PUBLISHED ON : ஜூலை 04, 2024 12:00 AM

ஜூலை 4, 1929
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் - ரத்னாவதி தம்பதியின் மகனாக, 1929ல் இதே நாளில் பிறந்தவர் ஆர்.முத்துராமன். இவர் படிப்பை முடித்து, அரசு பணிக்கு சென்றார். அப்போது, எஸ்.எஸ்.ராஜேந்திரனின் எஸ்.எஸ்.ஆர்., நாடக மன்றம், வைரம் நாடக மன்றங்களில் சேர்ந்து நடித்தார்.
'மகாகவி பாரதியார்' நாடகத்தில் கவிதை வரிகளை கம்பீரமாக பேசி நடித்து, தனித்துவம் பெற்றார். ஜெமினி கணேசன் நடித்த தென்துாசி படத்தில் அறிமுகமானார். சில படங்களில் நாயகனாகவும், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் உள்ளிட்டோருடன் இணைந்து துணை நாயகனாகவும் நடித்தார்.
இவர் நடித்த, ரங்கூன் ராதா, தங்க பதுமை, சிவந்த மண், துலாபாரம், நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, எதிர்நீச்சல், சுமைதாங்கி, கர்ணன், திருவிளையாடல் உள்ளிட்ட படங்கள் பேசப்பட்டன. 1960 - 1970களில் புகழ் பெற்ற நாயகனாக வலம் வந்தார். இவர், ஊட்டியில் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தார். 1981 அக்டோபர் 16ல் அங்கு உடற்பயிற்சி செய்தபோது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
'நவரச நாயகன்' கார்த்திக்கின் தந்தை பிறந்த தினம் இன்று!