PUBLISHED ON : ஆக 12, 2024 12:00 AM

ஆகஸ்ட் 12, 1953
மதுரை, கோரிப்பாளையத்தில், மருதப்பன் - ருக்மணி தம்பதியின் மகனாக, 1953ல், இதே நாளில் பிறந்தவர் டிராட்ஸ்கி மருது.
பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பாசமலர் உள்ளிட்ட படங்களின் வசன கர்த்தாவான, எம்.எஸ்.சோலைமலையின் பேரனான இவருக்கு, சிறு வயதிலேயே மதுரையின் திருவிழாக்களும், நாட்டுப்புற கலைகளும், ஓவியம் மீது ஆர்வத்தை ஊட்டின. மதுரையில் பள்ளிப்படிப்பை முடித்து, சென்னை கவின் கலை கல்லுாரியில் ஓவியம் கற்று, டில்லியில் கல் அச்சு, உருப்பொறித்தல் உள்ளிட்டவற்றில் பயிற்சி பெற்றார்.
ஓவியர் ஆதிமூலத்துடன் இணைந்து, வெகுஜன இதழ்களில், சமகால ஓவிய மரபை புகுத்தினார். சென்னை நெசவாளர் சேவை மையத்தின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். ஓவியம் வரைவதற்கு கணினியை பயன்படுத்தி, தொழில்நுட்பத்திலும் சாதித்தார். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் ஊர்வலக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
தேவதை, சாசனம், ராஜகாளியம்மன், பாளையத்தம்மன் உள்ளிட்ட படங்களின் கலை இயக்குனராகவும், பேராண்மை, வாழ்த்துகள் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் இருந்தார். 'கோடுகளும் வார்த்தைகளும், லைன் அண்டு சர்க்கிள்' உள்ளிட்ட நுால்களை எழுதி உள்ளார். 'கலைமாமணி, தமிழ் தேசிய புகழொளி' உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழகம் தந்த பிரபல ஓவியரின், 71வது பிறந்த தினம் இன்று!