PUBLISHED ON : செப் 08, 2024 12:00 AM

செப்டம்பர் 8, 2023
தேனி மாவட்டம், வருஷநாட்டுக்கு அருகில் உள்ள பசுமலைத்தேரியில் 1966, ஜூலை 12ல் பிறந்தவர் ஜி.மாரிமுத்து.
விவசாய குடும்ப பின்னணியில் வளர்ந்த இவர், இன்ஜினியராகும் கனவுடன் வளர்ந்தார். பாரதிராஜாவின்முதல் மரியாதை படத்தை பார்த்து, திரைப்பட இயக்குனராகும் கனவுடன் சென்னை வந்த இவர், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக முயற்சித்து முடியாமல், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் வேலை செய்தார்.
கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக சேர்ந்து, ரசிகர் கடிதங்களுக்கு பதில் எழுதினார். ராஜ்கிரண், மணிரத்னம், வசந்த், சீமான் உள்ளிட்டஇயக்குனர்களுடன் பணியாற்றினார். இவர் திரைக்கதை, வசனம் எழுதி, கண்ணும் கண்ணும் என்ற படத்தை இயக்கினார்.
யுத்தம் செய், ஆரோகணம், நிமிர்ந்து நில், கொம்பன் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பரியேறும் பெருமாள், ஜெயிலர் படங்கள் இவரின் நடிப்புக்கு விருந்தாக அமைந்தன. தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த இவர், 2023ல், இதே நாளில், தன், 57வது வயதில் திடீர் மாரடைப்பால் மறைந்தார்.
எழுத்து, பேச்சு, நடிப்பில் இடைவிடாமல் இயங்கிய கலைஞனின் நினைவு தினம் இன்று!