PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

ஆகஸ்ட் 6, 1925
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள மகாராஜபுரத்தில், அய்யப்ப நாயுடு -- வெங்கடம்மாள் தம்பதியின் மகனாக, 1925ல் இதே நாளில் பிறந்தவர் சீனிவாசன். மதுரையில் கல்லுாரி படிப்பை முடித்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை தன் முயற்சியால் கற்றார்.
இரண்டாம் உலகப்போர் நடந்தபோது, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில், தகவல் தொடர்பு பொறியாளராக பணியாற்றினார். வேலை நிறுத்தத்தை துாண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
'ஜனசக்தி' இதழின் ஆசிரியராக இருந்தார். இந்திய காங்கிரசில் சேர்ந்து, விடுதலை போரில் ஈடுபட்டார். தமிழகத்தில் பல்வேறு தொழிலாளர் சங்கங் களை உருவாக்கினார். மத்திய அரசின், சென்னை தொழிலாளர் வாரிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
ராஜபாளையம் நகர்மன்ற தலைவராகவும், பா.ஜ., இலக்கிய அணி தலைவராகவும் இருந்தார். பிரபலமான அரசியல், பொருளாதார நுால்களை தமிழில் மொழிபெயர்த்தார். இவரது நுால்களை தமிழக அரசு, நாட்டுடைமை ஆக்கியது. இவர் 2006 ஜூலை 24ல் தன் 81வது வயதில் மறைந்தார்.
மகாகவியின் படைப்புகளை ஆராய்ந்த, 'பாரதி' சீனிவாசன் பிறந்த தினம் இன்று!