PUBLISHED ON : ஆக 31, 2024 12:00 AM

ஆகஸ்ட் 31, 1979
இசையமைப்பாளர் இளையராஜா - ஜீவா தம்பதியின் மகனாக, சென்னையில் 1979ல் இதே நாளில் பிறந்தவர் யுவன்சங்கர் ராஜா. செயின்ட் பீட்ஸ் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தார். ஜேக்கப் மாஸ்டரிடம் இசை கற்றார். லண்டன் டிரினிட்டி கல்லுாரியின் சென்னை கிளையில் பியானோ வாசிக்க கற்றார்.
தன் 16வது வயதில், அரவிந்தன் படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானார். பூவெல்லாம்கேட்டுப்பார் திரைப்படத்தின், 'இரவா பகலா, சுடிதார்அணிந்து வந்த சொர்க்கமே' உள்ளிட்டபாடல்களால் பிரபலமடைந்தார்.
துள்ளுவதோ இளமை, நந்தா, மவுனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மங்காத்தா, புதுப்பேட்டை, பருத்தி வீரன், சென்னை 600028, பிரியாணி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் ஜொலித்தார். இவரின், 'முன் பனியா, தேவதையை கண்டேன், எங்கேயோ பார்த்த, தாவணி போட்ட' உள்ளிட்ட பாடல்கள் என்றும் இனிப்பவை.
துள்ளல் இசையிலும், 'விசில்' போட வைப்பவரின், 45வது பிறந்த தினம் இன்று!