PUBLISHED ON : ஆக 27, 2024 12:00 AM

ஆகஸ்ட் 27, 1912
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம், ஊர்க்காவல் துறையில், சோமசுந்தரம் பிள்ளையின் மகனாக, 1912ல் இதே நாளில் பிறந்தவர் சோ.சிவபாத சுந்தரம்.
இவர், யாழ்ப்பாணம் மத்திய கல்லுாரியிலும், கொழும்பு சட்டக் கல்லுாரியிலும் படித்தார். 'ஈழகேசரி' பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். 200க்கும் மேற்பட்ட இளைஞர்களை இணைத்து, 'ஈழகேசரி இளைஞர் கழகம்' உருவாக்கி, சமூக பணி செய்தார். இரண்டாம் உலகப் போருக்கு பின், பி.பி.சி.,யில் சேர்ந்து, 'தமிழோசை' என்ற தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சியை துவக்கினார்.
முன்னாள் முதல்வர்களான காமராஜ், அண்ணாதுரை மறைந்தபோது, சென்னை வானொலியில் நேரடி வர்ணனை செய்தார். அனைத்திந்திய எழுத்தாளர் மாநாட்டு அமைப்பாளராகவும் செயல்பட்டார். 'தமிழ் நாவல் நுாற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும், சேக்கிழார் அடிச்சுவட்டில், கவுதம புத்தரின் அடிச்சுவட்டில்' உள்ளிட்ட நுால்களை எழுதிய இவர், 2000 நவம்பர் 8ல் தன் 88வது வயதில் மறைந்தார்.
தேமதுர தமிழோசையை திக்கெட்டும் பரவ செய்தவரின் பிறந்த தினம் இன்று!

