PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM

ஆகஸ்ட் 14, 1905
மதுரையில், நாட்டாண்மை மல்லி குடும்பத்தில், ராயலு அய்யர் - காவேரி அம்மாள் தம்பதியின் மகனாக,1905ல், இதே நாளில் பிறந்தவர் நா.ம.ரா. சுப்பராமன். இவர், கோல்கட்டாவில் ரவீந்திரநாத் தாகூர் நடத்திய சாந்தி நிகேதனில் இரண்டாண்டுகள் படித்தார். நாட்டின் விடுதலை போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.
சிறையில், கோவை அவினாசிலிங்கம் செட்டியார்,வேதாரண்யம் சர்தார், வேதரத்தினம் உள்ளிட்டோர் நண்பர்களாகினர். அனைவரும் காங்கிரசில் இணைந்து, சர்வோதய திட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். தன் 100 ஏக்கர் நிலத்தை வினோபா பாவேயிடம் பூமி தானமாக வழங்கினார்.
'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில்ஈடுபட்டு, கொடுஞ்சிறை தண்டனை பெற்றார். மதுரை நகராட்சி தலைவர், எம்.எல்.ஏ., எம்.பி.,யாகி, கிராமிய பல்கலை, காந்தி மியூசியம், காந்தி நிகேதன் உள்ளிட்டவற்றை துவக்கி சமூக தொண்டு செய்தார்.
தன் மாளிகையை, காமராஜர் பல்கலைக்கு தானமாக வழங்கியவர், தன், 77வது வயதில், 1983, ஜனவரி 25ல் மறைந்தார்.
'மதுரை காந்தி' பிறந்த தினம் இன்று!

