PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM

ஜூலை 18, 2013
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீனிவாசன்அய்யங்கார் - பொன்னம்மாள் தம்பதிக்கு மகனாக, 1931, அக்டோபர் 29ல் பிறந்தவர், வாலி எனும் டி.எஸ்.ரங்கராஜன்.
இவர், ஸ்ரீரங்கத்தில் படித்த போது, 'நேதாஜி' என்ற கையெழுத்து பத்திரிகை நடத்தினார். அதில், ஓவியர் மாலியை பின்பற்றி, 'வாலி' என்ற பெயரில் ஓவியங்கள் வரைந்தார். அந்த பெயரே நிலைத்தது.
திருச்சி வானொலிக்கு நாடகங்கள் எழுதிய இவர், 'கற்பனை என்றாலும்...' என்ற பாடலை எழுதி, டி.எம்.எஸ்.,சுக்கு அனுப்பினார். அதை அவர் பாடி, பாராட்டினார். அழகர் மலை கள்வன் படத்திற்காக, 'நிலவும் தாரையும்' என்ற பாடலை எழுதி பாடலாசிரியரானார்.
எம்.ஜி.ஆர்., துவங்கி, தனுஷ் வரையிலான ஐந்து தலைமுறை நடிகர்களுக்கு, துள்ளல், சோகம், தத்துவம், தாலாட்டு, காதல் உள்ளிட்ட உணர்வுகளை, 10,000த்திற்கும் மேற்பட்ட பாடல்களில் வெளிப்படுத்தினார். காலத்திற்கேற்ப தன் மொழி நடையை மாற்றி, வாலிபக் கவிஞராகவே வலம் வந்தார்.
'ஓடும் மேகங்களே, அம்மா என்றழைக்காத, சிக்குபுக்கு ரயிலே, தத்தை தத்தை' என, அடுத்தடுத்த இசையமைப்பாளர்களுக்கு பாடல்களை எழுதிய இவர், 2013ல் தன் 81வது வயதில் இதே நாளில் மறைந்தார். 'கிருஷ்ண விஜயம், அவதார புருஷன்' உள்ளிட்ட காவியங்களை தந்த கவிஞரின் நினைவு தினம் இன்று!

