PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM

செப்டம்பர் 3, 1992
ஹரியானா மாநிலம், ரோஹ்தக் மாவட்டம், மொக்ரா கிராமத்தில், டில்லி போக்குவரத்து கழக நடத்துனர் சுக்பீர், சுகாதார மைய மேற்பார்வையாளர் சுதேஷ் மாலிக் தம்பதியின் மகளாக, 1992ல் இதே நாளில் பிறந்தவர், சாக் ஷி மாலிக். இவர் சிறுவயதில், தன் தாத்தாவை பார்த்து மல்யுத்தத்தில் ஈடுபட்டார்.
தன், 12வது வயதில், சோட்டு ராம் ஸ்டேடிய பயிற்சியாளர் ஈஸ்வர் தஹியாவிடம் பயிற்சி பெற்றார். 2010ல் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில், 58 கிலோ பிரீஸ்டைல் போட்டியில் வெண்கலம் வென்றார்.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்தார். கத்தார் ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றார். ரியோ ஒலிம்பிக் போட்டியில், உலக சாம்பியன்களுடன் பல சுற்றுகளில் மோதி, வெண்கலம் வென்று, பெண்கள் மல்யுத்தத்தின் முதல் பதக்கத்தை நாட்டுக்கு தந்தார்.
துருக்கியின் இஸ்தான்புல், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்றார். உடற்கல்வி இயக்குனராகவும், ரயில்வே அதிகாரியாகவும் பணிபுரியும், மல்யுத்த மங்கையின், 32வது பிறந்த தினம் இன்று!