PUBLISHED ON : மார் 02, 2025 12:00 AM

மார்ச் 2, 1917
பிரிட்டனில், 1917ல் இதே நாளில் பிறந்தவர், லாரன்ஸ் வில்பர்ட் பேக்கர் எனும், லாரி பேக்கர். பிரிட்டனில் கட்டடக்கலை பயின்று, இந்தியா வந்தார்.
கடந்த 1944ல், லண்டன் செல்ல கோல்கட்டாவில் காத்திருந்த இவர், நீளமான காதுடன் வரையப்பட்டிருந்த காந்தியின் கேலிச்சித்திரத்தைப் பார்த்து, அவரை நேரில் சந்திக்க சென்றார்.
களிமண், செங்கல், சுண்ணாம்பு, மூங்கில்களால் கட்டடம் கட்டுவதை பற்றி, காந்தி இவரிடம் கூறினார். லண்டன் சென்று மீண்டும் இந்தியா வந்த பேக்கர், பழங்குடியினருக்கும், திருவனந்தபுரத்தில் பல துறையினருக்கும் கட்டடங்களை கட்டிய துடன், அதன் தொழில்நுட்பம், வடிவமைப்பு பற்றி ஓவியங்களுடன் நுால்களாக வெளியிட்டார்.
இவரின் கட்டட பாணி, 'லாரி பேக்கர் பாணி' என்று அழைக்கப்படுகிறது. 1988ல், நாட்டின் உயரிய விருதான, 'பத்மஸ்ரீ' பெற்ற இவர், தன் 90வது வயதில், 2007 ஏப்ரல் 1ல் மறைந்தார்.
'ஏழைகளின் பெருந்தச்சன்' பிறந்த தினம் இன்று!