PUBLISHED ON : பிப் 23, 2025 12:00 AM

பிப்ரவரி 23, 1977
ஈரோட்டில், வெங்கட நாயக்கர் கிருஷ்ணசாமியின் மகனாக, 1926, மார்ச் 5ல் பிறந்தவர் சம்பத். இவர், ஈரோட்டில் பள்ளி படிப்பு முடித்து, சென்னை பச்சையப்பன் கல்லுாரியில்படித்தார். தன் சித்தப்பாவான ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக்கட்சி, தி.க.,வில் சேர்ந்தார். அவரின் வாரிசாக வளர்ந்த இவர், மணியம்மையை ஈ.வெ.ரா., திருமணம் செய்ததை எதிர்த்து, தி.க.,வில் இருந்து வெளியேறினார்.
அண்ணாதுரை, நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து, தி.மு.க.,வை துவங்க காரணமானார். 1957ல், நாமக்கல் தொகுதி எம்.பி.,யானார். 1961ல், அண்ணாதுரையின் திராவிட நாடு கொள்கைக்கு எதிராக, தமிழ் தேசியக் கட்சியை துவங்கினார்.
கடந்த 1962ல் காங்கிரசில் இணைந்தார். 'சண்டே டைம்ஸ்' ஆங்கில இதழ், 'ஜெயபேரிகை, தமிழ்ச் செய்தி' இதழ்களை நடத்தினார். தமிழ், ஆங்கிலத்தில் உரையாற்றும் திறமை வாய்ந்தவர். பல நுால்களை எழுதியுள்ள இவர், தன் 51வது வயதில், 1977ல், இதே நாளில் மறைந்தார்.
தமிழக காங்., முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் தந்தை மறைந்த தினம் இன்று!

