PUBLISHED ON : பிப் 28, 2025 12:00 AM

பிப்ரவரி 28, 1893
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்,கல்பாத்தியில், 1893ல் இதே நாளில் பிறந்தவர் கே.ஆர்.ராமநாதன்.
இவர், பாலக்காடு அரசு விக்டோரியா கல்லுாரியில் பி.ஏ., பட்டமும், சென்னை மாநிலக் கல்லுாரி மற்றும் சென்னை பல்கலையில் இரண்டு எம்.ஏ., பட்டங்களும் பெற்றார். இயற்பியல்பட்டதாரியான இவர், கோல்கட்டாவுக்கு சென்று, சி.வி.ராமனுடன் சேர்ந்து, திரவங்களில் எக்ஸ் - ரே சிதைவு பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார்; இதற்காக, டி.எஸ்சி., பட்டம் பெற்றார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் இயற்பியல் ஆய்வுக்கூடத்தின் முதல் இயக்குநராக பணி ஏற்றார். இவரது வானியல் ஆய்வு குறித்த கட்டுரைகளை ஆராய்ந்த இந்திய அறிவியல் கழகம்,இந்தியாவின் வளிமண்டலவியல் ஆய்வுக்கூட விஞ்ஞானியாக இவரை நியமித்தது.
தன் சாதனைகளுக்காக, இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் வானிலை அமைப்பு விருது மற்றும் ஆர்யபட்டா விருது, மத்திய அரசின் பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷண் விருதுகளை பெற்றார். இவர், தன் 91வது வயதில், 1984 டிசம்பர் 31ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!

