PUBLISHED ON : பிப் 26, 2025 12:00 AM

பிப்ரவரி 26, 1933
சிவகங்கையில், 1884, செப்டம்பர் 16ல் பிறந்தவர் ராமச்சந்திரன் சேர்வை. இவர், திருவனந்தபுரம் உயர்நிலைப் பள்ளி, மதுரை, திருச்சியில் உள்ள கல்லுாரிகளில் பட்டப் படிப்பு முடித்து சென்னை சட்டக் கல்லுாரியில் பி.எல்., படிப்பை முடித்தார். மதுரை, சிவகங்கையில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
அப்போது, நீதிக்கட்சியின் தாக்கத்தால், ஜாதி ஒழிப்பில் முனைப்புடன் செயல்பட்டார். தாழ்த்தப்பட்டோர் கோவில் பிரவேசத்திற்காக பாடுபட்டார். அவர்களின் கல்விக்காக இரவு பள்ளிகளை திறந்தார்.
கடந்த 1929ல், செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில், தன் ஜாதி பெயரை துறந்து, சிவகங்கை ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டார். இரட்டை ஆட்சி முறையில் நீதிக்கட்சி ஆட்சியமைத்த போது, தேடி வந்த அமைச்சர் பதவியை மறுத்தார். ஈரோடு சுயமரியாதை மாநாடு, முத்துலட்சுமி ரெட்டி பெண்கள் விடுதலை மாநாடுகளுக்கு தலைமை ஏற்றார். இவர், தன் 49வது வயதில், 1933ல் இதே நாளில் மறைந்தார்.
சிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரால் வாழும் தலைவரின் நினைவு தினம் இன்று!

