PUBLISHED ON : ஆக 23, 2024 12:00 AM

ஆகஸ்ட் 23, 1896
திருச்சி மாவட்டம், மணக்காலில், ராமசாமி அய்யர் - லட்சுமி தம்பதியின்மகனாக, 1896ல் இதே நாளில் பிறந்தவர் ஜம்புநாதன். இவர், இளமையிலேயே மும்பை சென்று படித்தார். அங்கு, சுவாமி தயானந்த சரஸ்வதியின், ஆரிய சமாஜத்துடன் தொடர்பில் இருந்து, வேதங்களை அறிந்தார்.
வேதங்கள் அனைவருக்கும் பொதுவானவை என்பதை அறிந்து, நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்தார்; அவற்றுடன் வேற்று மொழி படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்தார்.
முக்கியமாக, தயானந்த சரஸ்வதியின், 'சத்தியார்த்த பிரகாசம் - உண்மை நெறி விளக்கம், வைதீக ஜெயபேரிகை, ஜகத்தின் சூட்சுமம்' உள்ளிட்ட இவரது பல நுால்கள், தமிழ் ஆன்மிகவாதிகளுக்கு புதிய வெளிச்சத்தை காட்டின.
அத்துடன், 'ஸாம வேதம், யஜூர் வேதம் - கிருஷ்ண சுக்கில மந்திரங்கள்' உள்ளிட்டவற்றை தமிழில் மொழிபெயர்த்து, தன், 'ஜம்புநாதன் புத்தகசாலை' வாயிலாகவே வெளியிட்ட இவர், 1974, டிசம்பர் 18ல் தன், 78வது வயதில் மறைந்தார்.
மும்பை தாராவியில் முதல் தமிழ் துவக்கப்பள்ளி அமைய காரணமானவரின் பிறந்த தினம் இன்று!

