PUBLISHED ON : ஆக 19, 2024 12:00 AM

ஆகஸ்ட் 19, 1982
சென்னை வேப்பேரியில், ககுழி பாப்பு - சுனன்னா பாப்புவின் மகனாக, 1927 ஆகஸ்ட் 10ல் பிறந்தவர் மணாலி கல்லட் வைணு பாப்பு.
இவர், தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில், இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார். அப் போது, 10 மைல் துாரம் சைக்கிளில் சென்று, விஞ்ஞானி, சர் சி.வி.ராமனின் தொடர் உரையை கேட்டார். விஞ்ஞானிகளான கெல்வின், ரேலே, தாம்சன், மேக்ஸ்வெல் கண்டுபிடிப்புகளாலும், ஹோமி பாபாவின் அறிவியல் செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டார். அரசு உதவியுடன், அமெரிக்காவின், ஹார்வர்ட் பல்கலையில், பிஎச்.டி., படித்தார்.
தன் அறிவியல் கருத்துக்களால், விஞ்ஞானி ஹார்லோ ஷேப்லியை கவர்ந்தார். நுண்ணோக்கியால், புதிய வால் நட்சத்திரத்தை கண்டறிந்து, அறிவித்தார். வியாழன் கோளை சுற்றியுள்ள அடுக்குகளை கண்டறிந்தார். தாயகம் திரும்பி, வாரணாசி ஆய்வகத்துக்கு தலைமை தாங்கினார்.
மனோரா சிகரம், இலங்கையில் நுண்ணோக்கிகளை நிறுவி, முழு சூரிய குடும்பத்தையும் ஆய்வு செய்தார். நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்காக, ஜவ்வாது மலையின் காவலுாரை, வானியல் மையமாக்கி, துல்லியமான நுண்ணோக்கியை அமைத்தார். லட்சிய இளைஞர்களை வளர்த்த இவர், தன், 55வது வயதில், 1982ல், இதே நாளில், மாரடைப்பால் மறைந்தார்.நம் நாட்டின், நவீன வானியலின் தந்தை மறைந்த தினம் இன்று!

