PUBLISHED ON : செப் 15, 2024 12:00 AM

செப்டம்பர் 15, 1819
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில்,பிரபு குடும்பத்தில், 1819ல், இதே நாளில் பிறந்தவர் பிரான்சிஸ்நேப்பியர்.
இவர், பிரிட்டனில் உள்ள, 'டிரினிட்டி'கல்லுாரியில் படித்தார். வியன்னா, இத்தாலி, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில், பிரிட்டன் துாதராக பணியாற்றினார். 1866ல், சென்னை மாகாண கவர்னர் ஆனார். அப்போது, சென்னை மாகாணத்தின் ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் பஞ்சமும், பட்டினி சாவும் அதிகரித்தது.
தன் தோழியும், போர்க்களங்களில் வீரர்களை காத்த செவிலியருமான, பிளாரன்ஸ் நைட்டிங்கேலிடம்ஆலோசித்து, இறப்புகளை குறைத்தார்.மதுரை திருமலை நாயக்கர் மஹால் புதுப்பிப்பு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் துவக்கம், முல்லை பெரியாறு அணை திட்டமிடல்களை செய்தார்.
கூவம் நதியால் பிரிந்திருந்த சென்னை கோட்டை - நகரத்தை மிகப்பெரிய இரும்பு பாலம் கட்டி இணைத்தார். அது கான்கிரீட் பாலமாக மாறி இன்றும்,'நேப்பியர் பாலமாக' நிற்கிறது. நாட்டின் வைஸ்ராயாக உயர்ந்த இவர், 1898 டிசம்பர் 19ல் தன் 79வது வயதில் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!