PUBLISHED ON : செப் 25, 2024 12:00 AM

செப்டம்பர் 25, 2020
ஆந்திர மாநிலம், நெல்லுாரில், சாம்பமூர்த்தி - சகுந்தலம்மா என்ற தெலுங்கு பிராமண தம்பதியின் மகனாக, 1946, ஜூன் 4ல் பிறந்தவர்ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்பிரமணியம் என்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அனந்தபூரில் பள்ளி படிப்பை முடித்து, சென்னையில் இன்ஜினியரிங் சேர்ந்தார். தெலுங்கு கலாசார மையத்தின் இசைக்குழுவில் சேர்ந்து பாடினார்.
அக்குழுவில், இளையராஜா, கங்கை அமரன்உள்ளிட்டோர் இருந்தனர். ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாத ராமண்ணா என்ற தெலுங்கு படத்தில் பாடகரானார். தமிழில், ஓட்டல் ரம்பா படத்தில், 'அத்தானோடு' என்ற பாடலை பாடி அறிமுகமானார்.ஆனால், அடிமைப்பெண் படத்தில், எம்.ஜி.ஆருக்காக பாடிய, 'ஆயிரம் நிலவே வா' பாடல் முதலில் வெளியாகி, 'மெகா ஹிட்' ஆனது. நான்கு தலைமுறை நடிகர்களுக்கும் பாடிய
இவர், இளையராஜாவின் இசையில், 'எவர்கிரீன்' பாடல்களை அள்ளி தந்தார்.இந்திய மொழிகளில், 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, பத்ம விருதுகளை மொத்தமாய் பெற்றார். தன், 74வது வயதில், 2020ல் இதே நாளில், கொரோனா தொற்றால் காலமானார்.
'பாடும் நிலா' பாலுவின் நினைவு தினம் இன்று!