PUBLISHED ON : அக் 14, 2024 12:00 AM

அக்., 14, 1943
சென்னை மயிலாப்பூரில், சுவாமிநாதன் - சரோஜினி தம்பதியின் மகனாக, 1943ல், இதே நாளில் பிறந்தவர், எஸ்.ரஜத். ரஜத் என்றால், சமஸ்கிருத மொழியில், 'வெள்ளி' என்று பொருள்.
இவர், சென்னை, தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியிலும், ஏ.எம்.ஜெயின் கல்லுாரியிலும் படித்தார். என்.சி.சி., மாணவரான இவர், பட்டப்படிப்பை முடித்து ராணுவ அதிகாரியாக தேர்வானார். 'இ.ஐ.டி., பாரி' நிறுவனத்தில் விற்பனை வரி நிபுணராக பணியாற்றினார். சென்னை வர்த்தக சங்க வல்லுனர் குழு தலைவராகவும், தமிழக விற்பனை வரி ஆலோசனை குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். 'துளசிதாசர்' நுாலை தமிழில் மொழிபெயர்த்தார்.
'தினமலர் - வாரமலர்' இதழில், 'எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்' உள்ளிட்ட கட்டுரைகளையும், பிரபலங்களின் பேட்டிகளையும், 120 வாரங்கள் தொடராக எழுதினார். 'குமுதம்' இதழில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே பேசுவது போல, 'மனம் திறந்து சொல்கிறேன்' எனும் தொடரை எழுதி பிரபலமானார். 2,000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய இவர், 'மணிமேகலை பிரசுரம் - ஒய் கிரஷ்' மென்பொருள் நிறுவனத்தின், 'இதழியல் அரசு' உள்ளிட்ட விருதுகளையும், பல ரொக்கப் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
தன் சந்திப்புகளை, எழுத்துகளாக்கிய எழுத்தாளரின், 81வது பிறந்த தினம் இன்று!