PUBLISHED ON : மார் 04, 2025 12:00 AM

மார்ச் 4, 1967
ராமநாதபுரம் சமஸ்தானத்தின் மன்னர் பரம்பரையில், ராஜராஜேஸ்வர சேதுபதியின் மகனாக, 1909ல் பிறந்தவர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி.
ராமநாதபுரம் ஜமீனாக, 1944ல் பொறுப்பேற்ற இவர், ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தின்படி 1948ல் பதவி விலகினார்.
கடந்த 1952ல், ராமநாதபுரம் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராஜாஜி, காமராஜர் அமைச்சரவையில், விளையாட்டு, பொதுப்பணித்துறைகளின் அமைச்சராக இருந்தார். மதுரை தமிழ்ச்சங்க தலைவர், ராமேஸ்வரம் கோவில் அறங்காவலர் குழு தலைவர், சென்னை பந்தய குதிரை உரிமையாளர் சங்க தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.
ராமநாதபுரம் மன்னர் கல்லுாரி ஆய்வகம் அமைக்கவும், ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லுாரி அமைக்கவும் நன்கொடை அளித்தார். வைகையிலிருந்து, ராமநாதபுரத்துக்கு குழாய் குடிநீர் வசதி செய்தார். திருப்புல்லாணி, ராஜசிங்கமங்கலம், லாந்தை ஆகிய இடங்களில் பாலங்களை கட்டினார். இவர் தன், 58வது வயதில், 1967ல் இதே நாளில் மறைந்தார்.
ராமநாதபுரத்தின் கடைசி ஜமீன் மறைந்த தினம் இன்று!