PUBLISHED ON : பிப் 27, 2025 12:00 AM

பிப்ரவரி 27, 2008
சென்னை, திருவல்லிக்கேணியில், ஸ்ரீநிவாஸ் -- கண்ணம்மா தம்பதிக்கு மகனாக, 1935, மே 3ல் பிறந்தவர் ரங்கராஜன். தந்தைக்கு அடிக்கடி இடமாறுதல் ஏற்பட்டதால், ஸ்ரீரங்கம் பாட்டி வீட்டில் தங்கி படித்தார்.
சென்னை, எம்.ஐ.டி.,யில் மின்னணு வியலில் பி.டெக்., முடித்து, மத்திய அரசின் சிவில் ஏவியேஷன் பிரிவில் பணியில் சேர்ந்தார். பெங்களூரு, 'பாரத் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தின் ரேடார் ஆய்வு பிரிவில் பணியாற்றி, பொது மேலாளராக உயர்ந்தார். ஓட்டுப்பதிவு இயந்திர உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றினார்.
இவரது, 'இடது ஓரத்தில்' என்ற சிறுகதை, குமுதத்தில் வெளியானது. குமுதத்தில் ரா.கி.ரங்கராஜன் இருந்ததால் பெயர் குழப்பத்தை தவிர்க்க, தன் மனைவி சுஜாதா பெயரில் எழுதினார். அதுவே நிலைத்து, புகழை தந்தது. கவிதை, நாடகம், அறிவியல் கட்டுரைகள், திரைப்பட வசனகர்த்தா என எழுத்துலகில் தீவிரமாக இயங்கியவர், தன் 72வது வயதில், 2008ல், இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

