PUBLISHED ON : ஜன 15, 2025 12:00 AM

ஜனவரி 15, 1965
தஞ்சை, மானம்பூசாவடியில், நாராயணசாமி - பாப்பு தம்பதிக்கு மகனாக, 1914, ஜூன் 5ல் பிறந்தவர் ராமையா தாஸ்.
தஞ்சையின் கரந்தை தமிழ் கல்லுாரியில் புலவர் பட்டம் பெற்றார். அங்கேயே ஆசிரியராக பணியாற்றினார். எழுத்தாற்றல் மிக்க இவர், கதை, வசனம் எழுதி, நாடகங்களை இயக்கினார். டி.ஆர்.சுந்தரத்தின், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தில்,
'வச்சேன்னா' என்ற பாடலை எழுதி, திரைப்பட பாடலாசிரியரானார்.தொடர்ந்து, திகம்பர சாமியார், சிங்காரி உள்ளிட்ட படங்களுக்கு பாடல் எழுதினார். இவர் எழுதிய, 'சொக்கா போட்ட நவாபு, மயக்கும் மாலை பொழுதே, கல்யாண சமையல் சாதம், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'
உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன.இவரது, 'திருக்குறள் இசை அமுதம்' என்ற நுால், எம்.ஜி.ஆரால் வெளியிடப்பட்டது. இவரின் நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 1965ல் தன் 50வது வயதில், இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

