PUBLISHED ON : ஜூலை 01, 2024 12:00 AM

ஜூலை 1, 1864
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிக்கு அருகில் உள்ள வளையத்துாரில், சீதாராம அய்யரின் மகனாக, 1864ல், இதே நாளில் பிறந்தவர், வி.வெங்கய்யா. இவர், சென்னை பல்கலையில் இயற்பி யலில் பட்டம் பெற்று, மாமல்லபுரம் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். மத்திய தொல்லியல் துறையின் தலைமை கல்வெட்டு ஆய்வாளராக இருந்த, ஜெர்மனியைச் சேர்ந்த ஹுல்ட்ச், ஒரு நாள், மாமல்லபுரம் கல்வெட்டுகளை படிப்பதில் சிரமப்பட்டார். பழங்கால எழுத்துகளை படிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்த இவர், அவருக்கு உதவினார். அதையடுத்து, மத்திய தொல்லியல் துறை யின் தலைமை பொது இயக்குனர் ஜான் மார்ஷலிடம் பரிந்துரைத்து, இவரை பணியில் சேர்த்தார்.
இவர், தென் மாநிலம் முழுதும் சுற்றி, தண்டிவர்ம பல்லவ கல்வெட்டு, திருவாலங்காடு ராஜேந்திர சோழன் செப்பேடு, உத்திரமேரூர் குடவோலை கல்வெட்டு, தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள் உள்ளிட்ட, 800க்கும் மேற்பட்டவற்றை ஆவணப்படுத்தினார்.
தமிழகத்தை ஆண்ட பல்லவ, பாண்டிய, சோழ, விஜயநகர மன்னர்களின் கல்வெட்டு தகவல்களை, 'எபிகிராபி இண்டிகா' 11வது தொகுதியில் பதிவு செய்தார். பிரிட்டிஷ் அரசு, இவரின் பணிகளை பாராட்டி, 'ராய் பகதுார்' பட்டம் வழங்கியது. இவர் தன், 48வது வயதில், 1912, நவ., 21ல் மறைந்தார்.
தஞ்சை பெரிய கோவிலை கட்டியது ராஜராஜ சோழன் தான் என்பதை நிரூபித்தவர் பிறந்த தினம் இன்று!