PUBLISHED ON : ஆக 16, 2024 12:00 AM

ஆகஸ்ட் 16, 1943
சிவகங்கை மாவட்டம், சேந்தி உடையநாதபுரத்தில், பெரியசாமி - சிட்டாள் தம்பதியின் மகனாக, 1943ல் இதே நாளில் பிறந்தவர் ம.பெ.சீனிவாசன்.இவர், பொருளியலில் பட்டம் முடித்து, மதுரை தியாகராஜர் கல்லுாரி யில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். சென்னை து.கோ.வைணவ கல்லுாரி, சிவகங்கை துரைசிங்கம் அரசு கல்லுாரிகளில் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார்.
வைணவ இலக்கியங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவர் எழுதிய, 'திருமங்கையாழ்வார் மடல்கள், பெரியாழ்வார், ஒருநாள் ஒரு பாசுரம், ஆழ்வார்களும் தமிழ் மரபும்' உள்ளிட்ட நுால்கள் வைணவ சமயத்தாரிடம் செல்வாக்கு பெற்றன.
பல்கலை அறக்கட்டளை சொற்பொழிவுகள், வானொலி உரைகள், கம்பன் கழகம், அருள்நெறி மன்றம் உள்ளிட்டவற்றில் ஆய்வுரைகளை நிகழ்த்தி வருகிறார். சேக்கிழார் ஆராய்ச்சி
மைய விருது, வள்ளல் சடையப்ப விருது, உறவு விருதுகளை பெற்றுள்ளார்.சம்பிரதாய மரபு, தமிழ் ஆய்வு மரபு எனும் இரண்டு தளங்களில் நடந்த வைணவ ஆய்வை ஒருங்கிணைத்த ஆய்வாளரின் 81வது பிறந்த தினம் இன்று!

