PUBLISHED ON : மார் 14, 2025 12:00 AM

மார்ச் 14, 1918
கன்னியாகுமரி மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கிராமத்தில், வெங்கடாசல பாகவதர் - பிச்சையம்மாள் தம்பதிக்கு மகனாக, 1918ல் இதே நாளில் பிறந்தவர் கே.வி.மகாதேவன்.
இவரது தந்தை, திருவனந்தபுரம் அரசின் ஆஸ்தான வித்வானாக இருந்தார். அவரிடம் இசையை கற்றார். இசை மீதான ஆர்வத்தால் பள்ளி படிப்பை முடிக்காமல், நாடகங்களில் பாடியதுடன் பெண் வேடத்திலும் நடித்தார். பின், பூதப்பாண்டி அருணாசல கவிராயரிடம் இசை கற்று, அங்கரை விஸ்வநாத பாகவதர் இசைக்குழுவில் இணைந்தார்.
பின், திரைப்பட இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணி செய்தார். எச்.எம்.வி., நிறுவனம் வெளியிட்ட பக்தி பாடல் இசைத்தட்டுகளுக்கு மெட்டமைத்தார். மனோன்மணி படத்தின், 'மோகனாங்க வதனி...' என்ற பாடலின் மூலம் இசையமைப்பாளரானார்.
இவரது, 'மன்னவன் வந்தானடி, பட்டிக்காடா பட்டணமா, மயக்கமென்ன...' உள்ளிட்ட பாடல்கள் காலத்தால் அழியாதவை. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், 1,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்த இவர், தன் 83வது வயதில், 2001, ஜூன் 21ல் மறைந்தார்.
'திரையிசை திலகம்' பிறந்த தினம் இன்று!