PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM

ஆகஸ்ட் 13, 1933
சென்னை, திருவல்லிக்கேணியில், எம்.டி.ராமன் -- நடிகை வசுந்தராதேவி தம்பதியின் மகளாக, 1933ல், இதே நாளில் பிறந்தவர், வைஜெயந்தி மாலா.
இவர், பிரசன்டேஷன் கான்வென்ட், சர்ச் பார்க் பள்ளிகளில் படித்தார். வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதநாட்டியம் கற்றார். மனக்கல் சிவராஜா அய்யரிடம் கர்நாடக இசை கற்றார். தன் 13வது வயதில் அரங்கேற்றம் செய்தார். வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, சித்துார் ராணி பத்மினி,தேன் நிலவு, மர்ம வீரன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், பல்வேறு மொழி படங்களிலும் நடித்தார்.
இவரது நடனம், சிரிப்பு ரசிகர்களை கட்டிப்போட்டது. 1950 - 1960களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகையரில் ஒருவராக இருந்தார். இந்திராவின் பிரியத்தை பெற்ற இவர், காங்கிரஸ் கட்சி சார்பில், 1984, 1989ல், தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யானார்.
ராஜிவ் மறைவுக்கு பின் கட்சியிலிருந்து விலகினார். 1999ல், பா.ஜ.,வில் சேர்ந்தார். 'அவுட் லுக்' பத்திரிகை வெளியிட்ட, சிறந்த 75 இந்திய நடிகையரில் ஒருவராக இருக்கிறார். 'பத்மவிபூஷன்' விருது பெற்றுள்ள இவர், இன்று 91வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

