில்
காத்திருங்கள்; உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்' என, பதிவு
செய்யப்பட்ட பெண் குரல் ஒலித்தது. பின் யாருமே தொடர்பு கொள்ளவில்லை.
நான்கு
நாட்கள் முயற்சித்தும் பயனில்லை. அதிகாரிகள் இப்படி மெத்தனமாக இருப்பது
முதல்வருக்கு தெரியுமா? முதல்வரே, 1100 எண்ணை ஒருமுறை தொடர்பு கொண்டால்,
உண்மை நிலவரம் தெரியும்.
அருப்புக்கோட்டையில், பெண் சப் - இன்ஸ்பெக்டர் ஒருவரை, ரவுடி ஒருவன் தலையை பிடித்து அடிக்கிறான்.
தருமபுரியில்
ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட காசாளரை, சப் - இன்ஸ்பெக்டர்,
செருப்பை கழற்றி அடிக்க முயற்சித்து அசிங்கமாக பேசுகிறார்; பணத்தை துாக்கி
போடுகிறார்.
குடிமன்னர்கள், போதை மன்னர்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டனர். சட்டம் - ஒழுங்கும் சீர்குலைந்து விட்டது.
'அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டுமா... இவர்களை வீட்டுக்கு அனுப்பினால் என்ன...' என்று தோன்றுகிறது!
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்!
ப.ராஜேந்திரன்,
சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் அண்டை நாடான
வங்க தேசத்தில், ராணுவத்தால் நடத்தப்படும் முகமது யூனுஸ் தலைமையிலான
தற்காலிக அரசு, வங்க தேசத்தில் இயங்கி வரும் அல்- - குவைதா ஆதரவு ஏ.பி.டி.,
எனப்படும் அன்சாருல்லா பங்களா டீம் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர்
ஜஷீமுதீன் ரஹ்மானியாவை பரோலில் விடுவித்துள்ளது.
'வங்கதேசத்தில்
பிரச்னையை உருவாக்க இந்தியா முயல்கிறது. சீனா உதவியுடன் இந்தியாவின்
வடகிழக்கு மாநிலங்களை துண்டிப்போம், ஜம்மு- காஷ்மீருக்கு விடுதலை பெற்றுத்
தருவோம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உதவியுடன் வருவோம், இந்தியாவின்
வடகிழக்கு மாநிலங்களைத் துண்டிப்போம்' என்று ஏராளமான கனவுகளை உள்ளடக்கி
இருக்கிறது அவர் பேச்சு.
அல்- - குவைதா என்ற பயங்கரவாத அமைப்பின்
தலைவர் ஒசாமா பின்லேடன், 2001ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது
தாக்குதல் நடத்தி 3,000 பேரை உயிரிழக்க வைத்ததை இந்த உலகம் மறக்கவில்லை.
இதையடுத்து,
அமெரிக்க படையினர் அந்த அமைப்பை வேரோடு அழித்து, பாகிஸ்தானில் இருந்த
ஒசாமா பின்லேடன் மீது அதிரடி தாக்குதல் நடத்தி கொன்றனர். ஆனால், இன்று
ஒபாமாவின் மகன் ஹம்சா பின்லேடன் தலைமையில், அல்- - குவைதா அமைப்பு
உயிர்ப்புடன் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆகவே, வங்கதேசத்தில்
சமீபத்தில் நடந்த புரட்சிக்குப் பின்னும், அல்- - குவைதா இயக்கத்தின் கைகள்
இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா தேவைப்பட்டால்,
அமெரிக்காவின் உதவியுடன் செயல்பட்டு, பயங்கரவாதிகள் நம் எல்லைகளை அண்டாது
காக்க வேண்டும்.
பாகிஸ்தான் போல, வங்கதேசத்திலும் நமக்கு எதிராக பயங்கரவாதிகள் வளராமல், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம்.