PUBLISHED ON : அக் 17, 2024 12:00 AM

அக்டோபர் 17, 1981
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில், சாத்தப்ப செட்டியார் - விசாலாட்சி தம்பதியின் மகனாக, 1927, ஜூன் 24ல் பிறந்தவர் முத்தையா எனும் கண்ணதாசன்.
இவர், சிறுகூடல்பட்டி, அமராவதிபுதுாரில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். இவர் எழுதிய கதை, கவிதைகள் பல இதழ்களில் வெளியாகின. 'திருமகள்' பத்திரிகையில் பணியில் சேர, 'கண்ணதாசன்' என்ற பெயரை சூட்டிக்கொள்ளவே, அதுவே நிலைத்தது.
பல இதழ்களை நடத்திய இவர், 'மாடர்ன் தியேட்டர்ஸ்' கதை இலாகாவில் சேர்ந்து, பின், 'ஜூபிடர் பிக்சர்ஸ்'க்கு பாடல் எழுதத் துவங்கினார்.அண்ணாதுரையால், தி.மு.க.,வில் சேர்ந்து, கருணாநிதியால் விலகினார்.
கதை, வசனம், தயாரிப்பு என அனைத்திலும்ஈடுபட்ட இவர், 'சேரமான் காதலி' என்ற காவியத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.'அச்சம் என்பது மடமையடா, கனிய கனிய மழலை பேசும், உலகம் பிறந்தது எனக்காக, நாணமோ, நல்லதொரு குடும்பம், கண்ணே கலைமானே' உள்ளிட்ட பாடல்களால் இன்றும் நிலைத்திருக்கும் இவர், 1981ல் தன் 54வது வயதில்இதே நாளில் காலமானார்.
எளிய மொழியில், வலிய கருத்துகளை கூறிய, 'கவியரசர்' மறைந்த தினம் இன்று!